தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை
ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணில், பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கை முழக்கம்! தேனீக்களை விஞ்சிய உழைப்பைத் தந்த மும்பை தோழர்களுக்குப் பாராட்டுகள் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மராத்திய மண்டலத்தின் இன்றைய தலை முறையான மும்பை மாநகரத்தில் பாண்டூப் பகுதியில் உள்ள திராவிட இயக்க பழைய பொறுப்பாளர்களில் ஒருவரான அய்யா தேவதாசன் அவர்கள் நிறுவிய, உயர்கல்விக் கூடங்கள் உள்பட பல அமைந்துள்ள தேவதாசன் கல்வி வளாக அரங்கத்தில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு ஜனவரி 3, 4 ஆகிய இரு நாள்களிலும் மிகச் சிறப்பாக நடந்தன.
மும்பையில் பரவிய
சமூகநீதி இயக்கம்!
150 ஆண்டுகளுக்குமுன்பு, அங்கே ஒரு ‘சுயமரியாதை இயக்கம்’ – ‘‘சத்திய சோதக் சமாஜ்’’ என்ற பெயரால், புனே பகுதியைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூக அறிஞர் ஜோதிராவ் பூலே அவர்களாலும், அவரது இணையர் திருமதி சாவித்திரிபாய் பூலே அவர்களாலும், இன்னும் அவரது பல சீடர்களாலும், வேளாண்மையாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்களாலும் இணைந்து தொடங்கப்பட்டது. நூற்றுக்கு 3 பேராக இருந்தும், அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்தும் நிலையை எதிர்த்துப் பெரும் எதிர் முழக்கம் செய்து, சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சுதந்திரத்தையும், தங்களுடைய உரிமைகளையும் வென்றெடுக்க அந்த இயக்கம் பரவியது.
அவ்வியக்கத்தின் தேவை, அதன் கொள்கை களைக் கண்டு வெகுண்டெழுந்த பார்ப்பனர்கள், அவ்வியக்கத்தை ஒழிக்க எடுத்த முயற்சிகளைத் தடுத்து, கோல்காப்பூர் சமஸ்தானத்தின் மன்ன ரான சத்ரபதி சாகு மகராஜ் அவர்கள், சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார். எப்படி நீதிக்கட்சி ஆட்சியை குழிதோண்டிப் புதைத்துவிட்டோம் என்ற ஆரியத்தின் ஆணவச் சிரிப்பிற்கு எதிராக வெற்றி காணப்பட்டதோ அதுபோன்று, சத்ர பதி சாகு மன்னரின் ஆட்சி, அங்கு பார்ப்பன ஆதிக்கக் கொடி பறக்கவிடாமல், அதை இறக்கிக் காட்டும் எதிர்நீச்சல் பணியில் ஈடு பட்டு, பெரு வெற்றியைக் கண்டதோடு, அவ்வியக்கத்தினை இதர பகுதிகளுக்கும் பரவும்படி முன்னுதாரணமான சமூகநீதி மாடல் ஆட்சியாகத் தனது ஆட்சியை அமைத்து, வென்று காட்டி, மக்களோடு மன்னராகவும், மன்னரோடு மக்களாகவும் என ஒருவராக உயர்ந்து, புதிய வரலாற்றை உருவாக்கி வாகை சூடினார் அன்று!
இந்திய வரலாற்றில் 1902 இல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு ஆணை – அவரது சமஸ்தானத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர்!!
சுயமரியாதை உணர்வுக் கொடியேற்றி வெற்றி கண்டார்!
‘‘இவர் சத்திரியர் அல்லர்; எனவே, அரசர் பதவியேற்கும் போது கூறும் வடமொழி வாழ்த்தினைக் கூறாது, சூத்திரர்களுக்கான மற்றொன்றைத்தான் கூற முடியும்’’ என்று பார்ப்பன வேத நெறியாளர்கள் கூற, வெகுண்டெழுந்த அவர், அவர்களை நீக்கி, புதியவர்களுக்குப் பொறுப்புத் தந்து, அந்தப் பார்ப்பனத் திமிராளிகளுக்கு முன்பு தரப்பட்ட அரசு நிலங்களைக் கையகப்படுத்த உத்தரவிட்டு, அவர்களை வழிக்குக் கொணர்ந்து, பணிய வைத்து, தனது சுயமரியாதை உணர்வுக் கொடியேற்றி வெற்றி கண்டார் சாகு மன்னர்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களும் படிக்கும் வகையில், கல்விச் சாலைகள், உண்டு உறையுள் விடுதிகள், அரசியலில் பார்ப்பனரல்லாதாரான சமூகநீதி இவற்றை தனது ஆட்சியின் சிறப்பம்சங்களாக்கி, பார்ப்பனரின் அவதூறுகளை, அவலங்களை அலட்சியப்படுத்தி, வெற்றி கண்டவர் சாகு தமது ஆட்சியில்!
அறிஞர் அண்ணா எப்படி ‘‘நீதிக்கட்சி’’ என்ற திராவிட இயக்கத் தத்துவங்களுக்கு சட்ட வடிவம் தந்து, சமதர்ம ஆட்சியை மீண்டு(ம்) அமைத்தாரோ, அதேபோல, ஜோதிபாபூலேவின் சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் சமூகப் புரட்சிக் கொள்கைகளை சட்ட திட்டங்களாக்கி, அனைத்து மக்களும், குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இணைய, தோளனாகி, ஈடில்லா தோழனாகி, மக்களின் மன்னராகி, மக்களின் இதய சிம்மாசனத்தில் நீங்கா இடம்பெற்று, சமூகப் புரட்சியாளராகவும், சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு வழிகாட்டி வந்ததுடன் முன்னோடியாகவும் விளங்கினார். (இவ்வுண்மை வரலாற்றில் மறைக்கப்பட்டது). அதுபற்றி ஒரு தனிக் கட்டுரை விரைவில் வெளிவரவிருக்கிறது.
முப்பெரும் பாடங்களைப் போதித்தார், வென்றார்!
அந்த மண்ணில்தான் (சாகு மகராஜ் மண்ணில்) சமூகநீதிப் புரட்சியாளராக உலக அறிஞரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வந்து, அவரது கொள்கைச் சுடரை ஒடுக்கப்பட்ட மக்களிடையே, ‘‘கற்பி, ஒன்று சேர், போராடு’’ என்ற முப்பெரும் பாடங்களைப் போதித்தார், வென்றார்.
இங்கே ‘நீதிக்கட்சி’ என்ற பார்ப்பனரல்லாத திராவிடர் இயக்கம் (1916) 110 ஆவது ஆண்டு தொடங்குவது, சுயமரியாதை இயக்கம் (1925) அதன் நூறாண்டு நிறைவு விழா காணும் வகையில் தொடங்கி வெற்றி பெற்று வரு கின்றன.
இதனை கொள்கையளவில் எதிர்த்து, வலுவிழந்த வருணாசிரமத்தை, ஆரியத்தைப் பலப்படுத்தவே 1925 இல் ஜோதிபாபூலேவை எதிர்த்து, சித்பவன் உயர் பிரிவுப் பார்ப்பனர்கள் வெளிப்படையற்ற தொண்டுப் போர்வை – முகமூடி போர்த்திய ஆர்.எஸ்.எஸ். என்ற ஓர் ஆரிய ஸநாதன ஹிந்து இயக்கத்தினையும் தோற்றுவித்தனர்!
இரண்டு நாள் சிறப்புமிகு,
சீர்மிகு மாநாடு!
அதன் இரட்டை வேடத்தைக் கலைத்துக் காட்டும் பிரச்சாரப் பெரும்பணி திராவிடர் கழகத்திற்கு. போராட்டக் களத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியாய் தொடரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி, அரை நூற்றாண்டுகளுக்குமேல் தமிழ்நாட்டில் வலுவாக ஆல்போல் தழைத்து அருகுபோல வேரோடி வெற்றி (அரசியலிலும்) கண்டு வருகிறது. இவற்றை விளக்கியது – நினைவூட்டியது மும்பை ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு’’ என்ற இரண்டு நாள் சிறப்புமிகு, சீர்மிகு மாநாடு!
மும்மொழிகளில், தமிழ், ஆங்கிலம், மராத்தியத்தில் அந்தந்தப் பகுதியின், அந்தந்தப் பகுதி அறிஞர் பெருமக்கள், நீதித்துறை, நிர்வாகத் துறை முதலிய பல மராத்தியச் சிந்தனையாளர்கள், மண்ணின் மைந்தர்கள் பங்கேற்று, ஒரு புது உற்சாகத்தைப் பாய்ச்சியதை, நேரில் கண்டு மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், ஏராளமான மக்கள் காணொலிமூலம் பார்த்துப் பரவசம் அடைந்தனர். அனைவரும் மகிழ்ந்தனர்.
மூன்று மொழி அரங்கிலும், நாம், பங்கேற்று பெரியாரின் சுயமரியாதை, மராத்திய பழைய சுயமரியாதை வரலாற்றுச் சிந்தனைகளை எடுத்துரைத்து, மகிழ்ந்ததோடு, புதிய உற்சாக உத்வேகத்தையும் பெற்றோம்.
இரண்டு நாளில் கணிசமான மக்கள், கொள்கைப் போராளிகள் பங்கு பெற்றது, இதன் தனித்தன்மையான வெற்றியின் மற்றொரு முகம்!
தோழர்களுக்குப் பாராட்டுகள்!
இதற்காக மிகவும் கடுமையாக உழைத்து, மாநாடு வெற்றி பெற தேனீக்களை மிஞ்சும் உன்னத உழைப்பைத் தந்த தோழர்கள் மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், ‘பிரைட்’ உயர்நிலைப்பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் தேவதாசன், மும்பை தி.க. துணைத் தலைவர் இ.அந்தோணி, செயலாளர் ஜெ.வில்சன், பொருளாளர் பெரியார் பாலா, மும்பை தி.க. துணைச் செயலாளர் கண்ணன், தாராவி பகுதி இணைச் செயலாளர் மு.கணேசன், ம.தயாளன், அன்பழகன் பொற்கோ, திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் உள்பட அனைவரையும் பாராட்ட, நன்றி கூற வார்த்தைகளே இல்லை.
எமை எப்போதும் பெருமைப்படுத்தி உபசரிக்கும் எம் கொள்கைக் குடும்பத்தில் ஒருவரான திரு.அன்பழகன் அய்.ஏ.எஸ். அவர்களின் வரவேற்பு இப்போதும் கிடைத்தது!
மும்பை புறநகர் தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் அலிசேக் மீரான், மும்பை தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் ம.சேசுராசு, கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் உள்பட அனைவரும் பங்காற்றி, இரட்டைக் குழல் துப்பாக்கியாக அங்கும் திகழ்ந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்!
மராத்திய மண்ணில் பெரியாரின் சுயமரி யாதை முழக்கம்மூலம் ஜோதிபாபூலே, சாவித்திரி பாய் பூலே, சத்ரபதி சாகுமகராஜ், சமூகநீதி முன்னோடி புரட்சியாளர் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணுக்கு, ‘பெரியார் இயக்கம் தனது சிறப்பான சல்யூட்’ தந்து மகிழ்ந்தது!
கருநாடகம் ஆயத்தமாகிறது!
இப்படி ஒரு வரலாறு 2026 இன் தொடக்க வெற்றியாக முரசொலித்து, சமூக விடுதலைக்காக பரிமளித்து, குடியரசாகவே தொடரவேண்டும் என்ற உரிமையைக் காப்பாற்ற, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் காப்பாற்றத் தன் கட மையை மும்பை திராவிடர் கழகம் இனிதே ஆற்றியுள்ளது.
அடுத்து கருநாடக திராவிடர் கழகம் ஆயத்தமாகிறது!
‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்!’
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.1.2026
