திராவிட நாகரிகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய பொற் காலம் தொடங்கியுள்ளது. தாமிர பரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் பிரம்மாண்ட மாக அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகம்’ தற்போது பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த ஒரு வரலாற்றுப் பேழை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2025 டிசம்பர் மாதம் 23 அன்று திறந்து வைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், சுமார் 13 ஏக்கர் பரப்பளவில், ரூ. 67.25 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டுத் தரத்துடன் கட்டப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 1,600க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து, தென்னக சுற்றுலாவில் ஒரு புதிய சாதனையை இது படைத்துள்ளது.

சிவகளை முதல் ஆதிச்சநல்லூர் வரை:
இரும்பு யுகத்தின் வேர்கள்
பொருநை அருங்காட்சியகத்தின் ஆகச்சிறந்த அம்சம் என்னவென்றால், இது வெறும் கட்டடமல்ல; இது ஒரு கால இயந்திரம். சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழர்கள் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்குதல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதை நிரூபிக்கும் கருவிகள், பழங்கால மட்பாண்டங்கள் மற்றும் நுணுக்கமான அணிகலன்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நவீனமும் பழமையும் இணைந்த
‘இம்மெர்சிவ்’ அனுபவம்
வெறும் காட்சிப் பொருட்களைப் பார்த்துச் செல்வதோடு நின்றுவிடாமல், பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் (Immersive Experience) பயன்படுத்தப்பட்டுள்ளன.

3D காட்சிகள் மற்றும் ஒளி – ஒலி அமைப்புகள் மூலம் இரும்பு யுகத் தமிழன் எப்படி வாழ்ந்தான், எப்படி வணிகம் செய்தான் என்பதைப் பார்வையாளர்கள் தத்ரூபமாக உணர முடியும். இரவு நேரங்களில் இந்த அருங்காட்சியகத்தின் மின்விளக்கு அலங்காரங்கள், ஒரு கலைக்கூடத்தைப் போலத் திருநெல்வேலி நகருக்கே கூடுதல் அழகைத் தருகின்றன.
சுற்றுலாவின்
புதிய மகுடம்
திருநெல்வேலி என்றாலே வரிசைப் படுத்தப்படுபவைகளில் இனி பொருநை அருங்காட்சியகம் முதலிடம் பிடிக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திராவிட நாகரிகத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த ஆய்வுக் கூடமாகச் செயல்படும்.
இந்த அருங்காட்சியகத்தின் வருகையால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதன் மூலம் உள்ளூர் வணிகம் பெரும் வளர்ச்சியடையும். உலகெங்கிலும் உள்ள வரலாற்று ஆய்வாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு பன்னாட்டு மய்யமாக இது உருவெடுத்துள்ளது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழங்கிய தமிழ் இனத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமானவை என்பதைப் பொருநை அருங்காட்சியகம் உலகுக்குச் சொல்கிறது. நம் அடையாளத்தைத் தேடிச் செல்லும் இந்தப் பயணம், ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று. தொடர் விடுமுறைகள் அடுத்துவரும் கோடை விடுமுறைகள் சுற்றுலாப் பயணப் பட்டியலில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். திராவிட நாகரிகத்தின் பழம்பெரும் வரலாற்றில் மதுரை கீழடியையும், நெல்லை பொருநை அருங்காட்சியகத்தையும் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்!
