டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
* சுயமரியாதை மிக்க மகளிர் இருக்கும் வரை சங்கிகளால் தமிழ்நாட்டை தொட முடியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “மதச்சார்பின்றி செயல்படுகிறேன், மதச்சார் பின்மை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றுவேன்.” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கருத்து.
* உன்னாவ் பாலியல் குற்றவாளி குல்தீப் சிங்கின் பிணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். ‘‘இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, குல்தீப் சிங் செங்கரின் பிணையையும், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டில்லி உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்கிறோம். மேலும் இந்த மனு தொடர்பாக குல்தீப் சிங் செங்கர் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள வணிக வளாகத்துக்குள் (மால்) அத்துமீறி நுழைந்து கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் சேதப்படுத்திய 7 பஜ்ரங் தள் நபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. அந்த நபர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 300 பஜ்ரங் தள் தொண்டர்கள் டெலிபந்தா காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு முக்கிய சாலையை கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் மறித்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக கிராம பஞ்சாயத்துகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர் கேட்டுக்கொண்டார்.
தி இந்து:
* திரிபுராவைச் சேர்ந்த அஞ்செல் சக்மா என்ற மாணவர், டேராடூனில் கொலை செய்யப்பட்டதை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பை பாஜக இயல்பாக்குகிறது என்றும், நாம் செயலிழந்த சமூகம் ஆகிவிடக் கூடாது என்றும் கண்டனம்.
* கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்: கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்தியாவின் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக “வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் அபாயகரமான அதிகரிப்பு” ஏற்பட்டிருப்பதாக கூறி, அது குறித்து “ஆழ்ந்த வருத்தத்தை” வெளிப்படுத்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
* பாஜகவில் உட்கட்சி பூசல்: வாஜ்பாய் நினைவாக கட்டப்பட்ட நூலகத்தை ஒரே நாளில் இருமுறை பாஜக அமைச்சர்கள் திறந்து வைத்தனர். ஒன்றிய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் கிருஷ்ண பால் குர்ஜார் மற்றும் அரியானா உள்ளாட்சி துறை அமைச்சர் விபுல் கோயல் ஆகியோர், 28.12.2025 அன்று பரிதாபாத்தில் உள்ள ஒரு நூலகக் கட்டடத்தை, சில மணி நேர இடைவெளியில் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக இருமுறை திறந்து வைத்தனர். இது பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அரியானா பிரிவில் உள்ள உட்கட்சிப் பூசலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
தி டெலிகிராப்:
* உ.பி. பஜ்ரங் தள் அட்டூழியம்: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் நண்பர்கள் அழைக்கப் பட்டதால், பஜ்ரங் தள் கும்பல் பரேலியில் பிறந்தநாள் விழாவை சீர்குலைத்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சரத் பவார் – அஜித் பவார் அணிகள் இணைந்தன: புனே மாநகராட்சி தேர்தலுக்காக என்சிபி பிரிவுகள் கைகோர்த்தன. ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள புனே மாநகராட்சி மற்றும் பிம்ப்ரி சின்ச்வட் மாநகராட்சித் தேர்தல்களுக்காக நேற்று (29.12.2025) தங்கள் கூட்டணியை இறுதியாக அறிவித்தன. இருப்பினும், வேட்பாளர்கள் தத்தமது கட்சிச் சின்னங்களிலேயே போட்டியிடுவார்கள்.
– குடந்தை கருணா
