சென்னை, ஜன. 7– அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதிநவீன பேருந்துகள்
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கருநாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் அதிநவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த டிச.24ஆம் தேதி ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் நேற்று (6.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.37.98 கோடி மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில், பயணிகளின் சொகுசுப் பயணத் துக்காக முன்புற ஏர் சஸ்பென்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதியானது அதிக இடத்துடனும், 2 படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு நடத்துநர் தகவல்களை அறிவிப்பதற்காக ஒலிபெருக்கி, டிஜிட்டல் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளன.
பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலெக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் நிறுவப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன்கூட்டியே திறம்பட அனுமானிக்கும் தீ கட்டுப்பாட்டு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், போக்குவரத்துத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
