சென்னை, டிச.27- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று (26.12.2025) நடைபெற்றது.
இத்துடன் கட்சியை தமிழ் நாட்டில் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்குவகித்த அமீர் ஹைதர்கான் மற்றும் தொழிற்சங்கத்தலைவர் கே.டி.கே.தங்கமணி ஆகியோரின் நினைவு நாளையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வுகளுக்கு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
மேனாள் மாநில செயலாளர் முத்தரசன் கொடி ஏற்றி வைத்தார். செந்தொண்டர் அணிவகுப்பு நடந்தது. பின்னர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், 80 பேரை மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மு.வீரபாண்டியன் கவுரவித்தனர்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறும் போது, “இந்தியாவிலே தமிழ்நாடு தான் நல்லிணக்க பூமி. இங்கு பெரும்பான்மையான இந்து மக்கள் தான், சிறுபான்மையினரின் அரணாக நிற்கின்றனர். இந்தஒற்றுமையை சிதைக்கும் பாஜக வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எத்தகைய வியூகங்களை வகுத்தாலும், அவர்களை தமிழ்நாடு தோற்கடிக்கும்” என்றார்.
