சென்னை, ஜன.10 ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் பெண் ணிடம் இருந்து பறித்த 20 லட்சம் ரூபாயை, 14 நாட்களில் சைபர் கிரைம் குற்றப் பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை, அண்ணாமலை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் லதா, 54. இவர், டிச., 23ல் அண்ணாநகர் சைபர் குற்றப் பிரிவு காவல்துறையில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதாவது: என் கைப்பேசி எண்ணிற்கு, டிச., 20ஆம் தேதி அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் ‘ஆன்டி டெரரிஸ்ட் ஸ்குவாட்’ சென்னை காவல்துறையினர் எனவும், என் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், காலை 11:00 மணிக்கு கைது செய்வதாக கூறினார்.
ஆதார் எண்ணை வைத்து பயங்கரவாதிகளுக்கு பணபரிமாற்றம் செய்திருப்பதாக கூறி, என்னையும் கணவரையும் – – ‘காணொலி அழைப்பு’ வாயிலாக மிரட்டினர். இதையடுத்து, எங்களது வங்கி கணக்கை ஆய்வு செய்வதாகக் கூறியதால், அதை நம்பி, டிச., 23இல் தேதி அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு 20 லட்சம் ரூபாயை அனுப்பினேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்ததில், லதா அனுப்பிய பணம் விசாகப் பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்றது தெரிந்தது. உடனடியாக, நீதிபதி பரிந்துரைப்படி, வங்கி கணக்கை முடக்கிய காவல்துறையினர் ஜன., 7ஆம் தேதி, பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சைபர் குற்றவாளி களை அண்ணா நகர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
