கரூர், ஜன.1– கரூர் மாவட்ட கழக மேனாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் பழ.இராமசாமி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் கவிஞர் இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 28.12.2025 மாலை 5 மணி அளவில் கே.வி.ஆர். ஓட்டல் மகாலில் கரூர் மாவட்ட கழகத் தலைவர் ப.குமாரசாமி தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, தனபால் ஆகியோர் முன்னிலை பொறுப்பு ஏற்றனர். விழாவில், கவிஞர் இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூலை வெளியிட்டு, கழக மாநில பிரச்சார செயலாளர் அருள்மொழி சிறப்புரையாற்றினார். அரசு வழக்குரைஞர் இரா.குடியரசு, திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சு.மனோகரன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
அ.அருள்மொழி
பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி பேசும்போது, கவிஞர் பழ.ராமசாமி இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை, தொண்டு அவருடைய கவிதை தொகுப்புகளை இன்று என் மூலமாக வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்தில் இராவண ஒன்னான் என்று பெயர் வரும், அதன் அர்த்தம் மாற்று சொல்ல முடியாத என்பதாகும். இராவண ஒன்னான் பெயரை, தானாக தமிழ் படித்து தானாக வைத்துக் கொண்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி மூலமாக ஜீப் வழங்கி கவுரவப்படுத்தினார். கவிஞர் பழ.ராமசாமி, ஆசிரியர் பிறந்தநாள் – பொங்கல் வாழ்த்து அட்டைகளை தானாக கைப்பட எழுதி, அச்சடித்து எல்லோருக்கும் அஞ்சல் மூலம் வழங்குவார். ஆனால் நாம் திருப்பி பதில் கடிதம் போடுவதில்லை என்று அவர் பலமுறை வருத்தப்பட்டதுண்டு. ஆனால் பிஎல்ஆர் இதை ஒரு தொண்டாகவே செய்து வந்தார் என்று அவரது நினைவலைகளைப் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் மு.க.ராஜசேகரன், தனபால், சே.அன்பு, குளித்தலை தமிழ் பேரவை அமைப்பாளர் அறிவு கண்ணன், கவிஞர் கடவூர் மணிமாறன், ரங்கநாதன், மா.கண்ணதாசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தாந்தோணி, முன்னாள் நகராட்சி தலைவர் ரவி, கவிஞர் கருவூர் கன்னல், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அருணா பொன்னுச்சாமி, வழக்குரைஞர் இரா.குடியரசு வாழ்த்துரை வழங்கினர். கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் காப்பாளர் வே.ராஜு, கரூர் ஒன்றிய தலைவர் பழனிசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், காளிபாளையம் பெருமாள், கடவூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொம்மன், கலை இலக்கிய அணி செயலாளர் இ.ராமசாமி, காந்திகிராமம் குமார், மகளிர் பாசறை அம்பிகா, மாணவர் கழக செயலாளர் கவின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராஜாமணி, கரூர் நகர செயலாளர் சதாசிவம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அமைப்பாளர் விடுதலை, வாங்கல் ராஜமோகன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பழ.இராமசாமியின் (பிஎல்ஆர்) அவர்களின் மருமகள் சு.பூங்கொடி நன்றி உரையாற்றினார்.
