இந்தியாவில் ஜாதி அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை பிளவுபடுத்தி வருகிறது. கல்வி நிறுவனங்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகள், சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டிய இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், வரலாற்றிலிருந்து இன்று வரை, ஜாதி பாகுபாடு இங்கு தொடர்ந்து நிலவி வருகிறது. 1924களில் தமிழ்நாட்டில் நடந்த சேரன்மாதேவி குருகுல சர்ச்சை, ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. அதிலிருந்து தமிழ்நாடு பெரிய அளவில் முன்னேறி உள்ளது
இதற்கு மாறாக, வட இந்தியாவில், குறிப்பாக பீகாரில், இன்றும் ஜாதி பாகுபாடு பள்ளிகளில் வெளிப்படையாகத் தொடர்கிறது – உணவு உண்ணுதல், அமர்தல், ஆசிரியர்களின் அலட்சியம் போன்றவை.
சேரன்மாதேவி குருகுலம்:
ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான திருப்புமுனை
1924இல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் வா.வே.சு. அய்யர் நடத்திய குருகுலத்தில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு நடந்தது தெரியவந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியுடன் இயங்கிய இந்த குருகுலத்தில், பார்ப்பன மாணவர்களுக்கும் – பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்பட்டது. பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தரமான உணவு மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து தந்தை பெரியார் கடுமையாகப் போராடினார். காங்கிரஸ் தலைவர்கள் இதை மறைக்க முயன்றதால், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

இந்த சர்ச்சை திராவிட இயக்கத்தின் வேராக அமைந்தது. தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. பெரியாரின் போராட்டம், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சமூக அநீதி என்பதை வலியுறுத்தியது. இதன் விளைவாக, தமிழ்நாடு ஜாதி எதிர்ப்பில் முன்னணி மாநிலமாக உருவெடுத்தது.
சேரன்மாதேவி சர்ச்சையிலிருந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு கல்வி மற்றும் சமூக நீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. திராவிட மாடல் அரசுகள் இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோரின் கல்வியை ஊக்குவித்தன.
வட இந்தியாவின் இன்றைய அவலம்
வட இந்தியாவில் பல கொடூரங்கள் இன்றும் தொடர்கின்றன. 2018இல் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஜாதி மற்றும் மத அடிப்படையில் தனித்தனி வகுப்பறைகளில் அமர்த்தப் பட்டது தெரியவந்தது. இதேபோல், மதிய உணவுத் திட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் குழந்தைகளுக்கு குறைவான உணவு வழங்கப்படுதல் அல்லது தனியாக வழங்கப்படுதல் போன்ற பாகுபாடுகள் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பதிவாகியுள்ளன. சமீபத்திய ஆய்வுகள் அய்.அய்.எம். (IIM பெங்களூரு ஆய்வு) ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை குறைவாக மதிப்பிடுவதாகக் காட்டுகின்றன.
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் பீகாரில் அதிகம். ஒரு ஆய்வின்படி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளில் கால் பங்கினர் பள்ளியை பாதியில் விட்டு விலகுகின்றனர். முசஹர் போன்ற மகாதலித் சமூகங்களில் இது இன்னும் அதிகம். ஆசிரியர்களின் ஜாதி சார்பு, பாகுபாடு, பள்ளி வசதிகள் இன்மை போன்றவை இதற்குக் காரணங்கள்.
வட இந்தியாவில் ஜாதி பாகுபாடு பள்ளிகளில் வெளிப்படையாகத் தொடர்கிறது. ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தத்தெடுத்த “மாதிரி கிராமம்” அலாவல்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த சம்பவங்கள் இதை வெளிப்படுத்துகின்றன.
யார் இந்த ரவிசங்கர் பிரசாத்? அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுத்தாளர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது ஸநாதனத்தை டெங்கு, மலேரியாவைப்போல் முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று கூறினார்.
அவர் கூறியதன் பின்னால் உள்ள கருத்துகள் எவ்வளவு அழுத்தமானவை!
ஆனால். ஒன்றிய அமைச்சரும். நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் குய்யோ முறையோ என்று கத்தினார்.
“அய்யோ புனிதமான ஸநாதனத்தை களங்கப்படுத்த திமுக கட்சி எப்போதுமே தயங்குவதில்லை ஹிந்துக்களுக்கு எதிரானது இந்தக் கட்சி – அதன் தலைவர்கள்” என்று புலம்பிக் கொண்டு திரிந்தார். ஸநாதனம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாடம் எடுத்தார். பிரதமரின் கிராம வளர்ச்சி திட்டத்தின் (பிரதமர் ஆதர்ஸ் காவ் யோஜனா) கீழ் ரவிசங்கர் பிரசாத் தத்து எடுத்த கிராமம் பீகார் மாநிலத்தின் தலைநகருக்கு அருகில் பட்னா சாகிப் என்ற மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். அலாவல்பூர் என்ற இந்தக் கிராமத்தில் ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
செய்தியாளர் ஆய்வு
தத்து எடுத்த அந்தக் கிராமம், அங்குள்ள வசதிகள் எப்படி உள்ளன என்று அறிய செய்தியாளர் அக்கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை. கழிவுநீர் வீடுகளுக்கு முன்பு குட்டைபோல் தேங்கி உள்ளது. ஆங்காங்கே வீடுகளுக்கு முன்பு மக்களோடு ஒரு ஓரம் பன்றிகள் அங்கே இங்கே அலைந்துகொண்டு இருந்தன.
4 தெருக்கள் உள்ள அலாவல்பூர் கிராமத்தில் வெறும் 12 வீடுகள் மட்டுமே உயர்ஜாதியினர் வசிப்பது. மற்ற அனைவருமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம். அவர்கள் உயர்ஜாதியினர் அடங்கிய தெருவிற்கும் செல்லவே முடியாது.
இதை எல்லாம் ஒளிப்படக் கருவியில் படம் பிடித்து கொண்டு வந்தவர்களுக்கு இயங்கிகொண்டு இருந்த பள்ளிக்கூடம் தென்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியரிடம் அனுமதி கேட்க, அவரும் குழந்தைகளுடன் நீங்கள் தாரளமாகப் பேசலாம் என்று கூறி அனுமதி கொடுத்தார்.
அதன் பிறகு நடந்தவைதான் வட இந்தியாவில் பள்ளிகளின் பேரவலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது – ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று.
மாணவிகள் பேட்டி
நேராக 10ஆம் வகுப்பு வகுப்பறைக்குச் சென்ற போது மாணவிகள் கூறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவிகள் “நாங்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியரோடு உட்கார்ந்திருக்கும் சில மாணவிகள் உயர்ஜாதியினர். அவர்களை எங்களோடு பேசவே ஆசிரியர் அனுமதிப்பதில்லை” என்றனர்.
அது மட்டுமா? “சாப்பிடும்போது எல்லோரும் வெளியே போய் விடுங்கள்” என்று கூறுகிறார்.
“உயர் ஜாதி பிள்ளைகளுக்கு என்று தனியாக உணவு கொண்டுவந்து கொடுக்கிறார். எங்களுக்கு வெறும் சுடு தண்ணீர், உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த கலவை. அதில் சில வேகாத உருளைக்கிழங்கை போட்டுத் தருகிறார்” என்றனர்.
மதிய உணவில் ஊழல் – 180 மாணவர்களுக்கு என்று கணக்கு காட்டி 30 பேருக்கு மட்டும் உணவு, தருகிறார்கள். ஆசிரியர்கள் உணவுப் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். கேட்டால், “நீங்கள் எல்லாம் தின்றால் கொழுத்துப் போய் வாய் பேசுவீர்கள்” என்று கூறுகிறார். ரொட்டிக்கு உடன் சாப்பிட மஞ்சள் தண்ணீர், கொடுக்கிறார்கள். அதில் புழுக்கள், உடைந்த வளையல் துண்டுகள் போன்றவை உள்ளன.
ஆசிரியர்கள் பாடம் நடத்துவது மிகவும் குறைவாக உள்ளது. அதிகம் அவர்களது வீட்டுவேலைகளைச் செய்ய வைக்கிறார்கள். மாட்டிற்கு புல் அறுக்கவும், வீட்டு வேலைகளைச் செய்யவும் கால் அமுக்கவும் சொல்கிறார்கள். நீங்கள் எல்லாம் படித்தால் ஒன்றும் ஆகிவிடாது. ஆகவே, பள்ளியில் இருக்கும் வரை விருப்பம் போல் இருங்கள் என்று கூறுகிறார். பாட நூல்களை விற்றுவிடுகிறார்” என்று கூறினார்கள்.
இது தொடர்பாக ஆசிரியைகளிடம் கேட்டபோது, “இதில் அரசியல் செய்கிறார்கள். பிள்ளைகளை இவ்வாறு சொல்லச்சொல்லி தூண்டி விடுகிறார்கள்” என்று கூறினர். சில உயர்ஜாதி மாணவிகளை அழைத்து ஊடகத்தில் தனக்கு ஆதரவாகப் பேசக் கூறியபோது அந்த மாணவிகள் துணிச்சலாக, “பிற ஜாதி மாணவிகளோடு சேரக்கூடாது. நாம் எல்லாம் அவர்களோடு சேர்ந்தால் தீட்டாகிவிடும்” என்று கூறியதாக மாணவிகள் பேட்டியளித்தனர்.
சேரன்மாதேவி குருகுல சர்ச்சை தமிழ்நாட்டை ஜாதி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. ஆனால், வட இந்தியாவில், குறிப்பாக பீகாரில், அதே பாகுபாடு இன்றும் தொடர்கிறது. ஒன்றிய அமைச்சரின் மாதிரி கிராமத்திலேயே இந்நிலை என்றால், பொதுவான கிராமங்களின் நிலை என்ன? கல்வி நிறுவனங்கள் ஜாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி, கண்காணிப்பு, சமூக விழிப்புணர்வு மூலம் இதைச் சாதிக்க முடியும். ஜாதி ஒழிப்பு இந்தியாவின் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.
