மதுரை,ஜன.13- தடையை மீறி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிடச் சென்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பார்க்க முடியும்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று (12.1.2026) மாலை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், பாஜக நிர்வாகிகள் சிவபிரபாகரன், அரிகரன் ஆகியோரும் உடன் சென்றனர்.
மலைக்குச் சென்ற எச்.ராஜா, கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகத்தால் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டதா, இல்லையா? என்பதை பார்க்க வேண்டும் என்றார். ஆனால், காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் காவல் துறையினருடன் எச்.ராஜாவும், பாஜக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்கள் தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்குச் சென்றனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக மலை அடிவாரத்துத்துக்கு அழைத்து வந்தனர். தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்குச் சென்றதாக எச்.ராஜா உள்ளிட்ட 12 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
என்று தீரும் இந்த வன்கொடுமை?
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
சென்னை, ஜன.13- தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை, இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதாகவும், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடைய செய்துள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
