போன ஜென்மப் பாவம் இப்பிறவியில் அனுபவிக்கிறான் என்பதை மாற்றி
மரண வாசலில் இருந்தவர்களுக்கு வாழ்வளித்த மருத்துவப் புரட்சி இன்று (11.01.1922)
| ஒ |
வ்வொரு ஆண்டும் ஜனவரி 11-ஆம் தேதி மருத்துவ உலகில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. 1922-ஆம் ஆண்டு இதே நாளில் தான், மனித வரலாற்றில் முதல்முறையாக நீரிழிவு நோய்க்கான சிகிச்சையாக இன்சுலின் (Insulin) பயன்படுத்தப்பட்டது.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘வகை 1 நீரிழிவு’ (Type 1 Diabetes) என்பது ஒரு கடவுள் கொடுத்த சாபமாகவே பார்க்கப்பட்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எலும்பும் தோலுமாக மெலிந்து, சில வாரங்களிலேயே உயிரிழக்கும் அவலநிலை இருந்தது.
1921-இல் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஃபிரடெரிக் பாண்டிங் (Frederick Banting) மற்றும் அவரது மாணவர் சார்லஸ் பெஸ்ட் (Charles Best) ஆகியோர் நாய் ஒன்றின் கணையத்திலிருந்து இன்சுலினைப் பிரித்தெடுத்தனர். இவர்களுக்கு ஜே.ஜே.ஆர். மேக்லியோட் மற்றும் ஜேம்ஸ் கோலிப் ஆகிய அறிவியலாளர்கள் உறுதுணையாக இருந்தனர்.
முதல் மருத்துவப் பயனாளி லியோனார்ட் தாம்சன்: ஜனவரி 11, 1922 அன்று, 14 வயதான லியோனார்ட் தாம்சன் (Leonard Thompson) என்ற சிறுவனுக்கு முதன்முதலில் இன்சுலின் செலுத்தப்பட்டது. அப்போது அவன் வெறும் 29 கிலோ எடையுடன், சர்க்கரை நோயின் உச்சகட்ட பாதிப்பால் (Ketoacidosis) சாகும் தருவாயில் இருந்தான்.
முதல் முயற்சி: ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட இன்சுலின் தூய்மை யற்றதாக இருந்ததால் சிறுவனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டது.
வெற்றி: ஜேம்ஸ் கோலிப் இன்சுலினை மேலும் தூய்மைப் படுத்தினார். ஜனவரி 23 அன்று மீண்டும் செலுத்தப்பட்டபோது, சிறுவனின் குருதிச் (இரத்தச்) சர்க்கரை அளவு வியத்தகு முறையில் குறைந்து அவன் உயிர் பிழைத்தான்.
இன்சுலின் செயல்படும் விதம் (Scientific Mechanism): இன்சுலின் என்பது கணையத்தில் உள்ள பீட்டா செல்களால் (Beta cells) சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இதன் முக்கிய பணிகள்: குளுக்கோஸ் கடத்தல்: குருதி (இரத்தத்தில்) உள்ள குளுக்கோஸை செல்கள் தங்களுக்குள் இழுத்து ஆற்றலாக மாற்ற இன்சுலின் ஒரு ‘திறவுகோல்’ போல செயல்படுகிறது.
கிளைகோஜன் சேமிப்பு: உபரி குளுக்கோஸை கல்லீரலில் கிளைகோஜனாகச் சேமிக்க உதவுகிறது.
நோபல் பரிசும் தியாகமும்: இந்த கண்டுபிடிப்புக்காக 1923-ஆம் ஆண்டு பாண்டிங் மற்றும் மேக்லியோட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பாண்டிங் தனது பரிசுத் தொகையை பெஸ்டுடன் பகிர்ந்து கொண்டார். மனித நேயத்தின் உச்சமாக, இன்சுலினுக்கான காப்புரிமையை (Patent) வெறும் 1 டாலருக்கு அவர்கள் விற்றனர். “இன்சுலின் எனக்குச் சொந்தமானது அல்ல, அது உலகிற்குச் சொந்தமானது” என்பதே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது.
இன்று கோடிக்கணக்கான நீரிழிவு மருத்துவ பயனாளி இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றால், அதற்கு 1922-இல் நடந்த இந்த மருத்துவப் பரிசோதனையே அடித்தளம். ஒரு காலத்தில் மரணத்தை எதிர்நோக்கியிருந்த நோயை, இன்று ஒரு மேலாண்மை செய்யக்கூடிய (Manageable condition) நோயாக மாற்றியது இன்சுலின் என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பால் கடவுளின் சாபம் போன ஜென்ம வினை என்பவை விரட்டியடிக்கப்பட்டது
