கேள்வி: ஜெபத்திற்கும், உபாசனைக்கும் என்ன வேறுபாடு?
பதில்: ஜெபம் என்பது தினமும் மூன்று வேளை 108 முறை இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது. உபாசனை என்பது எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் கடவுளின் மந்திரத்தைச் சொல்லுவது.
– ‘விஜயபாரதம்’,
ஆர்.எஸ்.எஸ். வார இதழ்
‘‘காலையில் எழுந்து நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, அன்றாடம் வரும் செய்தி ஏடுகளைப் படித்துவிட்டு, சிற்றுண்டி அருந்தி, பணியாற்றும் இடத்திற்குச் சென்று, கடமையை ஒழுங்காக ஆற்றி, வேலை நேரம் முடிந்து, வீணாக ஊரைச் சுற்றி அரட்டை அடிக்காமல், கெட்டப் பழக்கங்களுக்கு ஆளாகாமல், வீட்டிற்குத் திரும்பி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பிள்ளைகளின் படிப்பில் அக்கறையோடு கவனம் செலுத்தி, வீட்டிற்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டு, நூல்களைப் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு, நீண்ட நேரம் கண்விழித்து சினிமா, தொலைக்காட்சிகளில் காலத்தைத் தொலைக்காமல், குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தூங்கி விழிக்கவேண்டும்’’ என்று சொல்லுவதற்கு இந்த வைதீகப் பிடுங்கல் கூட்டத்திற்குப் புத்தி இருப்பதில்லை.
தினமும், ஜெபமும், இஷ்ட தெய்வத்திற்கு மூன்று வேளை 108 முறை மந்திரத்தை உச்சரிப்பது என்று சொல்லுவது எல்லாம் மனித சமுதாயத்திற்கு எந்த வகையில் உபயோகமானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
‘‘கடவுள்தான் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தி வாய்ந்தவர்’’ என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுளைத் தொழுதால்தான், மந்திரங்களைச் சொல்லி ஜெபித்தால்தான் நல்லது நடக்கும் என்றால், கடவுளைப்பற்றி சொல்லி வைத்துள்ள குணாதிசயங்கள் எல்லாம் வெறும் குப்பைத் தொட்டி என்று ஆகவில்லையா?
‘‘கடமையைச் செய், காரியத்தில் வெற்றி பெறு!’’ என்று சொல்லுவதற்கு இந்த நாட்டில் எந்தக் கடவுளும் இல்லை. ‘உண்மையைப் பேசு – ஒழுக்கமாக வாழு’’ என்று சொல்லுவதற்கு இந்த நாட்டில் எந்த மத நூல்களும் கிடையாது.
மாறாக, ‘‘பன்னிரெண்டு வருடங்கள் பாவம் செய்தாலும் பரவாயில்லை; கும்பகோணம் மகாமகக் குட்டையில் குளித்து எழு, பன்னிரெண்டு வருடம் செய்த பாவங்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்துவிடும்; கும்பமேளாவில் குளித்தெழு, சொர்க்கலோகம் கிடைக்கும்’’ என்று சொல்லுவதுதான் மதம் என்றால், சாத்திரம் என்றால், மக்கள் புத்தி மண் புழுதியாகி, மண்டையை வறட்டுத்தனமாகக் கட்டாந்தரையாக்கி, ‘‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!’’ என்று தன்னம்பிக்கையற்று, காலத்தைக் கடத்துவதுதான் வாழ்க்கைத் தத்துவம் என்றால், இதைவிடப் போக்கிரித்தனமும், புத்தி கெட்டப் போக்கும் வேறு என்னவாக இருக்க முடியும்? சிந்தப்பீர்!
இதற்குள் சுரண்டல் என்னும் சூட்சமம் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வீர்!
– மயிலாடன்
