404 வாக்குறுதிகளை ‘திராவிட மாடல்’ அரசு நிறைவேற்றியதாக பெருமிதம்
திருவள்ளூர், ஜன.10 தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த மக்களின் கருத்துகள், அவர்களது எதிர்கால கனவுகள், தேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘உங்க கனவ சொல்லுங்க’
தமிழ்நாடு அரசால் கடந்த 5 ஆண்டு களில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களில் பயனடைந்தவர்களின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப் படுத்தவும், அந்த திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து மக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளைக் கண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்த படி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் நேற்று (9.1.2026) காலை நடைபெற்ற விழாவில், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் சிலர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்று, தங்களுக்கு பலனளித்த அரசுத் திட்டங்கள் குறித்து பேசி னர். அப்போது, வீட்டுமனை பட்டா, மினி பேருந்து வசதி, உயர்மட்ட பாலம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். பட்டியலின, பழங்குடியின மக்களைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மானியத் துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த கனவுகள் நிறைவேற நடவ டிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார். தொடர்ந்து, அவர் பேசியதாவது:
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு என்பது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அளித்தேன். அதையெல்லாம், தற்போது நிறைவேற்றி வருகிறோம். பொருளாதாரத்தை உயர்த்துவதாக கூறினேன். இன்று தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது.
பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர் என அனைவருக்கும் பார்த்துப் பார்த்து பல திட்டங்களை திமுகவின் இந்த சமூகநீதி அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு எதிராக மட்டுமே செயல்படும் பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றும் சட்டங் களுக்கு முட்டுக்கட்டை போடு வதையே முதல் வேலையாக வைத்துள்ளார்.
404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
இதையெல்லாம் மீறி, மக்கள் எங்களுடன் இருப்பதால், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.
மக்களின் தேவையை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசிடம் மக்கள் தங்களது கனவுகள், தேவைகளை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம். நேற்று (9.1.2026) முதல் 30 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களையும் அரசின் சார்பில் தன்னார்வலர்கள் சந்திப்பார்கள். அவர்களிடம் உங்களின் கனவுகளை சொல்லுங்கள். அதை அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள். அதை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன். 2030-ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வை கொண்டதாக அந்த திட்டம் இருக்கும்.
இந்த கனவுகளை எல்லாம் நான் நிறைவேற்றிக் காட்டும்போது, கிராமப்புற, நகர்ப்புற உள் கட்டமைப்புகள், மொழி, பண்பாட்டு வெற்றிகள், கல்வி, திறன் மேம்பாடு, சமூக வளர்ச்சி, விவசாயம், மீன்பிடித் தொழில், வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் ஆகிய 7 துறைகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கும்.
‘‘மக்களிடம் செல். அவர்களோடு வாழ். அவர்களை நேசி. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள். அவர்களுக்குத் தெரிந்ததில் இருந்து தொடங்கு. அவர்களிடம் இருப்பதில் இருந்து கட்டுமானம் செய். பணி முடிந்த பிறகு அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்திவிட்டுத் திரும்பி வா’’ என்றார் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. அவர் சொன்னதை எல்லாம், என் இதயத்தில் வைத்து செயல்படக் கூடியவன் நான்.
அதனால்தான், தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக, திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆட்சி என்பது முதலமைச்சரான எனது கனவுகளை மட்டுமல்ல, மக்கள் எல்லோருடைய கனவுகளையும் நிறைவேற்றுவதற்கான கருவி. மக்களின் கனவுகள் நிறைவேறினால், தமிழ்நாடு முன்னேறும். வளர்ச்சி அடையும்.
‘சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு மிக்கதாக தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்டும். சமூகநீதி நிலைபெற வேண்டும். ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். எல்லோருக்குமான ஆட்சி அமைய வேண்டும்’ என்று தந்தை பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோர் கனவு கண்டனர். அதனால்தான் இன்று தமிழ்நாடு எந்த ஆதிக்கத்துக்கும் தலைகுனியாமல், வெல்வோம் ஒன்றாக என்று, மண், மொழி, மானம் காக்க நிமிர்ந்து நிற்கிறது.
இப்போது நாம் அடுத்தகட்ட கனவை காண வேண்டிய நேரம். மக்களின் கனவுகளை, கோரிக்கைகளை திட்டங்களாக உருவாக்கி, மக்கள் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பேன். தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக உயர்த்துவேன். இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தரக்கூடிய வாக்குறுதி. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய்த் துறை செயலர் அமுதா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
