மதுரை, டிச.27- திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இதில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறும். சந்தனக்கூடு விழாவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி நடைபெறும். ஏற்கனவே, அசைவ கந்தூரி விழா நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சந்தனக்கூடு விழா கடந்த 21.12.2025 அன்று தொடங்கி, ஜன.9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கந்தூரி நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாணிக்கமூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (26.12.2025) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஏற்கனவே கந்தூரி நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் இந்த ஆண்டும் சந்தனக்கூடு என்ற பெயரில் கொடியேற்றி, விழாவை தொடங்கியுள்ளனர். எனவே கந்தூரி நடத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தர்கா தரப்பில் யார் ஆஜராகினர் என கேட்டனர். அப்போது மனு தாரர் தரப்பில் இந்த வழக்கு நேற்று (26.12.2025) தான் விசாரணைக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இடைக்கால உத்தரவுக்கு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும் தர்கா தரப்பில் மனுதாரர் தரப்பில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த விழாவில் எந்த இடைக்கால தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் கட்டண உயர்வுக்கு பயணிகள் கடும் எதிர்ப்பு
திரும்பப் பெற கோரிக்கை
மதுரை, டிச.27- நாடு முழுவதும் நேற்று (26.12.2025) முதல் அமலான ரயில் கட்டண உயர்வுக்கு பயணியர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் கட்டண உயர்வு
ரயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் கட்டண உயர்வு இல்லை. அதற்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6,500 கி.மீ வரையிலான ரயில்களில் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வுக்கு பயணியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தென் மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர் கூறுகையைில், ‘தென்மாவட்டங்களுக்கு வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதில், கரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
திரும்பப் பெற கோரிக்கை
பல பகுதிகளில் பகல் நேர ரயில்கள் பற்றாக்குறையாக உள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்னர் தான் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். இதனால், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என்றனர்.
ரயில்வே டி.ஆர்.இ.யூ கோட்ட ஒருகிணைப்பாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கட்டண உயர்வை அறிவிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருப்பது ஜனநாயக விரோதமாகும். ஏற்கனவே ஆறு மாதத்திற்கு முன்பு உயர்த்தப்பட்டது.
தட்கல், பிரிமியம் தட்கல் என்று கட்டண உயர்வு உள்ளது. இரண்டாம் படுகை வசதி பெட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அரசு துறையான ரயில்வே துறையே இப்படி உயர்த்தினால், தனியார் இயக்குகின்ற பேருந்து கட்டணம் இன்னும் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. ரயில் இஞ்சின் இயக்கம் 70 சதவீதத்திற்கு மேல் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. டீசல் உபயோகம் வெகுவாக குறைந்துள்ளது. மக்களின் நலன் கருதி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
