சென்னை, ஜன.1– தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! என்று தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:
அறிவுத் திருவிழா
தி.மு.க. உடன் பிறப்புகளுக்கும் – ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த் துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறக்கின்ற 2026–அய் நாம் அனைவரும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் வரவேற்று மகிழ்வோம்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, பிளவுவாத சக்திகளுக்கு நம்முடைய ஒற்றுமையின் வலிமையைக் காண்பித்த ஆண்டாக 2025 அமைந்திருந்தது.
ஏதாவது செய்து, உணர்ச்சிகளைத் தூண்டி மக்களைக் கூறுபோடலாம் என முயன்றவர்கள், முனை முறிந்து நின்ற காட்சி தான் கடந்த ஆண்டின் சிறப்பு!
மும்மொழிக் கொள்கைத் திணிப்பு, தொகுதி மறுவரையறை, நிதிப் பங்கீட்டில் பாரபட்சம், கீழடிக்கு அங்கீ காரம் மறுப்பு, ஆளுநரின் அடாவடி, எஸ்.அய்.ஆர் என ஒன்றிய அரசின் எல்லா அதிகார அத்துமீறல்களையும் ஓரணியில் எதிர்த்து 2025 இல் தமிழ்நாடு வரலாறு படைத்திருக்கிறது.
ஒன்றிய அரசின் அடக்குமுறை களுக்கு இடையே, முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு, அனைத்துத் துறைகளிலும் உச்சம் தொட்டது. குறிப்பாக, 11.19 சதவிகிதத்துடன் நாட்டிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்தது.
கல்வி வளர்ச்சித்திட்டங்கள், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் தொழில் முதலீடுகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம் என நாம் அடைந்துள்ள உயரங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுகிறது.
விளையாட்டுத்துறையைப் பொறுத்த வரை, ஏராளமான பன்னாடு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை, தமிழ் நாட்டில் நடத்தினோம். தமிழ் நாட்டு வீரர்கள் பலர் உலகெங்கும் பதக்கங்களைக் குவித்து பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும், நம் ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங் களால் பயனடைந்தோர் ஒருவராவது இருக்கிறார் என்பதையும், 2025 உறுதிப்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. இளைஞர் அணியை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டின் வார்டு, கிளை மற்றும் பூத் வரை நிர்வாகிகளை நியமிக்கும் பணியைத் தொடங்கினோம்.
உலகில் ஈடு இணையில்லாத வகையில், 5 இலட்சம் நிர்வாகிகள், 50 இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் என கருப்பு – சிவப்பு ராணுவமாக இளைஞர் அணியை கட்டமைத்து வருகிறோம்.
‘அறிவுத் திருவிழா’ எனும் ஆற்றல் மிகு நிகழ்வை இளைஞர் அணி முன்னெடுத்தது.
சமீபத்தில், ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருவண்ணாமலையில் வடக்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர் வாகிகள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தினோம்.
75 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் நம் கழகம், இன்றைக்கும் இளமைத் துடிப்போடு இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சாட்சி.
இப்படி, எண்ணற்ற ஆக்கப்பூர்வ மான பணிகளை 2025 இல் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
சுயமரியாதையை
நிலைநாட்டும் ஆண்டு
நிலைநாட்டும் ஆண்டு
மலரப்போகும் 2026ஆம் ஆண்டில், இந்தப் பணிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதே நம் இலக்கு.
இன்னும் சில மாதங்களில், சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தல் என்பது, தமிழ்நாட்டின் ‘உரிமைகளைக்’ காப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட் டையும் பாதுகாப்பதற்கான தேர்தல்.
குறிப்பாக, அண்மையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டுப்போன வாக்காளர்கள், தி.மு.க.வின் BLA–2 நிர்வாகிகள் மூலம் மீண்டும் விண்ணப்பம் அளிப்பது மிக மிக அவசியம்.
இதற்கான பணிகளை ஜனவரி 18 வரை மேற்கொள்ளலாம் என்பதால், விழிப்போடு இருந்து ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுக்குள் மதம்பிடித்து ஓடி வரத்துடிக்கும் பாசிச சக்திகளையும், அவர்களுக்குப் பாதைப்போட்டுக் கொடுக்கும் பழைய – புதிய அடிமை களையும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வீழ்த்த வேண்டும். இது தி.மு.கழகத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கடமை.
‘திராவிட மாடல்’ 2.0 ஆட்சியில் புதிய திட்டங்களும், மாநில உரிமைக்கான குரலும் புதுவேகத்துடன் பெருகும்! இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளுடன் போட்டியிடும் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டும்!
ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைந்திட – ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற உரிமைக் குரல் 2026–இல் மீண்டும் ஓங்கி ஒலித்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
தமிழ்நாட்டின் அடையாளத்தையும் – சுயமரியாதையையும் நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!
புத்தாண்டில் அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும் – செழிக்கட்டும்!!
– இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
