இதுவரையில் பணத் திருட்டைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்;
நகைத் திருட்டைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்! ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் ஓட்டுத் திருட்டு என்பதைக் கேள்விப்படுகிறோம்!
அதோடு ஆட்சித் திருட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்; ஏமாந்து விடாதீர்கள்! விழிப்புணர்வுடன் இருங்கள்; வெற்றி நமதே!
மீண்டும் திராவிடம் வெல்லும்! அதை வரலாறு சொல்லும்!
சென்னை, ஜன.2 இதுவரையில் பணத் திருட்டைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்; நகை திருட்டைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் ஓட்டுத் திருட்டு என்பதைக் கேள்விப்படுகிறோம். அதோடு ஆட்சித் திருட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். ஏமாந்து விடாதீர்கள்! விழிப்புணர்வுடன் இருங்கள்; வெற்றி நமதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி;
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பிலான பரப்புரை தொடர் பயணம் – ‘‘பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா!’’ ஆகிய இரு பெரும் நிகழ்ச்சிகள் – வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 26.12.2025 அன்று மாலை 6 மணியளவில், பிரிக்களின் சாலை வெங்கடம்மாள் சமாதி தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இதுபோன்று 100 ஆண்டுகளுக்கு முன்பு
பார்க்க முடியுமா?
திராவிட இயக்கம் என்ன செய்தது என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் ஆதாரமாகக் காட்ட வேண்டாம்; இங்கே கடமையாற்றுவதற்காக காவல் துறையினர் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் மகளிர் அதிகாரிகளும் நிற்கிறார்கள். இதுபோன்று 100 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்க முடியுமா? ராணுவத்திலும், காவல் துறையிலும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்திய தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இப்பொழுது காவல்துறையில் அதிகாரிகளாக இருக்கின்ற மகளிருக்கே, போராடியது யார் என்று தெரியாது?
விருதுநகரில் 1932 இல், மூன்றாவது மாநாடு நடை பெற்றது. முதல் மாநாடு செங்கல்பட்டு. இரண்டாவது மாநாடு ஈரோடு. மூன்றாவதாக, சுயமரியாதை மாகாண மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மிக முக்கியமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதை நடைமுறைக்குக் கொண்டு வந்த முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
1929 இல் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது!
1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்பாவுக்குச் சொத்து ஓரளவு இருக்கிறது. அவருக்கு இரண்டு பையன், ஒரு பெண் இருந்தால், அந்தச் சொத்தை பிரிக்கும் போது சமமாகத்தானே பிரிக்கவேண்டும். இந்து லா சட்டப்படி சொத்தை எல்லோருக்கும் சமமாக கொடுக்க வேண்டும் இல்லையா? எல்லோரும் பிள்ளைகள் தானே? அது ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? சுயமரியாதை இயக்கத்தினுடைய முக்கிய நோக்கமே ஜாதி ஒழிப்புதானே! பிறவி பேதம் இல்லை என்பதுதானே! அதே மாதிரி பிறவியில் ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற பேதம் இருக்கக்கூடாது; ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தி யாசம் இருக்கக்கூடாது; உரிமையில் வித்தியாசம் இருக்கக்கூடாது. ஆணுக்கு என்னென்ன உரிமையோ, அதேபோன்று பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்று சொன்னார் தந்தை பெரியார். அப்படி சொல்லிவிட்டு அதை மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேற்றினார்.
ஆர்எஸ்எஸ் உணர்வாளர்கள்
அங்கேயும் இருந்தார்கள்!
செங்கல்பட்டில் 1929 இல் பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும்; படிப்பு உரிமை வேண்டும் என்றார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறார். அதற்குப் பிரதமராக இருந்த நேருவும் அனுமதியளித்துவிட்டார்.
ஆனால், காங்கிரசில் அந்த காலத்தில் இருந்த ஸநாத னிகள் அதை எதிர்த்தனர். ஆர்எஸ்எஸ் உணர்வாளர்கள் அங்கேயும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கக் கூடாது; சட்ட அமைச்சர் அம்பேத்கர் கொண்டு வந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதற்கு என்ன காரணம்? யார் தூண்டுதல்? என்றால், ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளவேண்டும் மகளிர்.
நாங்கள், ஆதாரம் இல்லாமல்
எதையும் பேசுவதில்லை!
நாங்கள், மதத்தைப்பற்றி பேசுகிறோம்; அவரைப் பற்றி பேசுகிறோம்; இவரைப்பற்றி பேசுகிறோம் என்று நினைக்கிறார்களே, எதையும் நாங்கள் ஆதாரம் இல்லாமல் பேசுவதில்லை. இதோ இந்தப் புத்தகம் ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் 100 வயதிற்கு மேல் இருந்தவர் எழுதி, ‘நக்கீரன்’ பத்திரிக்கையில் தொடராக வெளிவந்து, அந்தத் தொடர் புத்தகமாகப் போடப்பட்டு, அது பல பதிப்புகள் வெளிவந்திருக்கிறது. அதில் ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்; அது மிக முக்கியமானது.
காஞ்சி சங்கராச்சாரியார்களில் பெரியவா, மகா பெரியவா அப்படின்னு இன்றைக்குப் ‘‘பெரியவா பெரியவா’’ன்னு சொல்கிறார்கள் அல்லவா! மகா பெரியவாவுக்கு அடுத்த பெரியவா, இருக்கா; அப்புறம் சின்னவா இருக்கா பாருங்கள், இவர்களில் இரண்டு பேர் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள். அது நமக்கு முக்கியமல்ல; மகா பெரியவா என்கிற சந்திரசேகரேந்திர சரசுவதி என்ன சொன்னார் என்றால், பெண்களுக்கு சொத்துரிமைக்காக அம்பேத்கர் சட்டம் கொண்டு வந்து, அந்த சட்டம் நிறைவேறுகிற அளவுக்கு வருகிறது. இப்பொழுது நான் சொல்கிற ஒரு சம்பவத்தை தாய்மார்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
பார்ப்பனர்களுக்குத் தலைவர் அவர்; ஸநாத னத்திற்குத் தலைவர் அவர். சரி, ஆனால், நம்மை அது எப்படி பாதிக்கிறது என்பதை பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியிருப்பது என்ன?
‘‘டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்க ளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.
அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ – இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.
நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம்…
‘என்ன ஸ்வாமி?’ என்றேன் நான்.
அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர், ‘லோகமே அழியப்போறது ஓய்… அழியப் போறது…’ என படபடப்பாகப் பேசினார்.
“இதப்பார்த்தீரா… ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா… அபாண்டமா அபச்சா ரமா போயிடும்’’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.’’
இதற்கு என்னய்யா அர்த்தம்?
சொத்துரிமை இவ்வளவு பேருக்கு இன்றைக்குக் கொடுத்திருக்கோமே – அதை அன்றைக்குச் செய்ய முடியாத அளவுக்கு அம்பேத்கருக்கு இடையூறு விளைவித்தனர். அதைக் கண்டு அம்பேத்கர் சங்க டப்பட்டார்; நான் கொண்டு வந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றால், ‘‘நான் சட்ட அமைச்சராக இருந்து என்ன பயன்? என்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்’’ என்று உருக்கத்தோடு, ரோஷத்தோடு பதவி விலகி வெளியே போனார். அன்றைக்கு அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால், அதே காரியத்தை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1989 இல் முதன் முதலில் தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் நிறைவேற்றினார்.
ஆர்.எஸ்.எஸ்.சினுடைய
தத்துவம் என்ன?
அதுதான் ‘திராவிட மாடல்’ – ‘இதுதான் திராவிடம்’ இதை நன்றாக நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சினுடைய தத்துவம், பெண்க ளுக்குச் சொத்துரிமை கூடாது; படிப்புரிமை கூடாது என்பதுதான்.
1989 இல் செய்தது மட்டுமல்ல, 2006 ஆம் ஆண்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில், தி.மு.க.வும் அங்கம் வகித்தது. பிரதமராக மன்மோகன் சிங் அவர்கள் இருந்தார். இன்றைக்கு அவருடைய நினைவு நாளாகும். அப்போது, இந்தியா முழுவதற்கும் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இதனால்தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குக் கோபம்.
ஆர்.எஸ்.எஸ். தத்துவமே பெண்கள் படிக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான். பெண்களை ‘நமோ சூத்திரர்கள்’ என்றார்கள். பெண்கள் சூத்திரர்களை விடக் கீழானவர்கள் என்றார்கள்.
ஆகவே, நம்மாட்கள் படிக்கக் கூடாது; வழக்குரைஞர் ஆகக் கூடாது என்பதுதான் அவர்களது திட்டம். ஆனால், நம்முடைய பெண்கள் இன்றைக்குக் காவல்துறையில் தலைமை அதிகாரிகளாக இருக்கிறார்கள். டி.ஜி.பி.யாக வந்துவிட்டார்கள். ஒரு காலத்தில பெண்களால் முடியு மான்னு கேட்டார்கள். ஏன் முடியாது என்று பெரியார் கேட்டார்.
திராவிடம் தான் நமக்கு உரியது!
1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது நம்முடைய கலைஞருக்கு என்ன வயது என்றால், அய்ந்து வயது. திராவிடத்தை நம்முடைய மக்கள் நம்பிய காரணத்தால், திராவிடம் தான் நமக்கு உரியது என்று சொல்லி சரியான இடத்தைக் கொடுத்த காரணத்தால்தான் தான், இன்றைக்கு மகளிர் சகோதரிகளே நீங்கள் இவ்வளவு பெரிய அளவிற்கு சொத்திலே உரிமை கொண்டிருக்கிறீர்கள். இதை ஒழிக்கத்தான், இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்கிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினர் நிதி கொடுக்காமல், நெருக்கடியை உண்டாக்கலாம் என்று பார்க்கிறார்கள். வடக்கே இருந்து ஓர் ஆளை ஆளுநராக நியமித்து, நாள்தோறும் நெருக்கடியைக் கொடுக்கிறார்கள்.
எவ்வளவோ நிதி நெருக்கடியிலும், மகளிர் உரிமைத் தொகை என்று மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. அதுமட்டுமல்லாமல், கல்லூரி செல்லும் பெண்க ளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கின்ற மகத்தான திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழ் மண்ணை நீங்கள் அசைக்க முடியாது!
ஆகவே இப்படிப்பட்ட அற்புதமான ஓர் இயக்கம். இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி போய்விட்டால், இந்தத் திட்டங்கள் எல்லாம் இருக்காது. இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்பதற்காக போலித்தனமான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னதான் செய்தாலும், தமிழ் மண்ணை நீங்கள் அசைக்க முடியாது. இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது.
திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் சேர்வதற்கு நிறைய பேர் வருகிறார்கள். யாரை ஏற்றுக் கொள்வது என்பதோடு – இடம் இல்லை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பிஜேபியிடம் அடிமையாகப் போன வர்கள், ‘‘வாங்க, மகா கூட்டணி அமைப்போம்; பெரிய கூட்டணி அமைப்போம்; வாசல்படி திறந்திருக்கிறது. ஜன்னல் திறந்திருக்கிறது; வாசல்படி வழியாகவும் வரலாம்; அப்படி வர முடியாதவர்கள், கொல்லைப்புற வழியாக வரலாம்’’ என்று எல்லா கதவையும் திறந்து வைத்திருந்தார்கள். கதவு திறந்ததுதான் மிச்சம்; ‘‘காத்திருந்தேன், காத்திருந்தேன், காலமெல்லாம் காத்திருந்தேன்’’ என்றுதான் இன்றைக்கு இருக்கிறார்கள்.
நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள்!
இன்றைக்குக் காலையில் பத்திரிகையில் வெளி வந்த ஒரு செய்தி! ரொம்ப வருத்தம், யாருக்கு? பிரதமர் மோடிஜிக்கு! அவர் வித்தையல்லாம் இங்கே எடுபடவில்லை. எங்கள் முதலமைச்சர் – ஒப்பற்ற திராவிட மாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. தலைமைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து நான்கு தேர்தல்கள் நடந்திருக்கிறது. அதில் எந்த தேர்தலிலாவது நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா? சொல்லுங்கள் பார்க்கலாம். 2026 இல் நடைபெறப் போகும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் நீங்கள் வீம்பாகச் சொல்கிறீர்களே, உங்களுக்கு முதலில் கூட்டணியே நிலைக்கவில்லை. யார், எங்கே போவதென்று தெரியாத அளவிற்கு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று நான் சொல்வது, மீண்டும் சொல்லுகிறேன், தி.மு.க.வுக்காக அல்ல; தி.மு.க.வில் இருக்கிற முதலமைச்சருக்காக அல்ல. உங்களுக்கெல்லாம் தெரியும், நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள். மீண்டும் சொல்லுகிறேன், மகளிரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். மருத்துவ திட்டம் என்று சொல்லி, நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள். எத்தனை பேருடைய உயிரை வாங்கி இருக்கிறது அந்தத் திட்டம். ஊழலை ஒழிப்பதற்காக என்று அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஊழல் ஒழிந்ததா? இதற்காக வெட்கப்பட வேண்டாமா? முன்பு நடந்ததைவிட இப்போது மோசமாக நடந்தி ருக்கிறது. அது வெளியில் தெரியாமல் மறைத்து வைத்தி ருக்கிறார்கள்.
எல்லோரையும் ஒன்று சேர்க்கின்ற இயக்கம் திராவிடம்!
இப்படிப்பட்ட கொடுமைகளையெல்லாம் எதிர்த்துப் பேசக்கூடிய இயக்கம், எல்லோரையும் ஒன்று சேர்க்கின்ற ஓர் இயக்கம், ‘‘இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி!’’
இதை அத்தனையும் அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அதற்காக ஓர் ஆளுநரை நம்பினார்கள்; மாநில நிதியைக் கொடுக்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். பேரிடர் நிதியைக் கொடுக்காமல் இருந்தனர். இவையெல்லாம் கைகொடுக்கவில்லை என்றவுடன், மதக்கலவரங்களை உண்டாக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஒருபோதும் இந்த மண்ணிலே மதக்கலவரங்களை உங்களால் உண்டாக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் இங்கே வந்து சொல்கிறார், ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினைக்காக தேசிய அளவில் போராட்டம்; ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளோடு மோகன் பாகவத் ஆலோசனை!’’
திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்ற வேண்டியவர்கள் தீபம் ஏற்றிவிட்டார்கள். அந்த ஊரில் உள்ள அர்ச்சகர் தீபம் ஏற்றிவிட்டார். தர்கா பக்கத்தில்தான் நாங்கள் தீபம் ஏற்றுவோம் என்று போராடுகிறார்கள். திராவிடர் கழகத்துக்கார்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள். தி.மு.க.வினர்கூட ‘‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!’’ என்று சொல்பவர்கள். ஆனால், நாங்கள் வெளிப்படையாக ‘கடவுள் இல்லை’ என்று சொல்வதுதான் எங்களுடைய கொள்கை அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறோம்.
நான் அதைக் கேட்டு சும்மா இருப்பேனா?
‘‘கடவுள் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர்; எங்கும் நிறைந்திருக்கிறார்; அவர் எல்லாருக்கும் கருணையானவர்’’ என்று சொல்கிறீர்கள். இப்படி ஒரு கடவுள் இருந்தால், எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே! ‘‘கடவுள் இல்லை’’ என்று நான் சொல்லும்போது, ஒலிபெருக்கியில் என்ன கேட்கிறது; உங்களுக்கும் ‘கடவுள் இல்லை’ என்றுதானே கேட்கிறது. அவர்தான் எங்கும் நிறைந்தவராயிற்றே, அவர் என்ன செய்திருக்கவேண்டும், எனக்கு முன் வந்து, ‘இப்போது வீரமணி பேசுவார் என்று நினைத்தோம்; வீரமணி இல்லை, அவர் பேசமாட்டார்’ என்று சொன்னால், நான் அதைக் கேட்டு சும்மா இருப்பேனா?
‘‘நான்தான் இங்கே குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்கேனே, என்னை எப்படி இல்லை என்று சொல்கிறாய்’’ என்று கேட்பேன் அல்லவா!
கடவுளைக் காட்டி ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்!
ஆகவே, கடவுள்தான் மகாசக்தி வாய்ந்தவராயிற்றே, சாதாரண ஆளான நான், கடவுள் இல்லை என்று சொன்னால், அது ஒலிபெருக்கியில் ஏன் கேட்கவேண்டும்? ‘‘இல்லை, இல்லை, நான் இருக்கிறேன்’’ என்று சொல்லி, என்னுடைய மூக்கை இடிக்க வேண்டுமா, இல்லையா? அப்படியென்றால், ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று யோசனை செய்யுங்கள். இது பகுத்தறிவுச் சிந்தனை. இதெல்லாம் கூட இரண்டாவது பட்சம். அந்தக் கடவுளைக் காட்டி ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.
அந்தக் கடவுள் பக்தி என்பது உங்கள் வீட்டுக்குள் இருக்கிற விஷயம். அதைக் கொண்டு போய் தெருவில் வைத்து, மதத்தை, மதவெறியைப் புகுத்தி, அண்ணன் – தம்பிகளாக இருக்கிறவர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார்கள். இன்றைக்குக்கூட பாருங்கள், நாடெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் மோடி, வித்தை காட்டுவதற்காக கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். ஆனால், பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களில் கிறிஸ்துமசைக் கொண்டாடவிடவில்லை. இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.
தமிழ்நாடுதான் அமைதியாக இருக்கிறது என்றால், இது பெரியார் மண், திராவிட மண்!
பி.ஜே.பி.ஆளுகின்ற மாநிலங்களில், மற்ற மதத்திற்கு இடம் இல்லை. மாட்டுக்கறி விற்கக் கூடாது; ஆட்டுக்கறி சாப்பிட்டவனையே, மாட்டுக்கறி சாப்பிட்டான் என்று பொய்யாகச் சொல்லி, கொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாடுதான் அமைதியாக இருக்கிறது என்றால், இது பெரியார் மண், திராவிட மண்.
எனவே, ஏமாந்து விடாதீர்கள்! 2026 இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம், மீண்டும் வெற்றி பெறுவது ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்! மீண்டும் இந்த ஆட்சிதான்! எல்லாருக்கும் ஓட்டு உரிமை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஓட்டைத் தூக்கி எறியலாம் என்று நினைக்கிறார்கள். ஓட்டைத் திருடுகிறார்கள்.
ஏமாந்து விடாதீர்கள்!
விழிப்புணர்வுடன் இருங்கள்!
இதுவரையில் பணத் திருட்டைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்; நகை திருட்டைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் ஓட்டுத் திருட்டு என்பதைக் கேள்விப்படுகிறோம். அதோடு ஆட்சித் திருட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். ஏமாந்து விடாதீர்கள்! விழிப்புணர்வுடன் இருங்கள்; வெற்றி நமதே! வெற்றி நமதே!
மீண்டும் திராவிடம் வெல்லும்! அதை வரலாறு சொல்லும்!
தொகைத் திரட்டிய தோழர்களுக்கு நன்றி!
நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
