பேராசிரியர் டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ்
நம் உடல் உறுப்பு களில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவு கல்லீரலின் உதவியால் செரிமானமாகி அதன் மூலம் நச்சுகள் அகற்றப் படுகின்றன.
கல்லீரலைப் பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளைத் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. மது வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் இறுகி மஞ்சள் காமாலை வயிற்று வீக்கம் போன்றவை ஏற்படும்.
சுவற்றில் அடிக்கும் பெயின்ட், மூட்டைப்பூச்சி மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. எனவே, இவற்றைப் பயன்படுத்தும்போது கதவு, ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். மூக்கில் மாஸ்க் அல்லது துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும். மேலும், உடலை மூடியபடி ஆடை அணிந்தே மருந்து தெளிக்க வேண்டும்.
ஹெபடைட்டிஸ் பி அல்லது சி வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலையால் கல்லீரல் நோய் உருவாகும். இதற்கு தகுந்த மருத்துவம் பெறாவிட்டால் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் புற்று நோய் போன்றவை உருவாகலாம்.
வீட்டில் யாருக்காவது வைரஸ் தொற்று இருப்பின் நோய்க்கு ஆளாகாத மற்றவர்கள் இந்த நோய் உள்ளதா என்று சோதனைக்குப் பின் உடலில் நோயில்லாத நிலையில் ஆறு மாதத்திற்குள் மூன்று தடுப்பு ஊசிகள் போட வேண்டும்.
கல்லீரலைப் பாதுகாக்கும் முறைகள்
உணவில் மாவுப் பொருள்கள், புரதம், வைட்டமின், கொழுப்பு ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். வறுத்த மற்றும் கொழுப்பு உணவுகளைக் குறைக்க வேண்டும். புகைப்பதை நிறுத்த வேண்டும். ஊறுகாய், கருவாடு, வத்தல் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
உணவில் கூடுதலாக நார்ப் பொருள் உள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், கீரை, முழு தானியங்கள், பருப்பு ஆகியவற்றை உண்ண வேண்டும். உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடல் பருமன், வாந்தி, உடல் சோர்வு மற்றும் தோல், கண் மஞ்சளாக மாறுதல், வயிறு வீக்கம், பொறுக்க முடியாத வயிற்று வலி, தீராத உடல் அரிப்பு, மஞ்சள் நிறத்துடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
