வல்லம், சன. 17- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக பொங்கல் 2026 உன்னத் பாரத் அபியான் மற்றும் பெரியார் புரா கிராமங்களான புதுக்குடி, ஆச்சாம்பட்டி பாளையப்பட்டி தெற்கு, இராயமுண்டான்பட்டி, மருதக்குடி, அய்யாசாமிப்பட்டி மற்றும் சென்னம்பட்டி ஆகிய இடங்களில் 12.01.2026 அன்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை சார்பாக உள்ளுர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஒன்பது கருப்பொருள்கள் நிர்ணயித்து கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் மூலம் நிறைவேற்ற முற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கொண்டு இந்த அய்ந்து நாள் கிராமிய முகாமும் ஆறு கருப்பொருள்களை மய்யமாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளாக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினர்.
சென்னம்பட்டி
மகளிர் நேய கிராம ஊராட்சி
மகளிர் நேய கிராம ஊராட்சி
சென்னம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் மகளிர் நேய பொங்கல் விழா – பாரம்பரியமும் சமூக ஒற்றுமையும் சங்கமம் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு புலம் சார்பில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொது மக்களின் பங்கேற்போடு நடைபெற்றது. பெண்களின் பங்கு, சமூக ஒற்றுமை மற்றும் தமிழர் பாரம்பரியத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் விழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், திறன் மேம்பாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், குழந்தைகள் மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்ஸ்டாலின் தலைமை வகித்தார். பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இரா.மல்லிகா பொங்கல் வைத்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
கட்டட எழிற்கலைத் துறை
குழந்தைகள் நேய ஊராட்சி
குழந்தைகள் நேய ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரத்திற்குட்பட்ட தெற்குப் பாளையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந் தைகள் நேய ஊராட்சி என்ற கருப் பொருளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தெற்குப் பாளையப் பட்டி ரெ.கமலதாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கார்த்தியாயினி தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா, கலந்து கொண்டு பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பொங்கல் விழா வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவின் முக்கிய அம்சமாக குழந்தைகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் பாரம்பரிய உணவு வகைகளின் மூலம் பொங்கல் சமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் குழு செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே ஒற்றுமை தன்னம்பிக்கை மற்றும் சமூக விழிப்புணர்வு வளர்க்கப்பட்டது.
இந்த குழந்தைகள் நேயப் பொங்கல் விழா, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சமூக முன்மாதிரி நிகழ்வாக அமைந்தது.
புதுக்குடி ‘நீரில் தன்னிநிறைவு நிறைந்த ஊராட்சி’
புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ‘நீரில் தன்னிநிறைவு அடைந்த ஊராட்சி’ என்ற கருப்பொரு ளில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை அறிவியல் மற்றும் மனிதவளப் புலம் சார்பில், கிராம மக்களின் பங்கேற்போடு நடைபெற்றது.
நீர்வள பாதுகாப்பு, மழைநீர் சேமிப்பு, நீர் சிக்கனப் பயன்பாடு மற்றும் தமிழர் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் விழா அமைந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சந்திரஜோதி வரவேற்புரை நிகழ்ந்தினார். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா பங்கேற்று நீர் வளம் பாதுகாப்பின் அவசியம், சமூக பொறுப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாணவர்களின் படைப்பாற்றல், அறிவுத் திறன் மற்றும் குழு மனப்பான் மையை வளர்க்கும் வகையில் பல்வேறு துறைகள் சார்பில் போட்டிகள் நடைபெற்றது. நுடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அறிவியல் மற்றும் மனிதவளப் புலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இராயமுண்டான்பட்டி
இராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மையியல் புலம் சார்பாக கிராம மக்கள் பங்கேற் போடு பொங்கல் விழா நடைபெற்றது.
இராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நட்பு பொங்கல் விழா 12 சனவரி 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வணிக மேலாண்மைத்துறை சார்பில் பள்ளி நிர்வாகம் மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு கலைநிகழ்ச்சிகளின் மூலம் பசுமையான சூழல் எதிர்கால தலைமுறைக்கு நலனைக் கொடுக்கும், சுத்தமான சூழல் மனித ஆரோக்கியத்திற்கு அவசியம், மரங்களை நடுவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முக்கியமான வழி, குப்பைகளை சரியாக பிரித்து அகற்ற வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும், நீர், காற்று, மண் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்த வேண்டும், இயற்கையை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இரா.மல்லிகா மற்றும் துறை தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அய்யாசாமிப்பட்டி மற்றும் மருதக்குடி – நல வாழ்வு கிராம ஊராட்சி
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வணிகவியல் புலம் சார்பில், சமூக நலச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மருதக்குடி மற்றும் அய்யாசாமிபட்டி கிராமங்களில் நல வாழ்வு கிராம ஊராட்சி என்ற கருப்பொருளோடு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் நலனை கொண்டாடுதல் என்ற தலைப்பில் பொங்கல் விழா சிறப்பாகக் நடைபெற்றது
இந்த விழாவில் இரு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டு பொங்கல் சமைத்து கோலப்போட்டி, கிராமிய விளையாட்டுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய அம்சமாக, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளின் அவசியம் தனிநபர் சுகாதாரம், தூய்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆரோக்கியமான ஊராட்சியை உருவாக்குவதில் பொங்கல் போன்ற பாரம்பரிய விழாக்களின் பங்கு குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
ஆச்சாம்பட்டி – வறுமை இல்லா மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் கொண்ட கிராம ஊராட்சி
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பொறியியல் புலம் சார்பில் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் – வறுமை இல்லா மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் கொண்ட கிராம ஊராட்சி என்ற கருப்பொருளோடு பொங்கல் விழா சிறப்பாகக் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் இன்பராஜ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா பள்ளி மாணவ, மாணவியர்களோடு இணைந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி பரிசுகளை வழங்கினர்.
விழாவின் இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இத்தகைய சமூக சார்ந்த முயற்சிகள் கிராமப்புற மக்களின் நலனையும், தமிழர் பாரம்பரிய கலாச்சாரத்தின் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதாக கிராம மக்கள் பாராட்டினர்.
இந்த பொங்கல் விழா சமூக நலன் காக்கும் பெருவிழாவாக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெரியார் புரா, உன்னத் பாரத் அபியான் கிராம பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று திருவிழாவாக கொண்டாடினர். கருப்பொருளோடு நடைபெற்ற இந்த கிராமிய பொங்கல் விழாவை கிராம பொதுமக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
முனைவர் பொ.விஜயலெட்சுமி விரிவாக்க பணிக்களுக்கான ஒருங்கிணைப்பாளர், பேரா. வெ.சுகுமாறன், உயிரியல் தொழில்நுட்ப துறை மற்றும் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், இயக்குநர் (பொ), பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தனர்.
