செங்கல்பட்டு, டிச. 29– செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை சார்பில், சுமார் 22 இடங்களில் நீர் மற்றும் நிலப் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் 84 வகையான பறவை இனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பறவைகள் கணக்கெடுப்பு
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, பறவை இனங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகளில் மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை 2023-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன்படி, வனத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் செய்யூர் உள்ளிட்ட 22 ஈர நிலப் பகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் வனத் துறையினருடன் இணைந்து தன்னார்வ அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதற்கட்டமாக நடைபெற்ற இந்த நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பில் 84 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக நிலப்பரப்புகளில் உள்ள பறவைகளைச் சேகரிக்கும் கணக்கெடுப்புப் பணி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
