“வாழ்நாள் முழுவதும் ஆடாக வாழ்வதை விட ஒரு நாள் சிங்கமாக வாழ்ந்து மடிவோம்”
வரலாற்றுப் பக்கங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே நிரப்பப்படுகின்றன. ஆனால், அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் கால நதியில், ஒரு பெரும் பாறையை எறிந்து அலைக்கழிப்ப வர்கள் சாமானிய உழைக்கும் வர்க்கத்தினர் தான். 2018ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன் நின்றிருந்த மனுவின் சிலைக்குக் கருப்புச் சாயம் பூசி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காந்தாபாய் அஹிரே மற்றும் ஷிலாபாய் பவார் ஆகிய இரு பெண்களின் வரலாறு, நவீன இந்தியாவின் மிக முக்கியமான அறப்போர்.
அடுப்பங்கரையில் மூண்ட புரட்சித் தீ
காந்தாபாய் அஹிரே மகாராட்டிராவின் சத்திரபதி சம்பாஜி நகரில் பிறர் வீடுகளில் பாத்திரங்கள் கழுவும் வேலையும் ஊதுபத்தி விற்கும் வேலையும் செய்துவந்தார். வறுமைதான் இருப்பினும் அரசமைப்புச் சட்டத்தின் மீது அபார பற்று. இன்று சுவாசிப்பதற்கு பாபாசாகேப் கொடுத்த அரசமைப்புச்சட்டம் எங்களின் வாழ்க்கை நூல் என்று கூறிவந்தார்
2018-ஆம் ஆண்டு டில்லியில் ஒரு கும்பல் அம்பேத்கருக்கு எதிராக கோஷம் போட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எரித்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. காந்தாபாய் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி “நீ கூறுவாயே எனது உரிமைக்கான நூல் என்று அந்த அரசியலமைப்பை எரித்துவிட்டார்கள்” என்று ஏளனமாகச் சொன்னபோது, அது காந்தபாயின் இதயத்தில் தகிக்கும் நெருப்பை மூட்டியது.
இதற்கு காந்தாபாயின் பதில், “உங்கள் கணவர் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றுவது மனுஸ்மிருதியாலா அல்லது அரசியலமைப்பாலா?” என்று அவர் கேட்ட கேள்வி, அதிகார வர்க்கத்தின் முகத்தில் அறையப்பட்ட சவுக்கடி. அங்கிருந்து வெளியேறிய காந்தாபாய்க்கு, வெறும் கோபம் மட்டும் வரவில்லை; ஒரு தெளிவான இலக்கும் பிறந்தது.
வறுமையைத் தாண்டிய
லட்சியப் பயணம்
காந்தபாயும் அவரது தோழி ஷிலாபாயும் அன்றாடக் கூலிகள்.ஷீலாபாய் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர்களிடம் ஜெய்பூர் செல்லப் பணம் இல்லை. ஆனால், இருந்தாலும் தாங்கள் அன்றாடம் சிறுகச்சிறுக சேமித்துவைத்த பணத்தை எடுத்துகொண்டு இருவரும்ரயிலைப் பிடித்து ஜெய்பூர் நோக்கிப் புறப்பட்டனர்.
1927-இல் பாபாசாகேப் அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்த அதே புரட்சி மனோபாவம், 90 ஆண்டுகளுக்குப் பிறகு மராட்டியப் பெண்களிடம் வெளிப்பட்டது. ஜெய்பூர் நீதிமன்றத்தின் முன் உள்ள மனு சிலை, பெண்களுக்கு எதிரானது, சமத்துவத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் ஆணித்தரமாக நம்பினர்.
நீதிமன்ற வளாகத்தில் ஒரு போர்க்களம்
ஜெய்ப்பூர் சென்ற அவர்களுக்கு நீதிமன்றம் எங்கே உள்ளது சிலை எங்கே உள்ளது என்று தெரியவில்லை. ரயில் நிலையத்தில் இருந்து தொலைவில் இருந்த நீதிமன்றத்திற்கு நடந்தே சென்று சேர்ந்தனர்.
நீதிமன்றத்தின் முன் இருந்த மனு சிலையைப் பார்த்ததும் ஆவேசமடைந்தனர். சிலையை உடைக்கத் திட்டமிட்டிருந்தாலும், போதிய கருவிகள் இல்லாததால் தங்களிடம் இருந்த கருப்புச் சாயத்தை அச்சிலை மீது பூசினர். “அரசியலமைப்பு வாழ்க!” என்ற முழக்கம் அந்த வளாகத்தையே அதிர வைத்தது.
அங்கிருந்த உயர்ஜாதி வழக்குரைஞர்கள் இவர்களைத் தாக்கினர். காவல்துறை இவர்களைக் கைது செய்தது. 6 நாட்கள் காவல் துறையினரின் காவல், 18 நாட்கள் சிறைவாசம் எனத் தண்டனைகள் தொடர்ந்தன. சிறையிலும் அவர்களைக் கேவலமாக நடத்தி, பாத்திரங்களைக் கழுவச் சொல்லியும், தரையைத் துடைக்கச் சொல்லியும் ஒடுக்கப் பார்த்தனர். ஆனால், “மனுவின் சித்தாந்தம் இறந்துவிட்டது, அந்தச் சிலை அகற்றப்பட வேண்டும்” என்ற ஒற்றை இலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
போராட்டத்திற்குப் பின் தொடர்ந்த இன்னல்கள்
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை. அவர்கள் செய்த செயல் சமூக ஊடகங்களில் வைரலானதால், “ஆபத்தான பெண்கள்” என்று முத்திரை குத்தப்பட்டு, காந்தாபாய் தங்கியிருந்த வீட்டிலிருந்து உரிமையாளரால் வெளியேற்றப்பட்டார். கையில் காசில்லாமல், பசியோடு அலைந்து, உணவகங்களில் பாத்திரங்கள் கழுவித் தான் அவர்கள் மீண்டும் ஊர் வந்து சேர்ந்தனர்.
இருப்பினும், காந்தாபாய் சொல்கிறார்: “வாழ்நாள் முழுவதும் ஆடாக வாழ்வதை விட, ஒரு நாளாவது சிங்கமாக வாழ வேண்டும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். நாங்கள் அதைத்தான் செய்தோம்.”
மனு சிலை – ஒரு வரலாற்று முரண்
1989-இல் “அழகுபடுத்துதல்” என்ற பெயரில் அமைக்கப்பட்ட அந்த மனு சிலை, இன்றும் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் ஒரு கறையாகவே பார்க்கப்படுகிறது. பல போராட்டங்கள் நடந்தும், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் அச்சிலை அகற்றப்படவில்லை. ஆனால், படித்தவர்கள் செய்யத் தயங்கிய காரியத்தை, படிப்பறிவில்லாத (ஆனால் சமூக அறிவுள்ள) இரு பெண்கள் செய்து முடித்தனர்.
காந்தாபாயும் ஷிலாபாயும் வெறும் பெண்கள் அல்ல; அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி அடையாளம். வறுமை, பசி, சமூகம் கொடுத்த அழுத்தம் என அனைத்தையும் தாண்டி, “இந்த நாடு இயங்குவது அரசியலமைப்பால் தான்” என்பதை உரக்கச் சொன்ன இந்தப் புயல்கள், மராட்டிய மண்ணின் வீர வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்கள். மனுவின் சித்தாந்தம் மடியும் வரை, இந்த எளிய கரங்களின் போராட்டம் ஓயாது என்பதே அவர்கள் உலகிற்குச் சொல்லும் செய்தி.
