திருநெல்வேலி, ஜன.9 திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, பூஜை செய்வதாகக் கூறி பெண்ணை மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற கும்பலைத் தேவர்குளம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தேவர்குளம் கூவாச்சி பட்டி, இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். கடந்த 6 ஆம் தேதியன்று இவரது வீட்டிற்குக் காவி உடை அணிந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்துள்ள னர்.
பூஜை செய்வது போல…
‘‘உங்கள் வீட்டில் மிகுந்த கஷ்டம் உள்ளது, அதற்குப் பரிகாரமாகப் பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்’’ என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி பழனியம்மாள் அவர்களை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். உள்ளே நுழைந்த அந்த நபர்கள், பூஜை செய்வது போல நடித்துத் திடீரென பழனியம்மாளை மிரட்டியுள்ளனர். பின்னர், பூஜை அறையில் இருந்த விளக்கில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி ருத்ராட்ச செயினைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காவல்துறை விசாரணை– கைது!
பாதிக்கப்பட்ட பழனியம்மாள் இது குறித்து தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து தீவிரப் புலன் விசாரணையில் இறங்கினார். விசா ரணையில், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த 4 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
காவல்துறையினருக்குப் பாராட்டு!
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புகார் அளித்த குறுகிய காலத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பிரசண்ணகுமார் அவர்கள் நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
