* பெரியாருக்கு இன்று சமூகத்தின் மீதான பொருத்தப்பாடு என்ன? 4 பெரியார் கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து நிற்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? 4பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தது ஏன்?
தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது, என்னிடம்
ஏன் வருகிறீர்கள் என்று கேட்டவர் அம்பேத்கர்!
ஏன் வருகிறீர்கள் என்று கேட்டவர் அம்பேத்கர்!
- * பெரியாருக்கு இன்று சமூகத்தின் மீதான பொருத்தப்பாடு என்ன? 4 பெரியார் கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து நிற்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? 4பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தது ஏன்?
- தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது, என்னிடம் ஏன் வருகிறீர்கள் என்று கேட்டவர் அம்பேத்கர்!
- பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர்!
- அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்!
- பெரியாருடைய கொள்கை வாரிசுகள் நாங்கள்!
- பெரியாரியம் தனித்தன்மையுடன் சுதந்திரமாகவே என்றும் செயல்படும்!
- பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிவரும் கழகம் தி.மு.க.
- வரலாற்றையும், உண்மையையும் புறக்கணிக்கும் செயலாகும்!
- தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு?
- சுயமரியாதை உணர்வுள்ள எவருமே பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான்!
- நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
- த.வெ.க.வின் கொள்கையல்ல அது!
- தமிழுக்குப் பெரியார் ஆற்றிய தொண்டு
- பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது!
இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது என்னிடம் ஏன் வருகிறீர்கள்? என்று கேட்டவர் அம்பேத்கர் என்ற தகவல் உள்பட அடங்கிய பேட்டி வருமாறு:
கடந்த டிசம்பர் 24 அன்று வெளிவந்துள்ள அப் பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இப்போது 93 வயது ஆகிறது. ஆனாலும், ஓர் இளம் அரசியல்வாதியைப் போலவே அவர் சுறுசுறுப்பாக வாழ்கிறார். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலாவது அவர் கலந்து கொள்ளாமல் இருப்பதே இல்லை. பல சமயங்களில் இயக்கம் சார்ந்த நூல் வெளியீடு, வீர வணக்கக் கூட்டங்கள், திருமண விழாக்கள் என்று ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் கூட அவர் பரப்புரைப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 24 ஆம் நாள் திராவிடர் கழகத்தின் வழிகாட்டி தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு நாள் என்பதால் அதற்கான பணிகளில் திராவிடர் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வரும் சூழலில், பெரியாரியலின் மாண்பு, நிலைத் தன்மை குறித்தும், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கத் திராவிடர் இயக்கம் எதிர்கொள்ளும் போராட்டங்கள்பற்றியும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்காக ஜெயா மேனன் உடனான பேட்டியில் கி.வீரமணி உரையாடினார். அப்பேட்டி வருமாறு:
பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர்!
செய்தியாளர்: திராவிடர் கழகம் மேலும் வளர்ந்து செழித்தோங்க தாங்கள் எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்?
ஆசிரியரின் பதில்: பெரியாரின் தொண்டர்களுக்கு இது ஓர் எளிமையான பணி. ஒரு யுத்தத்தில் பல போர்கள் நிகழும். எத்தனை சோதனைகள் வந்தாலும், இடையூறுகள் ஏற்பட்டாலும் நாங்கள் அயராமல் போராடி பல போர்களில் வெற்றி பெற்று வருகிறோம். இன்னும் யுத்தம் முடியவில்லை. அதிலும் வெல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர். அவர் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர். அவரது இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், எதேச்சாதிகாரப் போக்கையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக அவற்றை முறியடித்தவர் பெரியார்.
அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்!
எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார். எமர்ஜென்சியை எதிர்த்ததாலேயே கலைஞருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. எத்தனை இன்னல்கள் வந்தாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். இன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அன்று இளைஞர். திருமணமான ஒரே மாதத்தில் அவரும் கைது செய்யப்பட்டார். ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நான் இருந்த சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டார். எட்டடி நீளமும் எட்டடி அகலமுமாக இருந்த அந்தக் கொட்டடியில் எட்டு நபர்கள் அடைக்கப்பட்டிருந்தோம். சிறுநீர் கழிக்க ஒரு மண்பா னையும், குடிநீருக்காக ஒரு மண்பானையும் மட்டுமே அந்த அறையில் இருந்தன. எல்லாவிதமான கொடுமைகளையும், சகித்துக்கொள்ளும் மனஉறுதியும், பயிற்சியும் பெற்றவர்கள் நாங்கள். அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்! அதுதான் எங்களுக்கு விவேகம் தந்தது. அதையே நாங்கள் எங்கள் தொண்டர்களுக்கும் போதித்து வருகிறோம்.
செய்தியாளர்: அய்ம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று சமூகத்தின் மீது பெரியாரியத்தின் பொருத்தப்பாடு எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களின் வாழ்வும், அரசியலும் அதையும் கடந்து வளர்ந்துள்ளனவா?
பெரியாருடைய
கொள்கை வாரிசுகள் நாங்கள்!
கொள்கை வாரிசுகள் நாங்கள்!
ஆசிரியரின் பதில்: இன்றைய காலகட்டத்திற்குத் தான் பெரியாரும், அவருடைய கொள்கைகளும் மிக அவசிய மாகத் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பாலின சமத்துவம், மகளிர் உரிமை போன்ற எங்கள் கொள்கைகளை எதிர்த்த எதிரிகள் குறைந்தபட்ச அறிவு நேர்மை உடையவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆரியக் கூட்டம் ஸநாதனம் என்ற பெயரில், வருணாஸ்ரம தர்மத்தையும், ஜாதியையும் நிலை நாட்ட நினைக்கிறது. அது சமத்துவத்தை விரும்பவில்லை.
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு பெரியார் தான். ஏனெனில் அவர் ஒரு சமுதாய விஞ்ஞானி. பொய்யும், புரட்டும் நிறைந்த வேஷதாரி சாமியார்கள் போல் வாழ்ந்தவர் அல்ல அவர்! எதற்காகவும் அவர் ஆசைப்பட்டதுமில்லை, ஏங்கியதுமில்லை. அவருடைய கொள்கை வாரிசுகள் நாங்கள்.
பெரியாரியம் தனித்தன்மையுடன்
சுதந்திரமாகவே என்றும் செயல்படும்!
சுதந்திரமாகவே என்றும் செயல்படும்!
செய்தியாளர்: பெரியாரியல் உயிர்ப்புடன் இருக்கப் போராடி வருவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தற்போது இந்தப் போராட்டத்தை திராவிடர் கழகத்திற்குப் பதிலாக தி.மு.க. முன்னெடுத்து நடத்துவதாகக் கருதலாமா?
ஆசிரியரின் பதில்: தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். நாங்கள் போர்க்களத்தில் பணி யாற்றும் தூசிப் படையினர் போன்றவர்கள். நாங்கள் தி.மு.க.வுக்குப் பக்கபலமாக, பாதுகாப்பு அரணாக சென்ட்ரி கடமையாற்றுவோம்.
அரசியல் களம் ஓர் எல்லைக்கு உட்பட்டே உள்ளது. இன்றைய தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் நிர்வாகத்திறன் அற்புதமானது. ஆற்றல் மிக்க ஒரு மக்கள் நல ஆட்சி இது. ஆனால், எந்த ஒரு சிறிய மாற்றத்திற்கும் அது தன்னிடம் கையேந்தி நிற்கவேண்டும் என்றே ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், மாநில அரசின் அதிகாரங்களைப் பொறுத்தவரை எந்தவிதமான சமரசத்திற்கும் தி.மு.க. உடன்படாது; அடிபணியாது.
பெரியாரும், அவருடைய கொள்கைகளும், கோட்பாடு களும் மட்டுமே ஒரே மருந்து. எனவே தான், நாங்கள் பெரியாரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். எங்கள் இயக்கம் என்றும் கலையாது. வேறு எவருடனும் இணையாது. பெரியாரியம் தனித்தன்மையுடன் சுதந்திரமாகவே என்றும் செயல்படும்.
பெரியாரின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றிவரும் கழகம் தி.மு.க.
பின்பற்றிவரும் கழகம் தி.மு.க.
செய்தியாளர்: பெரியாரின் கொள்கைகளுடன் ஒருங்கி ணைந்து இருப்பது யார்? தி.மு.க.வா, அ.தி.மு.க.வா?
ஆசிரியரின் பதில்: உங்கள் கேள்வி ‘கருப்பா – வெள்ளையா? எது பளிச்சென்று தெரியும்?’ என்று கேட்பது போல் உள்ளது. பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும் கழகம் தி.மு.க.
ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சிக்கு எப்போதுமே அரசியல் சார்ந்த சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனாலும், சமூகக் கொள்கைகளில் அது ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது. எனவே, பரப்புரைகள், அமைதியான போராட்டங்கள் போன்ற சீரிய அணுகுமுறைகளுடன் சமூகக் களத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, திராவிடர் கழகம் பணியாற்றும். அவற்றை சட்டமாக்கும் பணிகளை இயன்றவரை தி.மு.க. நிறைவேற்றும்.
செய்தியாளர்: பெரியார் ஏன் தமிழ்நாட்டிற்குள் மட்டும் சுருங்கிவிட்டார்? அம்பேத்கரியம் உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ளது போல், பெரியாரியம் ஏன் பரவலாக அறியப்ப டாமல் உள்ளது?
வரலாற்றையும், உண்மையையும்
புறக்கணிக்கும் செயலாகும்!
புறக்கணிக்கும் செயலாகும்!
ஆசிரியரின் பதில்: பெரியாரின் தாக்கத்தை ஒரு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ குறுக்கிவிட முடியாது. அவர் வாழ்ந்த காலத்திலேயே, மொழி – புவியியல் எல்லை களைக் கடந்தவர் பெரியார். அவரை வடநாட்டிற்கு வரு மாறு அம்பேத்கர் மட்டுமல்ல, எம்.என்.ராய் போன்ற பல சிந்தனை யாளர்களும், தேசியத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
பெரியார் சிந்தனையின் தாக்கத்தால் தான் சமூகநீதி பற்றிய புரிதல் இந்தியா முழுவதும் அரசியல் களத்தில் ஏற்பட்டது. பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் இந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் இன்று உருவாகியுள்ளன. நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழிகளிலும் பெரியாரின் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் நிறைந்த மொழியாக்க நூல்கள் விரும்பிப் படிக்கப்பட்டு வருகின்றன.
பெரியார் – அம்பேத்கர் படைப்புகளும், பரவலாக இந்தியாவிலும், பல உலக நாடுகளிலும் முக்கியமாக இளைய தலைமுறையினரால் படிக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. குறுகிய எல்லைகளுக்குள் பெரியாரை அடைக்க முயலுவது வரலாற்றையும், உண்மை யையும் புறக்கணிக்கும் செயலாகும்.
தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு?
செய்தியாளர்: பெரியாரியம் தலித், தமிழ்த் தேசிய அமைப்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறதா?
ஆசிரியரின் பதில்: அவர்கள் தமிழர்களும் அல்ல, தேசியவாதிகளும் அல்ல. தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு? இது ஒரு ஏமாற்று அரசியல். சில தலித் அறிவுஜீவிகளின் அணுகுமுறை சரி என்றும் கூற முடியாது. “பெரியார் இங்கு இருக்கும்போது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று அம்பேத்கரே ஒரு முறை அவர்களைக் கேட்டிருக்கிறார். அந்த அறிவு ஜீவிகளுக்கு அவர் கேட்ட கேள்வியே மிகச் சரியான பதில்.
சுயமரியாதை உணர்வுள்ள எவருமே
பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான்!
பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான்!
செய்தியாளர்: பெரியாரியம் என்ற சுடரை ஏந்தி, சமூக நீதிக்காகப் போராட புதிதாக எவரேனும் முன்வந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?
ஆசிரியரின் பதில்: எந்த அரசியல் அமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் எல்லோருமே பகுத்தறிவாளர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் சமூக அநீதியை அடியோடு அழித்து சமூகநீதியை நிலைநாட்டுபவர்களாக இருக்க விரும்புகிறார்கள். சுயமரியாதை உணர்வுள்ள எவருமே பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான். மானுட உயர்வுக்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெரியார் என்ற சுடரை ஏந்தியவர்கள் தான். பெரியாரை எங்கள் ஏகபோக உரிமை என்று எப்போதும் நாங்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை.
செய்தியாளர்: பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. பார்ப்பன எதிர்ப்பு என்பது இன்றும் தேவைப்படுகிறதா?
ஆசிரியரின் பதில்: மானுட இழிவும், பாகுபாடுகளும் தான் பார்ப்பனியம். மனித் தன்மை இழந்தவர்களை மீண்டும் மானுடர்களாக மாற்றுவதே எங்கள் பணி. எனவே தான், நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம். பெரியார் இயக்கம் வன்முறையை நாடாத, மனிதநேய இயக்கம். ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தீவிரமாக எதிர்க்கும் இயக்கம்.
நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
செய்தியாளர்: நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பெரியாரைத் தங்கள் கொள்கை வழிகாட்டி என்கிறாரே அவர்?
ஆசிரியரின் பதில்: முதல் பொதுத் தேர்தலிலிருந்து அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் வரை எத்தனையோ பேர் வந்ததையும், போனதையும் பார்த்து, அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கு இது மற்றுமொரு சுவாராஸ்யமான அத்தி யாயம். அவ்வளவே! எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் திரைப்பட நடிகர்களாக மட்டுமே இருக்காமல், திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தினார்கள். எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தில் இணைந்திருந்தார்; பரப்புரையாளராகவும் இருந்தார். ஜெயலலிதாவும் அவரைப் பின்பற்றியே செய லாற்றி வந்தார்.
த.வெ.க.வின் கொள்கையல்ல அது!
செய்தியாளர்: வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர், அம்பேத்கர் மட்டுமின்றி பெரியாரும் தங்களின் வழிகாட்டித் தலைவர்கள் என்றெல்லாம் சொல்கிறாரே நடிகர் விஜய்?
ஆசிரியரின் பதில்: இது ஒரு ஃபார்முலா. அவருடைய கொள்கையல்ல.
செய்தியாளர்: தமிழ்த் தேசியம், பெரியார் எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அரசியல் செய்து வரும் சீமானின் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆசிரியரின் பதில்:தெளிவான மனநிலையும், மானுடப் பண்பும் நிறைவந்தவர்கள் பற்றி மட்டும் தான் நான் பதில் சொல்வேன். நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.
தமிழுக்குப் பெரியார் ஆற்றிய தொண்டு
செய்தியாளர்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் இகழ்ந்ததாக நிர்மலா சீதாராமன் விமர்சித்து வருகிறாரே?
ஆசிரியரின் பதில்: பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி அவருடையது. இது ஒரு திரிபுவாதம். ஆயிரம் நிர்மலாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் பெரியாரின் பிம்பத்தை ஒழித்துவிட முடியாது. தமிழ் மொழிக்கு அவர் ஏகபோக உரிமையாளர் அல்ல. தமிழ் மொழி மீது உண்மை யான பற்றுள்ளவர்கள் அவருடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். அவர் அறிமுகம் செய்த மாற்றங்களை அகில உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மொழி என்பது போர்க்கருவி போல் இருக்கவேண்டும். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வார்த்தைகளுக்கு மாறுபட்ட பொருள் கொள்ளப்படுவது உண்டு. பெரியார் சொன்ன பொருள் வேறு. இதுதான் உண்மை.
பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது!
செய்தியாளர்: உங்களுக்கு வாரிசாக இயக்கத்தில் எவரை யேனும் உருவாக்கி வருகிறீர்களா அல்லது உங்களுக்குப் பின் பெரியாரியத்தைத் தொடர்ந்து தி.மு.க.வே போற்றிப் பாதுகாத்துவரும் என்று கருதுகிறீர்களா?
ஆசிரியரின் பதில்: மனிதநேயமும், சுயமரியாதையும் நிறைந்த ஒரு மக்களாட்சிக்கு, ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குப் பெரியாரியம் அவசியமான அரசியல். பெரியார் என்றென்றும் தேவைப்படுபவர். பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் அடிச்சுவட்டில் இயங்கும் தி.மு.க. என்றுமே மக்களின் நலனுக்காகப் பாடுபடும். பெரியாரின் இயக்கம் ஒரு சமூக இயக்கம்; அறிவியல் இயக்கமும் கூட. அறிவியல் என்றுமே தோல்வியடையாது. பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது.
நன்றி. ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ – 24.12.2025
மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்
உதவி: சமா
