கடவுளா, அவதாரமா?
‘‘கடவுள் ராமர் பெயர் சேர்க்கப்பட்டதால்தான் ‘விக்சித் பாரத் ஜி ராம்ஜி’ திட்டத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கின்றனர். ஏழை, எளிய பின்தங்கிய பிரிவினரின் நலன் குறித்தோ, அவர்களது வேலை வாய்ப்புப்பற்றியோ அக்கட்சியினர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை’’ என்று ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இவர் வாதப்படியே கேட்கிறோம், மகாத்மா காந்தியாரின் பெயரை நீக்கிவிட்டு, ஏன் ராமன் பெயரைத் திணிக்கவேண்டும்?
இதில் உள்நோக்கம் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.
இன்னொன்று: கடவுள் ராமன் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளாரே, ராமன் கடவுளா, அவதாரமா?
கடவுளும், அவதாரமும் ஒன்றா? ஹிந்து மதத்தில் மூன்று கடவுள்கள்தானே முக்கியமாகக் கூறப்படுகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா. படைத்தல், காத்தல், அழித்தல் என்பதுதானே இதன் உள்ளடக்கம் என்கிறார்கள்.
இந்தக் கடவுள் பட்டியலில் ராமன் இல்லையே! அப்படி இருக்கும்போது, கடவுள் ராமன் என்று ஹிந்துத்துவா கூட்டம் கூறுவது அசல் முரண்பாடு அல்லவா?
ஹிந்து மதம் என்றாலே, முன்னுக்குப் பின் முரண்பாடும், குழப்பமும்தானே!
கடவுளுக்குப் பிறப்பு இல்லை என்பவர்கள், ராமன் புத்திரகாமேஷ்டி யாகத்தின்மூலம் பிறந்தவன் என்று இராமாயணம் கூறுகிறதே!
பிறப்பும் – இறப்பும் அற்றவன் கடவுள் என்றால், ராமன் பிறந்திருக்கிறான் – சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்று வால்மீகி ராமாயணம் கூறுவதிலிருந்து, பிறப்பு – இறப்பு ராமனுக்கு உண்டு என்பதால், அவனைக் கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
மேலும், மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்திற்கு, ஒன்றிய அரசின் பங்கு 60 சதவிகிதமாகவும், மாநில அரசின் பங்கு 40 சதவிகிதமாகவும் இருந்த நிலையில், அதைத் தலைகீழாக மறைப்பது ஏன்?
இந்த சங்கிகளுக்கும், அறிவுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பது கல்லின்மேல் எழுத்தே!
– மயிலாடன்
