தூத்துக்குடியில் ஹனுமான் ஜெயந்தி என்ற பெயரில் ஆயிரம் இளநீர்களை குரங்காய் வேடமிட்டு (ஹனுமான்) வாயால் கடித்துத் தலையில் உடைத்த இளைஞர்கள் என்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சிப்படி மாறினான் என்பது அறிவியல் தகவல் ஆகும். இதனை அறிவியல்படி ஆய்வு செய்து கண்டுபிடித்தவர் டார்வின் ஆவார். (1859 பிப்ரவரி 24 அன்று On the Origin of Species). அப்பொழுது ஆங்கிலேய ஆங்கி லிக்கன் பிஷப்பு சாமுவேல் வில்பர் போரிஸ் போன்றோர் மத ரீதியாக எதிர்த்தனர்.
1950 இல் கத்தோலிக்க திருச்சபை அய்.என்.ஹியூமனின் ஜெனெரிஸ் ஏன் சைக்கலிங் பரிணாமத்தை ஏற்கலாம் என்று கூறியது.
அறிவியல் வளர்ச்சி இவ்வாறு இருக்க, குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன் – மறுபடியும் குரங்காக மாறியிருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்!
அறிவியல் மனிதனை வார்த்தெடுக்கிறது – வளர்ச்சிப் போக்கில் உந்தித் தள்ளுகிறது. ஆனால், மதமும், பக்தியும் மனிதனை குரங்காக்கி வேடிக்கை காட்டுகிறது.
ஹனுமான் ஜெயந்தி என்ற ஒன்றைத் தூத்துக்குடியில் நடத்தியுள்ளனர்.
யார் இந்த ஹனுமான் –வரலாற்று மாந்தனா? ஒரு வெங்காயமும் இல்லை! புராணம் என்றால், புளுகு மூட்டைதானே!
ஹனுமான் என்பவர் யார்? வாயு தேவன் என்பவனுக்குப் பிறந்தானாம். அதனால், இவனுக்கு வாயு புத்திரன் என்று புராண அதிகப் பிரசங்கிகள் புளுகித் திரிவார்கள்.
சந்திர மண்டலத்தில் குடியேறலாமா என்கிற அளவுக்கு அறிவியல் வெற்றி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில், வாயு புத்திரன் ஹனுமான் என்பதும், அவனுக்கு விழா என்று சொல்லி பக்திப் போதையில் மனிதர்கள் ஹனுமான் வேடம் தரித்து (வாலும் தொங்குகிறது) ஆயிரம் இளநீர்களை வாயால் கடித்துத் தலையில் உடைப்பது எல்லாம் எதைக் காட்டுகிறது? தலையில் தேங்காய் உடைத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ இயல் கூறுகிறது.
நியாயமாக இதைத் தடை செய்யவேண்டாமா? மனிதன் மாறிவிட்டான் ம(த)ரத்தில் ஏறிவிட்டான்!
– மயிலாடன்
