சென்னை, டிச.31 தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘முத்திரை திட்டங்களின்’ முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
உடன்குடி அனல்மின் திட்டம்
எரிசக்தி துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,076.71 கோடி மதிப்பீட்டில் 2×660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஜனவரி 2026-க்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும், வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையின்றி, சீரான மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கட்டுமானப் பணிகளை பிப்ரவரி 2026-க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை பொதுப்பணித் துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
