திருவனந்தபுரம், ஜன.2 சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கக் கவசங்கள் செப்பனிடும் பணியின் போது நடைபெற்ற தங்கம் திருட்டு வழக்கில், தற்போது மீட்கப்பட்டுள்ள அளவை விட மிக அதிக அளவில் தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
30 கிலோ தங்கம்
கடந்த 1998-ஆம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா, சபரிமலை கோவிலின் மேற்கூரை மற்றும் கருவறை பணிகளுக்காக 30.3 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். கடந்த 2019-இல், கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்காக, பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முடிந்து கவசங்கள் திரும்ப ஒப்படைக்கப் பட்ட போது, சுமார் 4 கிலோ தங்கம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மேனாள் தலைவர்கள் உட்பட இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:
கூடுதல் கவசங்கள்: துவார பாலகர் சிலைகள் மட்டுமின்றி, தசாவதார சிற்பங்கள், ராசி சின்னங்கள் மற்றும் கதவு சட்டங்கள் என மொத்தம் ஏழு இடங்களிலிருந்த தங்கக் கவசங்கள் கழற்றப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன.
தங்கம் மீட்பு: இந்த மோசடியில் தொடர்புடைய பண்டாரி என்பவர் 109.24 கிராம் தங்கத்தையும், கோவர்தன் என்பவர் 474.96 கிராம் தங்கத்தையும் ஒப்படைத்துள்ளனர்.
அறிவியல் ஆய்வு: ‘எலக்ட்ரோ பிளேட்டிங்’ முறையில் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் சரியான அளவைக் கண்டறிய, தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளின் மாதிரிகள் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு (VSSC) அறிவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் அளவை விட, உண்மையில் திருடப்பட்ட தங்கத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் என காவல்துறையினருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அறிவியல் ஆய்வு அறிக்கை வந்தவுடன், திருடப்பட்ட தங்கத்தின் முழுமையான அளவு மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
