தஞ்சாவூர், டிச.29– தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து தற்போது சோழர் அருங்காட்சியகம் அமைக்க, ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தீபகற்பத்தின் வரலாறு என்பது வடக்கில் இருந்து எழுத கூடாது, மாறாக தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு இரண்டு மிகப்பெரிய ஆதாரங்கள் நம்மிடையே இருக்கின்றன. ஒன்று கீழடி. இன்னொன்று பொருநை. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 4ஆம் கட்ட அகழாய்வில், செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் உறைகிணறுகள், மழைநீர் வடியும் வகையில் இரு துளைகளுடன் விரல்களால் அழுத்திப் பள்ளமிடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
இது தவிர விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செம்புப் பொருட்கள், இரும்புக் கருவிகளின் பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணிக்கற்களும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை ஆய்வு செய்ததில் கீழடி பொருட்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு சமூகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவை பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணமாக கீழடி இருக்கிறது.
பொருநை
பொருநை இதைவிட மிகப் பழைமையான இடமாகும். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,200 ஆண்டுகள் பழைமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மனித நாகரிகம் நதிக்கரையில்தான் தோன்றி வளர்ந்தன. எகிப்தில் நைல் நதி நாகரிகம், வட இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் என்பதை போல தென்னிந்தியாவில் தாமிரபரணி ஆற்றில் மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவில் பீட்டா அனாலிடிக் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வில் இந்த நெல் சுமார் 3200 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெல்மணிகள் முதுமக்கள் தாழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. தமிழர்களின் பெருமையை பன்னாட்டு அளவில் வெளிப்படுத்தும் விதமாக இந்த கண்டுபிடிப்புகளை தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறது.
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்
அந்த வகையில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தஞ்சையிலும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ஒரு மிகப்பெரிய சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, தமிழ்நாடு அரசு கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
இதனையடுத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்திருக்கின்றன. சோழர்களுக்காக தஞ்சாவூரில் 51 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு
தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
புதுடில்லி, டிச. 29– பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி (PhD) மாணவர் சேர்க்கைக்கும் ‘நெட்’ (NET) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
தேசிய தேர்வுகள் முகமை (NTA) சார்பில் இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) கணினி வழியில் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டிற்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு, டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டுகளை (Hall Ticket) என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு அனுமதிச் சீட்டுகளை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
