மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு பின் வாங்கியதைப் போன்றே, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திலும் பின்வாங்குகிற நிலை வரும்!
சட்டத்தை மாற்றவில்லையானால்,
பா.ஜ.க. ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள்!
பா.ஜ.க. ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள்!
ஓசூர் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
ஓசூர், டிச.29 மூன்று வேளாண் சட்டங்களை பின் வாங்கியதைப் போன்றே நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. பின்வாங்குகிற நிலை வரும். அப்படி சட்டத்தை மாற்றவில்லையானால், ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள் என்றும், வாயால் ஆட்சி செய்வதுதான் பா.ஜ.க. ஆட்சி. செயலாலும் ஆட்சி செய்வதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்றும் கழகத் தலைவர் ஆசிரியர் ஓசூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கடும் குளிரிலும் எழுச்சிகரமாக உரையாற்றினார்.
- மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு பின் வாங்கியதைப் போன்றே, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திலும் பின்வாங்குகிற நிலை வரும்!
- சட்டத்தை மாற்றவில்லையானால், பா.ஜ.க. ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள்!
- ஓசூர் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
- கழகத் தலைவரின் வருகை!
- ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
- தனி மனிதர்களுக்கோ, தனிக் கட்சிகளுக்கோ இடையிலான போட்டியில்லை!
- “மதத்தால் நாம் மாறுபட்டிருந்தாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்!”
- பங்கேற்றோர்
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மாடல் ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!’’ தொடர் பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்புக் கூட்டம் என்று இருபெரும் நிகழ்வுகளாக நேற்று (28.12.2025) மாலை, ஓசூர் கழக மாவட்டம் சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் திறந்தவெளி பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயமரி யாதைச் சுடரொளி பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களை நினைவுபடுத்தும் விதமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்குப் பின்புறமாக கோட்டை மாரியம்மன் வளைவு இருந்தது. பழைய பெங்களூரு சாலையில் இருபுறங்களிலும் கழகக் கொடிகளும், பதாகைகளும் காண்போர் கவனத்தைக் கவ்வி இழுத்தன.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, மாவட்ட துணைத் தலைவர் ப.முனுசாமி, மாவட்ட மகளிரணித் தலைவர் து.சங்கீதா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.செல்வி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் அ.கிருபா, துணைச் செயலாளர் ச.எழிலன், ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஜாகிர் ஆலம், தமிழ் தேச குடியரசு இயக்கம் தோழர் க.இர.தமிழரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் முகமது உமர், புரட்சிகர தொழிலாளர் முன்னணி பொறுப்பாளர் மணிவாசகம், ஆதித் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் ஷாநவாஸ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் பொறுப்பாளர் ஒப்புரவாளன், காங்கிரஸ் கட்சி மாநகர அமைப்பாளர் பி.சாதிக்கான், சி.பி.எம்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.மகாலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் யு.காதர், சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் தோழர் இள.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
கழக மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்கவுரை வழங்கினார். தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ், தி.மு.க. ஓசூர் நகர மேயர் சத்யா, கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்தும், நிகழ்ச்சிக்கான இணைப்புரை வழங்கியும் சிறப்பித்தார்.
கழகத் தலைவரின் வருகை!

கழகத் தலைவர் குறித்த நேரத்தில் வருகை தந்தார். எழுச்சிகரமான ஒலி முழக்கங்களோடு வரவேற்கப்பட்டார். அவ்வெழுச்சிகரமான ஒலிமுழக்கங்களால் ஈர்க்கப்பட்டு, மேடையை, கூடியிருந்த பொதுமக்கள் கூர்ந்து கவ னித்தனர். நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர், ‘‘இவருதான் வீரமணியா?” என்று பக்கத்திலிருந்த ஒருவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர், “ஆமாம், அவர்தான் திராவிடர் கழகத் தலைவர். அவ ருக்கு வயது 93 ஆகிறது” என்றார். கேள்வி கேட்டவர், “ஆ…” என்று வாயைப் பிளந்துவிட்டார். அதேபோல், ஜார்க்கண்ட்டில் இருந்து வேலை வாய்ப்புக்காக வந்து, ஓசூரில் தங்கிவிட்ட இளைஞர்கள் சூரஜ், பரத் ஆகியோர் ஆசிரியர் வருகையையும், அவ ருக்கு அளிக்கப்பட்ட மரியாதையையும் கூர்ந்து கவனித்து வியந்துகொண்டிருந்தனர். அவர்கள் பார்த்த ஊரிலிருக்கும் பெரியவர்கள் எல்லாம் ஆசிரியருக்கு மரியாதை செய்வதையும், வணக்கம் செலுத்து வதையும் கண்டு, பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்க வேண்டும். உடைந்த தமிழில் நன்றா கவே பேசினர். கருப்புச் சட்டை அணிந்த தோழர் ஒருவர், ஆசிரியரின் சிறப்புகளை அவர்களிடம் கூறிக்கொண்டி ருந்தார். அவர்கள் முகத்தில் வியப்புக்குறி மேலோங்க கேட்டுக் கொண்டிருந்தனர். அதே போல், தி.மு.க. மகளி ரணி தோழர் ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் மேடையேறி ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து விட்டு, யாரும் எதிர்பாராமல் படக்கென்று ஆசிரியர் காலைத் தொட்டு வணங்கிவிட்டு, விறுவிறுவென்று கீழே இறங்க முயன்றார்.
ஆசிரியர், சட்டென்று அவரை அழைத்து, ‘‘யார் காலிலும் விழக்கூடாது” என்று அறிவுறுத்தி, தி.மு.க. வில் நன்றாக களப்பணி ஆற்ற அறிவுறுத்தினார். ஒருபக்கம் இப்படி பலரும் பலவிதமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஆசிரி யருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்ய நெருக்கியடித்துக் கொண்டு வருவதும், மரியாதை செய்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வதுமாக இருந்தனர். அதனால் அந்த இடமே மிகுந்த பரபரப்பாக இருந்தது. இடையில் மின்சாரம் நின்று போய், ஜெனரேட்டர் மூலமாக நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. அந்த வகையில் அடுத்து ‘பெரியார் உலக’ம் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் நன்கொடை வழங்கியோர் பட்டியலை வாசித்தும், மேடைக்கு வரவழைத்தும் ஆசிரியரிடம் காசோலையை வழங்கும்படி செய்து ஒருங்கிணைத்தார். தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள முதல் தவணைத் தொகை ரூ.14 லட்சம் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, ஓசூர் குமார் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தார். ஓசூர் கழக மாவட்டத்தின் சார்பாக ரூ.19 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.
நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
தொடக்கத்தில் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பெரியார் உலகத்தின் முக்கியத்துவம்; அதில் என்னென்ன இடம் பெறப் போகின்றன என்பது பற்றி விவரித்தார். தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். மீது அவதூறு சொல்வதற்காக நாம் பேசவில்லை என்று குறிப்பிட்டு, அது எப்படிப்பட்ட இரட்டை நாக்கு – இரட்டைப் போக்குடையது என்பதை விளக்கி, இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.ஆட்சி என்று சேர்த்துச் சொன்னார். மனுதர்மம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நம்மை அடிமையிலும் அடிமையாக வைத்தி ருந்த கொடுமைகளைச் சுருங்கச் சொல்லி விட்டு, ‘‘அப்படிப்பட்ட மனு தர்மத்திற்கு விடைகொடுத்து, மனித தர்மத்தை நிலைநாட்டியதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!” என்று உரத்துச் சொன்னார். மக்கள் அனிச்சையாகக் கைதட்டி ஆரவாரித்தனர். பின்னால் இருந்து விசில் அடிக்கும் ஓசையும் கேட்டது.
தனி மனிதர்களுக்கோ, தனிக் கட்சிகளுக்கோ இடையிலான போட்டியில்லை!
மேலும் அவர், “புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்துக்கு மனுதர்மம் தான் வரவேண்டும் என்பவர்களுக்கும், நமக்கும் இடையில் நடப்பதுதான் இந்தத் தேர்தல்” என்றார். தான் சொன்னதை மக்கள் விளங்கிக்கொண்டார்களா என்ற அய்யத்தில், ஒரு கையில் மனுதர்மத்தையும், மற்றொரு கையில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு, “இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மனுதர்மத்திற்கும் இடையில் தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. தனி மனிதர்களுக்கோ, தனிக் கட்சிகளுக்கோ இடையிலான போட்டியில்லை” என்று அறுதியிட்டு கூறினார்.
“மதத்தால் நாம் மாறுபட்டிருந்தாலும்
மனதால் ஒன்றுபட்டவர்கள்!”
மனதால் ஒன்றுபட்டவர்கள்!”
தொடர்ந்து, “மற்ற மற்ற நாடுகளில் சமூகப்புரட்சி என்பது இரத்தப்புரட்சி மூலம் வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் பல நூற்றாண்டு கால அடிமைத்தனத்தை ஒரு நூற்றாண்டில் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது” என திராவிடர் இயக்கத்தின் பெருமையை, அருமையை பளிச்சென்று புரியும்படி விளக்கினார். இதையே அறிஞர் அண்ணா, ‘‘Putting centuries in a small capsules’’ என்று பெரியாரின் பெருமையை இரத்தினச் சுருக்கமாகக் கூறியதைச் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை விளக்க, “மதத்தால் நாம் மாறுபட்டிருந்தாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்” என்று சுருங்கச் சொல்லி பெருக விளக்கினார். தொடர்ந்து தங்கம் விலை, முட்டை விலை என்று விலைவாசி ஒரு பக்கம் இருப்ப தையும் அதையெல்லாம் கவனிக்காமல் பா.ஜ.க. ஆட்சியினர், தாங்கள் ஆளாத மாநிலங்களுக்கு வஞ்சகம் செய்வதைச் சுட்டிக்காட்டினார். ஆனாலும் ‘திராவிட மாடல்’ அரசு அனைத்துத் துறைகளிலும் முதன்மை வெற்றிகளை பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தடுமாறுவதை குறிப்பிட்டுக் காட்டினார். ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
மூன்று வேளாண் சட்டங்களை பின் வாங்கியதைப் போன்றே நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் ஒன்றிய பா.ஜ.க. பின்வாங்குகிற நிலை வரும். அப்படி சட்டத்தை மாற்றவில்லையானால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள். வாயால் ஆட்சி செய்வதுதான் பா.ஜ.க. ஆட்சி. செயலால் ஆட்சி செய்வதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நிறைவாக, ‘‘எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் ‘திராவிட மாடல்’ அரசு மக்கள் செல்வாக்குடன் மறு படியும் ஆட்சிக்கட்டிலில் அமரும்” என்று பலத்த கரவொலியுடன் தமது உரையை நிறைவு செய்தார். அதன்பிறகு மேடையிலேயே பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் நகராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பொதுமக்கள் என அனை வரிடமும் பிரியா விடைபெற்று சென்னையை நோக்கி புறப்பட்டார்.
நிறைவாக மாவட்டச் செயலாளர் மா.சின்னசாமி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் பி.முருகன், மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.சுமன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் எம்.கண்ணன், சி.பி.எம்.மாநகரச் செயலாளர் நாகேஷ் பாபு, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திராவிடமணி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, ஓசூர் மாநகரத் தலைவர் து.ரமேஷ், ஓசூர் மாநகரச் செயலாளர் பெ.சின்ராசு, மாவட்ட இளைஞரணித் தலைவர் பி.டார்வின் பேரறிவு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.வா.மதிவாணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பி.செந்தமிழ் பகுத்தறிவு, திராவிடர் கழக தொழிற்சங்கம் தி.பாலகிருஷ்ணன், தோழர்கள் ஈரோடு பாண்டியன், கோ.சுரேஷ், பெ.சிவாஜி மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடியும் வரையிலும் கடும் குளிரில் அமர்ந்து கருத்துகளை செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டார்.
