சென்னை, ஜன.9 வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (ஜன. 9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புயல் சின்னம்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஜனவரி 9 – 11: கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும் இடி, மின் னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஜனவரி 12: தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 13: தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (ஜன. 9): திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜன.10): திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
காற்றின் வேகம்: தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
உருவாகும் புயல், இந்த ஆண்டின் முதல் புயலாகும். இந்த புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது.
