நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி தமிழில் பேசிய ஒற்றை வரிக்குப் பிறகு, இறுக்கமாக இருந்த தலைவர்களின் சூழல் சிரிப்பலையால் தளர்ந்தது.
இந்த தேநீர் விருந்தில் கிட்டத் தட்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர் களும், கட்சிக்கொறடாக்களும் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில், பல்வேறு பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய தொடர்ச்சியான அமளி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே மசோதாக்கள் மீது நடந்த கடுமையான விவாதங்கள், சில நேரங்களில் வெளிநடப்பு, நாடாளுமன்றத்துக்கு வெளியே தர்னா என பல்வேறு நிகழ்வுகள் பதிவாகின.
ஒவ்வொரு கூட்டத்தொடரின் கடைசி நாளில் மக்களவைத் தலைவர் பாரம்பரிய முறைப்படி நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து தேநீர் விருந்து கொடுப்பார். கடந்த ஓராண்டாக இத்தகைய கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தவிர்த்தனர். விதிவிலக்காக வெள்ளிக்கிழமை நடந்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வாத்ரா தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர், மக்களவைத் தலைவர் பிரதான இருக்கையிலும் அவர்களுக்கு எதிரே இடதுபுற இருக்கையில் பிரியங்கா காந்தியும் ராஜ்நாத் சிங்கும் அமர்ந்திருந்தனர். பின்னிருக்கையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும் மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடாவுமான மாணிக்கம் தாகூர், மற்றொரு வரிசையில் திமுகவின் ஆ. ராசா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். எதிர்வரிசையில் மத்திய அமைச்சர்கள், பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்நிலையில், தேநீர் விருந்துக்கு இறுக்கத்துடன் தலைவர்கள் வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் பிரியாங்காவும் பரஸ்பரம் நலம் விசாரித்த பிறகு, பின்னிருக்கையில் இருந்த மாணிக்கம் தாகூரைப் பார்த்த பிரதமர் அவருக்கு தமிழில் ‘வணக்கம்’ என்று கூறினார். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்ததைப் பார்த்த பிரியங்கா காந்தி, ’எனக்கும் தமிழில் சில வார்த்தைகள் தெரியும். உங்களால் அவற்றை உச்சரிக்க முடியாது’ என்றார்.
இதையடுத்து பிரதமரும் ராஜ்நாத் சிங்கும் ‘எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்‘ என்றதும் பிரியங்கா காந்தி, ‘காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்கள்‘ என்று தமிழில் குறிப்பிட்டு, ’இதுதான் நான் கற்ற தமிழ் வார்த்தைகள். இதை உங்களால் சொல்ல முடியுமா’ என்று கேட்டார். அதன் அர்த்தத்தைக் கேட்டுணர்ந்த மற்ற தலைவர்கள் சிரிப்பலையில் இறுக்கம் தணிந்து இயல்பாக பேசத்தொடங்கினர்.
சுமார் 20 நிமிஷங்கள் நீடித்த தேநீர் விருந்தில் நகைச்சுவையான கருத்துக்களை உறுப்பினர்கள் பரிமாறிக்கொண்டதாக விருந்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமரிடம் அவரது சமீபத்திய எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணங்கள் குறித்து பிரியங்கா விசாரித்தபோது, தனது அனுபவங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது என்று கூறிய பிரதமர், குறிப்பாக கேரள உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரன் நன்கு தயாராக உரையை தயாரித்து அவையில் பேசியது கவனிக்கத்தக்கதாக இருந்தது என்று கூறி அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
சமாஜவாதி கட்சி உறுப்பினர் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
