சென்னை, ஜன.5- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு
டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் ஒன்றிய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தகுதி பெறுவோர் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர முடியும்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த 470 ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு நிதி யுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பள்ளி நிர்வாகங்களால் நியமிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் 470 ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி உள்ளிட்ட இதர விவரங்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்புடைய அதிகாரம் பெற்ற அலுவலர்களால் நியமன ஏற்பு வழங்கல் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞரிடமிருந்து பெறப்பட்ட சட்டக் கருத்தின் அடிப்படையிலும், 13.12.2023 ஆம் தேதிக்கு முன்னர் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் அளிக்க கோரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றும் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மூலம் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த 316 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 154 ஆசிரியர் களுக்கும் என மொத்தமாக 470 ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.
