‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பது மட்டுமல்ல; ‘‘அனைவரையும் அரவணைத்தும்’’ என்பதுதான் திராவிடம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை மாநகரில் கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!

மதுரை, ஜன.11 ‘‘ஜாதிகளால் பிரிந்துகிடந்த நம்மை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இணைத்ததுதான் திராவிடம்” என்று மதுரை மாநகர் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சிகரமாக உரையாற்றி னார்.

கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கிடையே (10.1.2026) இரண்டாம் கூட்டம் நடைபெறும் மதுரை நகருக்கு வருகை தந்த கழகத் தலைவருக்கு மிகச்சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முன்னதாகவே மாவட்ட மகளிரணித் தலைவர் தி.அஜிதா தலைமையில் செல்லூர் 60 அடி சாலை அருகில், திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் சீ.தேவராஜ பாண்டி யனின் வரவேற்புரையுடன் தொடங்கி நடை பெற்றுக்கொண்டிருந்தது. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உள்ளிட்டோர் பேசி முடித்திருந்தனர். ஆசிரியர் வருகையின் போது, தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் உரையாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம் ஒருங்கிணைப்பு செய்து சிறப்பித்தார். மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் செல்லூர் இரா.திருப்பதி, மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் நா.கணேசன், தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வேலுசாமி,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், பயண ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் மா.கணேசன், ம.தி.மு.க. தொழிற் சங்க மாநில இணைப் பொதுச்செயலாளர் மகபூப்ஜான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் இராம. வைரமுத்து, இந்திய யூனியன் முசுலீம் லீக் மாவட்டத் தலைவர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் மு.சித்தார்த்தன் படம் திறந்து – மரியாதை!

தொடர்ந்து, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் மரணமடைந்த கழக மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் மு.சித்தார்த்தன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து, மிகுந்த இறுக்கத்தோடு மாலை அணிவித்து, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம் அவர்கள் ஒருங்கிணைப்பில், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை வழங்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

 தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையை, தன்னருகே அமர்ந்துள்ள சட்டபேரவை உறுப்பினர் மாண்புமிகு தளபதி பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை விவரித்தார். அதாவது, “இவ்வளவு நேரம் ‘பனி’யில் அமர்ந்திருக்கிறீர்களே, உங்கள் உடம்புக்கு ஏதாவது வந்து விடப்போகிறது’’ என்று பரிவோடு கேட்டதை நினைவுபடுத்தி, ‘‘நான் செய்ய வேண்டிய ‘பணி’கள் ஏராளம் இருக்கின்றன. எதிர்க்கட்சி அணிகள் நம்மை அந்தப் ‘பணி’ செய்யத் தூண்டுகின்றன. காரணம் அது நம்மை பீடித்திருக்கின்ற ‘பிணி’” என்றெல்லாம் கோர்வையாகக் கூறி, மக்களை மட்டுமல்ல, தன் மீது பரிவு காட்டிய சட்டப்பேரவை உறுப்பினரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து விட்டார். அத்துடன், தந்தை பெரியார் – குன்றக்குடி அடிகளார் இருவரையும் நினைவூட்டி, இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இடம்பெற்ற, “குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்” என்ற திருக்குறளைக் கூறி தன்னுடைய ‘பணி’யும் அப்படிப்பட்டதுதான் என்று அதை முடித்தார். தொடர்ந்து பெரியார் உலகம் நிதி கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நாங்கள் பேசுவதற்கு
அதில் ஆதாரங்கள் இருக்கின்றன!

பிறகு, ‘‘ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்?” ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வினர் மீது ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசவா? என்று கேள்வி கேட்டு, “நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டுமானால், இங்கே புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் பேசுவதற்கு அதில் ஆதாரங்கள் இருக்கின்றன” என்று கூறிவிட்டு,
‘‘ஆர்.எஸ்.எஸ். சின் கொள்கை என்ன? மனுதர்மம். அது என்ன சொல்கிறது? வர்ண தர்மப்படி ஜாதி பேதங்கள் இருக்கின்றன என்கிறது. அது நமது பண்பாட்டுக்கு உரியதா? கிடையாது” என்று கேள்வி பதில்களாக விளக்கினார். தொடர்ந்து, நமது பண்பாடு என்ன என்பதை விவரித்தார். “யாதும் ஊரே! யாவரும் கேளீர்!, பிறப்பொக்கும் எல்லார்க்கும், அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் நமது பண்பாடு” என்று அடுக்கினார். மேலும் அவர், “இதற்கு நேர் எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்.” என்றார். பின்னர், “பதவிக்காக இருக்கும் கூட்டணி எது? கொள்கைக்காக இருக்கும் கூட்டணி எது?” என்று விளக்கிவிட்டு, “ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்காத நாங்கள் எந்தப்பக்கம்?” என்று கேட்டு, ”தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்” பக்கம் என்று மக்களின் மனங்களில் பதியமிட்டார்.

திராவிடர் இயக்கத்தின் கொள்கையை விளக்க முற்பட்டவர், “அனைவருக்கும் அனைத்தும் என்பதல்ல; அனைவரையும் அரவணைத்தும்” என்று திராவிடர் இயக்கத்தின் கொள்கையை இன்னமும் ஆழமாக ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டார். மேலும் அவர், இந்திய அரசமைப்புச் சட்டம் மனுதர்மத்திற்கு எப்படியெல்லாம் எதிராக இருக்கிறது என்பதை விளக்கிவிட்டு, “அதனால் இந்த மனுதர்மத்திற்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் இடையில்தான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறி, நடப்பது அரசியல் போராட்டம் அல்ல, பண்பாட்டுப் போராட்டம் என்பதை நிறுவினார். அடுத்து, ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே கடவுள்; ஒரே மதம் என்ற ஒற்றைப் பண்பாட்டை; அதன் கேட்டை விவரித்த அவர், “இதைத் தட்டிக்கேட்பதுதான் திராவிடம்!” என்றார்.

ஒன்றிய அரசின் கடன் வரம்பு மீறி போய்விட்டதை ஏன் கேள்வி கேட்பதில்லை!

தமிழ்நாடு அரசின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் கடன் சுமையைப் பற்றி அவதூறு செய்வதற்கு ஒரு பொருளாதார மாணவன் என்கின்ற முறையில் பதில் சொல்கிறேன் என்று தனி நபர் பொருளாதாரம் என்றால் என்ன? அரசுப் பொருளாதாரம் என்றால் என்ன? அரசின் கடன் கட்டுக்குள் இருக்க வேண்டிய வரம்பு என்ன? அந்த வரம்புக்குள் இருக்கிறதா? இல்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, பதிலும் சொல்லி, “இப்படி பேசுகிறவர்கள் ஒன்றிய அரசின் கடன் வரம்பு மீறி போய்விட்டதை ஏன் கேள்வி கேட்பதில்லை” என்று பதிலடி கொடுத்தார். இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்பதை நிறுவிய பிறகு, “வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற தேர்தலில் தி.மு.க. தலைமையில் இருக்கின்ற இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது. நீங்களும் அதற்கு அணியமாகிவிட்டீர்கள். அதற்கு முன்பு உங்கள் வாக்குகள் சரியாக இருக்கின்றனவா என்பதை நீங்களே தனிப்பட்ட முறையில் சரிபாருங்கள். தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று சொல்வது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக; உங்கள் சந்ததிகளின் நிம்மதியான எதிர்காலத்துக்காக” என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார்.

ரூ. 11,100/- க்கு இயக்கப்
புத்தகங்கள் விற்பனை

நிறைவாக தோழர் பெ.தனசேகர் நன்றி கூறி, நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். நிகழ்ச்சி யில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன், மதுரை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பால்ராஜ், செயலாளர் பழனிவேல்ராஜன், செல்லூர் இளங்கோ, மாவட்டத் துணைத் தலைவர் பவுன்ராசு, துணைச் செயலாளர் தனுஷ்கோடி, வேல்துரை, கமல்சந்திரன், சு.மணிராஜ், பெரி.காளியப்பன், மோதிலால், அழகுபாண்டி, போட்டோ ராதா, ஜா.எபிநேசர், பேக்கரி கண்ணன் மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கருத்துகளை செவிமடுத்துச் சென்றனர் என்பதும் இரண்டு கூட்டங்களிலும் சேர்த்து, ரூபாய் 11,100/- க்கு இயக்கப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தகக்து. ஆழ்ந்த கருத்துரைகளும், புத்தக விற்பனையும் நல்ல விளைச்சலை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை. புத்தக விற்பனையை ரகுராமன், ஓட்டுநர் அருள்மணி ஆகியோர் ஒருங்கிணைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *