வைக்கம்-மூன்றாம் நாள் கூட்டத்தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்
சென்னை, ஏப். 27- ஜாதி ஒழிப்பு, சமூகநீதி காத்திட மக்கள் போராட்டம்தான் முடிவு – வசதி, வாய்ப்பு, சுயநலம் விட்டுக் கொடுத்து போராட்டக் களத்திற்கு ஆயத்த மாவீர்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
ஏன்? எதற்காக? மூன்றாம் நாள் கூட்டம்
கடந்த 13.4.2023 அன்று ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?” என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியாரின் குற்றச்சாட்டு
அதற்கடுத்து ஒரு முக்கியமான செய்தி என்ன வென்றால், பழ.அதியமான் அவர்கள் எழுதிய புத்தகத் தில் உள்ளவற்றை சொல்கிறேன்.
‘‘இனிப் பெரியாரின் போராட்ட வாழ்க்கையில் வைக்கம் தொகுக்கப்பட்டுள்ளதை அறிவோம். இயல்பான பெரியாரின் பேச்சுகளே, அவரது சிந்தனைகளாக, நூலாக ஏற்படுத்திய தாக்கங்க ளைக் காலவரிசையில் பார்க்கலாம். பேச்சு முறை என்பது ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப அவ்வப்போதைய பார்வையில் பேசிக்கொண் டிருப்பதாகும். அதனால் வைக்கம் பற்றிய தொடரும் பகுதியில் கூறியது கூறல் விலக்கிவிட்டு, ஒவ்வொரு பேச்சிலும் வைக்கத்தின் பயனாய் குற்றம் என்றால் அக்குற்றம் மிகுதியும் நேர்ந்தி ருக்கும். அதை உருவாக்கிவரும் அவரது பார் வையைத் திரட்டிக்கொள்வது நோக்கம் என்பதை முன்குறிப்பாகச் சொல்லிவைக்கிறேன்.
சுயராஜ்யம் பெறுவோம், பிறகு சமூகப் பிரச் சினைகளை நமக்குள் பேசிச் சீர்செய்து கொள் ளலாம். எனவே நாட்டு விடுதலைக்கு முதலில் முயல்வோம் என்ற குரல் விடுதலைப் போராட்ட வரலாறு நெடுகவும் ஓங்கி ஒலித்தது. வைக்கம் பிரச்சினையில் இக்கருத்துப்படி எவரும் நடக்க வில்லை என்பது பெரியாரின் குற்றச்சாட்டு.
வைக்கத்தில் தெருவில் நடக்க எத்தனை பேர் ஜெயிலுக்குப் போக வேண்டி வந்தது? கல்பாத்தி யில் தெருவில் நடக்க 144 யார் வேண்டுகோளின் பேரில் போடப்பட்டது? அதற்காகச் சர்க்காரிடம் யார் போனது? நமக்குள் சரிப்படுத்திக்கொள்ளக் கூடாதா? என்கிற யோக்கியர்கள் இந்தச் சமயம் ஏன் சர்க்காரிடம் போக விட்டார்கள். பொது ஜனங்கள் பணத்தில் நடத்தப்படும் வேத பாட சாலையில் பிராமணன்தான் படிக்கலாம், சூத்தி ரர்கள் படிக்கக் கூடாது என்று சொல்லுகிறபோது நமக்குள் சரிப்படுத்திக் கொள்ளக் கூடாதா என்கிற பிரபுக்கள் எங்கே போயிருந்தார்கள்?” (குடிஅரசு, 22 நவம்பர் 1925).
சுயமரியாதையற்ற
சுயராஜ்யத்தால் என்ன பயன்?
அரசியல் விடுதலையால் அடையப்பெறும் சுயராஜ்யம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் எதேச்சதிகாரத்திற்குப் பயன்படும் என்று சமதர்மம் விரும்பிய பெரியார் கருதினார். அதனால் சுயராஜ்யத்தைத் தொடர்ந்து மறுதலித்தார்.
“… மனித உடல் தாங்கிய ஒருவன், அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க, உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதை உள்ளவனாவான்? அந்தச் சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால்தான் அவர்களுக்குக் கவலை என்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை ஒடுக்கிச் சுயமரியாதை அற்றுவைத்திருக்கும் ஒரு ‘இராட்சச’ சமூகத்தார் சுயராஜ்ய மடைவது மற்ற சமூகத் தாருக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்த்துதான் சுயராஜ்யம் தேடுவது. என்று சொல்லுவோமானால், அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாதபடியும் தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்திருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா?”
(‘குடிஅரசு’, 24 ஜனவரி 1926).
சத்யாகிரகமும் தியாகமும் உற்றவை
“வைக்கம் சத்தியாகிரகம் முடிவடைந்து வெகு நாள்களாகி விடவில்லை. அதற்குள்ளாக மற்றோரி டத்தில் சமத்துவத்தை நிலைநாட்டத் தோன்றியுள்ள சத்தியாகிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகின் றோம். அநீதியும் அக்கிரமமும் தொலைய வேண்டு மானால் வெறும் சட்டங்களாலும் எழுத்தாலும் பேச்சாலும் முடியாதென்றும் சத்தியாகிரகமும் தியாகமுமே உற்ற சாதனம் ஆகுமென்றும் பல முறை வற்புறுத்தியிருக்கின்றோம்.
சமத்துவ – சுயமரியாதைக்கு
எதிரான பார்ப்பனர்கள்
“திருவிதாங்கூர் இராஜ்யத்திலுள்ள பொதுரஸ் தாக்களும் பொதுக்குளங்களும் ஜாதிமத வித்தியாச மில்லாமல் பொது ஜனங்கள் அனுபவிக்கலாம் எனச் சில வருடங்களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர். ஆக கவர்ன்மெண்டார் பேரில் குற்றமில்லை. பிராமணர்கள் தவிர்த்த ஏனைய ஜாதிகளாகிய நாயர் முதலானவர்கள் தங்கள் சமூக மாநாடுகளில் பொது ரஸ்தாக்களிலும் பொதுக் குளங்களிலும் ஜாதி மத வித்தியாசங்கள் காட்டலாகாது எனத் தீர்மானம் செய்திருக்கின்றனர்; செய்து வருகின்றனர். ஆக பொதுஜனங்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் இடைஞ்சலாக இருப்பவர்கள் பிராமணர்களே ஆவார்கள்” (குடிஅரசு, 31 ஜனவரி 1926) என்ற பெரியார் அதற்கு ஆதாரம் உண்டு என்றார். சுசீந்திரத்தை அடுத்து பாலக்காட்டு கல்பாத்தியில் நிகழ்ந்த தீண்டாமை ஒழிப்பிலும் பெரியார் தொடர்ந்து முன்னின்றார்.
இன்றைக்கும் அந்தக் கேள்வி அப்படியே நிற்கிறது. இன்னுங்கேட்டால், பளிச்சென்று இருக்கிறது. அந்தக் கேள்விக்கு முக்கியத்துவம் நம் கைமேல் கிடைக்கிறது.
இன்றைக்கு ஏன் சமூகநீதிக்கு ஆபத்து?
இன்றைக்கு ஏன் மீண்டும் பழைய சனாதனத்தைப் பற்றி பேச்சு?
இன்றைக்கு ஏன் பேதத்தை வளர்ப்பதற்குப் புதுப்புது வியாக்கியானங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆகவேதான் நாம் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா கொண்டாடுகின்றோம் என்பது வெறும் வரலாற்றிற்காக அல்ல நண்பர்களே! இன்றைய நிலையில் இருந்து அதற்குத் தீர்வு காண வேண்டுமானால், வெறும் சட்டத்தினால் முடியாது; வெறும் சட்டப் போராட்டத்தினால் முடியாது. அரசாங் கங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் போக முடியும்.
பிறகு என்ன இதற்கு விடிவு? என்றால், மக்கள் போராட்டத்தின்மூலம்தான் இதற்கு விடை காண முடியும்.
உயர் ஜாதி நீதிபதிகள் சட்டம் செல்லாது
என்று கோடு போடுவார்கள்
வைக்கம் போராட்டம் அதுதான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவில்லை. அப்படியே வழக்குத் தொடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்? உயர்ஜாதிக் காரர்கள்தானே நீதிபதிகளாக அங்கே இருக்கிறார்கள். அவருக்கு இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தந்திரங்களைக் கையாண்டு, மக்கள் பிரதிநிதிகள் கஷ்டப்பட்டு தயாரிக்கக் கூடிய சட்டத்தையெல்லாம், சிவப்பு மையினால், அந்த சட்டம் செல்லாது என்று ஒரு கோடு போட்டுவிடுவார்கள்.
அப்பொழுது என்ன செய்ய முடியும்?
சட்டம் செல்லாது என்றுதான் சொன்னது வகுப்புவாரி உரிமையை – எப்பொழுது?
1925 ஆம் ஆண்டு காலத்திற்குப் பிறகு, 1928 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாரி உரிமை.
1928 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தது 1950. இடையில் எத்தனை ஆண்டுகள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆட்சிகள் மாறுகின்றன; இராஜகோபாலாச்சாரியார் ஆண்டார்; பிறகு ஆந்திரப் பார்ப்பனர் பிரகாசம் ஆண்டார். இவர்களுடைய காலத்தில் எல்லாம் முயற்சி செய்தார்கள் – வகுப்புவாரி உரிமை செல்லாது – வகுப்பு வாரி உரிமை ஆணையை எடுத்துவிடவேண்டும் என்று.
ஆனால், முடியவில்லை. அரசமைப்புச் சட்டம் வருகிறது.
வாதாடியது யார்?
அல்லாடி கிருஷ்ணசாமி அல்லவா?
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஒரு குறிப்பிட்ட பிரிவைப் பயன்படுத்தி, அவரே எழுதுகிறார்.
மருத்துவக் கல்லூரியில் மனுவே போடாத ஒரு பார்ப்பனப் பெண்மணி, எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது; காரணம் நான் உயர்ஜாதி என்பதால், என்னை வித்தியாசப்படுத்துகிறார்கள்; ஜாதி, மதம் எதையும் வித்தியாசப்படுத்தக் கூடாது என்று அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது. சமத்துவம் பேசுபவர் களாக அவர்களைக் காட்டிக்கொண்டு, அதற்காக யார் வாதாடுகிறார் தெரியுமா?
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வாதாடுகிறார்; உச்சநீதிமன்றத்தி லும் வாதாடுகிறார்.
பொதுவாக, அவ்வளவு பெரிய நிலைக்குப் போன வர்கள், நீதிமன்றத்திற்கு வந்து வாதாட மாட்டார்கள். ஏனென்றால், சீனியர் மோஸ்ட் அல்லவா!
தமது பெருமையைப் பின் தள்ளி
இனநலன் பேணும் பார்ப்பனர்கள்
ஆனால், தனது சுய கவுரவம், தகுதி முக்கியமா? தன்னுடைய இனத்தின் நலம் பாதுகாக்கப்படவேண்டியது முக்கியமா? என்றால், இராஜகோபாலாச்சாரியாராக இருந்தாலும், சர்.சி.பி.ராமசாமி அய்யராக இருந்தாலும், அல்லாடி கிருஷ்ணசாமியாக இருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும், இனம் முக்கியம், இனநலன் முக்கியம், தன்னுடைய பெருமை இரண்டாம்பட்சம்தான் என்று நினைப்பார்கள்.
ஆனால், நம்முடைய இனம் தாழ்ந்து போனதற்கும், வீழ்ந்து போனதற்கும் மறுபடியும் போராடவேண்டிய அவசியத்திற்குக் காரணம், இங்கே தலைகீழாக இருக்கிறது. இங்கே, இவன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறான்.
அதைத்தான் பெரியார் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு அழகாக ஒரு வார்த்தையைச் சொன்னார்.
சிறுபான்மையினர்தான் பார்ப்பனர்கள்; ஆனால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள். அய்யர், அய்யங் கார், சாஸ்திரி, சர்மா என்றாலும் ஒரே மாதிரிதான் இருப் பார்கள்.
ஆனால், நாம் பெரும்பான்மையராக இருந்தாலும், எல்லோரும் தனித்தனிதான்.
எல்லோரும் தனித்தனிதான், இவர்கள் ஏகமனதா கினால் அவர்கள் நம்மை எதிர்ப்பதெங்கே?
பழ.அதியமான் அவர்கள் எழுதிய புத்தகத்தில் நிறைய செய்திகள் இருக்கின்றன. அதை நீங்கள் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண் டிய செய்தி என்னவென்று சொன்னால், நீதிமன்றங்களை நாடினால் மட்டுமே நாம் சமூகநீதியை அல்லது மனித உரிமைகளைப் பெற்றுவிடுவோம் என்று நினைக்க முடியாது.
அப்படியானால், கலவரம் செய்ய வேண்டுமா? சட்டத்தை நாம் கையில் எடுத்துக்கொள்ளவேண்டுமா? என்றால், அப்படி செய்யக்கூடாது; அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால், நாம், எவ்வளவு தியாகங்களைச் செய் தாவது, நம்முடைய வசதிகளை, வாய்ப்புகளை, சுய நலத்தை விட்டுக் கொடுத்தாவது, தந்தை பெரியார் அவர்கள் போராட்டக் களத்தில், வைக்கத்தில் ஈடுபட்ட தைப்போல, நாம், நம்முடைய மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
மக்கள் போராட்டம்தான் இதற்கெல்லாம் ஒரே முடிவு.
ஏனென்றால், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியே, மக்களுக்காகத்தான் எல்லாமே!
ஆகவே, அந்த மக்களைத் தயாரிக்கவேண்டும். இதுதான் பெரிய பாடம்!
இன்றைய நிலை என்ன?
இந்தப் பாடம், முன்பு எப்பொழுதும் தேவைப் பட்டதைவிட, இப்பொழுது அதிகம் தேவைப்படுகிறது.
‘திராவிட மாடல் ஆட்சி’ எவ்வளவு அருமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதற்கு முட்டுக் கட்டை போடுகின்றனர். அதையும் தாண்டிச் சென்று, மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தியவுடன்தான், இங்கே இருக்கிற ஆளுநர் அந்த மசோதாவில் கையொப்பம் போட்டு அனுப்புவார்.
நீதிமன்றத்தில் ஒருவர் அமர்ந்துகொண்டு, பழைய ஆகமம் எங்கேயாவது இருக்கிறதா? என்று தேடிப் பிடித்து, இரண்டுவரியை எடுத்துக்காட்டிவிட்டு, உள்ளே வைத்துவிடுவார்.
இதுதான் இன்றைய நிலை!
ஆகவே நண்பர்களே, நான் பேசுவது என்னுடைய அறிவுப்புலன் என்னவென்று காட்டுவதற்காக அல்ல!
எந்த இழிவைப் போக்கவேண்டும் என்று சுயமரி யாதை இயக்கம் இந்த மண்ணில் பிறந்ததோ, அந்த இழிவைத் துடைக்கின்ற வகையில் நமக்கு வேறு வேலையில்லை; வேறு பணியில்லை. ஒரே இலக்குதான்!
ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.
ஜாதி ஒழிந்துவிட்டால், தீண்டாமையினுடைய வேரை வெட்டியதாக அர்த்தம்.
என்ஜினைக் கழற்றி விட்டால் ரயில் ஓடுமா? வேரை வெட்டிவிட்டால்
கிளை எப்படி வளரும்?
அந்தக் காலத்தில் என்னிடம் சிலர் கேள்வி கேட்டார் கள், ‘‘ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறீர்களே, ஜாதி, பிராமணர்களிடம்தான் இருக்கிறதா? ஏன் முத லியார், வன்னியரிடம் இல்லையா?” என்று.
அதற்கு நாம் பதில் சொல்லியிருக்கிறோம்.
எஞ்ஜினை கழற்றிவிட்டால், கம்பார்ட்மெண்ட்டை தனித்தனியே கழற்றவேண்டிய அவசியமில்லை. எஞ்ஜினைக் கழற்றிவிட்டால், ரயில் ஓடாது அல்லவா! அது தான் பெட்டிகளை இழுப்பது. வேரை வெட்டிவிட்டால், அதற்குப் பிறகு கிளை எப்படி வளரும்?
வேதங்கள்தானே ஜாதி! ஜாதி, திருக்குறளில் இருக்கிறதா?
ஆகவே, நண்பர்களே! ஆதாரங்களை இனி சொல்லிக்கொண்டிராமல், மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள்? எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பது முக்கியமல்ல; 69 சதவிகிதம் எப்படி வந்தது?
இன்றைக்கு அதை அனுபவிக்கின்றவர்களுக்கு யாரால் வந்தது? யார் காரணம்? என்று தெரியுமா?
அவர்களிடம் இருந்து நாம் நன்றியையோ, சான்றி தழையோ எதிர்பார்க்கின்றோமா என்றால், நிச்சயமாக இல்லை.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லாம் அதிசயப்படுகிறார்கள், தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்படி சாத்தியப்பட்டது என்று.
ஆகவே நண்பர்களே, மக்களால் முடியும்! மக்களை ஆயத்தப்படுத்த நம்மால் முடியும்!
நம்மால் முடியாதது, வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.