சென்னை, ஜன.4 தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ‘தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) வெளியிட்டார். இந்தத் திட்டத்தை அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களும் வரவேற்றுள்ளன.
பல்வேறு சங்கத்தினர் நன்றி
இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உட்பட பல்வேறு அரசு ஊழியர் -ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று (3.1.2026) சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், முதலமைச்சருக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, நிதித்துறை செயலர் த.உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின், செய்தியாளர்களிடம் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: கு.வெங்கடேசன், வின்சென்ட் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், ஜாக்டோ -ஜியோ): 23 ஆண்டுகால ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு இன்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணிக் கொடை ரூ.25 லட்சம், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க உறுதியளித்துள்ளார். மீதமுள்ள கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஜன.6 முதல் நடத்தவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.
அமிர்தகுமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், போட்டா – ஜியோ): புதிய ஓய்வூதியத் திட்டத்தை மனதார வரவேற்கிறோம். குறைந்த பட்ச ஓய்வூதியம், கருணை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
அரசியல் கட்சித் தலை வர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: கடும் நிதி நெருக்கடி சூழலிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பது என்று முடிவு எடுத்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பெரும்பகுதி அம்சங்களை நிறைவேற்றும் வகையில்,’தமிழ்நாடு உறுதியளிக் கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
மேலும், தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்முகம், தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன். தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன் உட்பட பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் ஓய்வூதியம் தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
