கானாவைச் சேர்ந்த எபோ நோஹா (Ebo Noah) என்ற இளைஞர் மதபோதகராக உள்ளார். இவர் 2025 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் பெருவெள்ளம் வரும் என்று ‘தீர்க்க தரிசனம்’ கூறி, பழைய ஏற்பாடு நூலில் உள்ள நோஹா கதையில் வரும் நோஹாவைப் போல 7 பெரிய படகுகளைக் கட்டினார்.
“அதாவது பரிசுத்த ஆவி என்னிடம் வந்து ‘ஆண்டி கிறிஸ்து’ பிறக்கப் போகிறார். ஆகையால் 25.12.2025 அன்றிலிருந்து 23.12.2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு மழை தொடர்ந்து பெய்யும், உலகம் அழியும் என்று என்னிடம் கூறினார்.
‘நான் என்ன செய்யவேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘நீதான் நோஹா என்ற தீர்க்கதரிசி, இப்போது மீண்டும் பிறந்துள்ளாய்’ என்று அறிவித்தார். ஆகவே நோஹாவைப் போன்று 7 படகுகள் செய்தேன்” என்றார்.
அவர் இதைக்கூறியதும் பல செல்வந்தர்கள் அவரை நம்பி, சொத்துக்களை விற்று, குடும்பத்துடன் அவரைச் சென்றடைந்தனர். கேரளாவிலிருந்தும் அவரது சபை உறுப்பினராக இருந்த 4 பேர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் சில பதிவுகள் உள்ளது. அந்த எபோ நோஹா சபை உறுப்பினராக கோவா, கருநாடகா, கேரளா மற்றும் சண்டிகரில் சிலர் உள்ளதாக எபோ நோஹா சபை குறிப்பிடுகிறது.
டிசம்பர் 25 வந்தது. உலகளாவிய வெள்ளம் வரவில்லை. மழை பெய்யவில்லை. உலகம் அழியவில்லை. இதனை அடுத்து சிலர் அந்தப் படகை தண்ணீரில் விட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இது போன்ற பல கோமாளித்தனமான நிகழ்வுகள் வரலாற்றில் பலமுறை தோல்வியடைந்துள்ளன. 2012 மாயன் காலண்டர் அழிவு, என்று கூறப்பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
அந்த எபோ நோஹா சமீபத்தில் ஆப்பிரிக்காவிலேயே மிகவும் விலை உயர்ந்த காரைவைத்திருக்கும் நபர்களில் ஒருவராக மாறிப்போனார். அதற்கும் அவர் காரணம் கூறுகிறார். கடவுள் அவரிடம் வந்து “மக்களிடம் விரைவாகவும் களைப்பின்றியும் எனது வாக்கியத்தை எடுத்துக்கூற நான் வசதிகளைச் செய்துதருகிறேன் ஏற்றுக்கொள். மக்களிடம் நான் சொல்லி இருக்கிறேன். மக்கள் உனக்கு தரும் காணிக்கையில் நீ புதிய காரை வாங்கு” என்று கூறினாராம். ஆகையால் அவர் விலை உயர்ந்த சொகுசுகாரை வாங்கி ஊர் சுற்றுகிறார்.
வரலாறு முழுவதும் மனிதகுலத்திற்கு “அழிவு” (Doomsday) குறித்த பயம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பயத்தைப் பயன்படுத்தி சில தனிநபர்கள் தங்களை ரட்சகர்களாக முன்னிறுத்திக் கொள்வது காலங்காலமாக நடக்கும் ஒரு சமூக அவலமாகும். எபோ நோஹா போன்றவர்கள் செய்யும் முதல் காரியம் மக்களின் மனதில் பயத்தை விதைப்பது. “உலகம் அழியப்போகிறது” என்ற கூற்று அறிவியல் பூர்வமானது அல்ல, அது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டல். மக்கள் அச்சத்தில் இருக்கும்போது அவர்களின் சிந்திக்கும் திறன் மழுங்கிவிடுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி வருமானம் பார்க்கின்றனர்
பூமி எப்போது அழியும் அல்லது விண்வெளி மாற்றங்கள் என்ன என்பது குறித்து வானியல் ஆய்வாளர்கள் துல்லியமான தரவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு ஆதாரமும் இன்றி, ஒரு தேதியைக் குறிப்பிட்டு உலகம் அழியும் என்று சொல்வது அப்பட்டமான பொய்.
ஒரு மரப்படகால் பிரபஞ்ச ரீதியான அல்லது இயற்கை சீற்றங்களில் இருந்து எப்படிப் பாதுகாக்க முடியும்?
பொருளாதாரச் சுரண்டல்
பெரும்பாலான இத்தகைய நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு பொருளாதார நோக்கம் ஒளிந்திருக்கும். பேழையில் (படகு) இடம் பிடிக்கப் பணம் வசூலிப்பது அல்லது மதத்தின் பெயரால் நன்கொடை பெறுவது என இது ஒரு வணிகமாக மாற்றப்படுகிறது. எபோ நோஹாவின் பேழையை மக்கள் எரித்ததற்கு முக்கிய காரணமே, அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பதும், மக்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்ததுமே ஆகும்.
ஏன் மக்கள் இவர்களை நம்புகிறார்கள்?
வறுமை, கல்வி அறிவின்மை மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை மக்களை இத்தகைய போலி போதகர்களிடம் தள்ளுகிறது. “அதிசயம் நடக்கும்” என்ற எதிர்பார்ப்பு, தர்க்க ரீதியான உண்மைகளை விட வலிமையானதாக அவர்களுக்குத் தெரிகிறது.
எபோ நோஹாவின் பேழை (படகு) எரிக்கப்பட்டது என்பது வெறும் ஒரு மரக்கட்டை எரிக்கப்பட்ட நிகழ்வு அல்ல; அது ஏமாற்றப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடு. ஆனால், தீர்வு என்பது பேழையை எரிப்பதில் இல்லை, மாறாக இத்தகைய மூடநம்பிக்கைகளை உருவாக்கும் சிந்தனை முறையை (Mindset) எரிப்பதில் தான் உள்ளது. மதமோ, ஆன்மீகமோ அது மனிதனை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர, பயத்தின் பிடியில் வைத்துச் சுரண்டக்கூடாது. எதையும் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவு மட்டுமே இது போன்ற சாமியார்களிடமிருந்து சமூகத்தைக் காக்கும்.
