காஞ்சிபுரம் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டை தன்வசப்படுத்தி, காவிமயமாக்க கூலிகளையும், காலிகளையும் பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்.!
“திராவிடம்” அரணாக நின்று காத்துக்கொண்டிருக்கிறது!

காஞ்சிபுரம், டிச.26- ”நான் கண்டதும்; கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்” என்றார் அறிஞர் அண்ணா. இவை வெறும் சொற்கள் அன்று. அண்ணாவின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சிப் பிரவாகம்; வெள்ளப்பெருக்கு. அறிஞர் அண்ணா அப்படிக் கொண்ட தலைவர் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரியாரின் ஆளுமை தொடர்கிறது” என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வால் எதையும் சாதித்துவிட முடியாது என்று காஞ்சிபுரம் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் சங் பரிவார் அமைப்புகளை எச்சரித்து உரையாற்றினார்.

”இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் பரப்புரைக் கூட்டத்தின் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், காமராசர் வீதி – பேருந்து நிலையம் எதிரில் 23.12.2025 அன்று மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கழகக் கொடிகள் காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளின் நடுவில் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தன. மாலை 7:30 மணிக்கு கழகத் தலைவர் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். மிக எழுச்சிகரமான ஒலி முழக்கங்களோடு மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பயனாடைக்குப் பதிலாக ரூபாய் நோட்டுகள் மாலை அணிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பா.கதிரவன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலாளர் கி.இளையவேள் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். கழகக் காப்பாளர்கள் டி.ஏ.ஜி.அசோகன், ச.வேலாயுதம், செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், செங்கை மாவட்டத் தலைவர் அ.செம்பியன், செய்யாறு நகரச் செயலாளர் தி.காமராஜ், செய்யாறு மாவட்ட ப.க. தலைவர் வி.வெங்கட்ராமன், இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் செ.கோபி, செங்கை மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், காஞ்சி மாவட்ட ப.க.தலைவர் பா.இளம்பரிதி, காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் ஆ.மோகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ.ரேவதி, மாவட்ட இளைஞரணித் தலைவர் வீ.கோவிந்தராஜ், நாத்திகம் நாகராசன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.

பரப்புரைப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்து, வாங்கிப் பயன் பெறுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். தி.மு.க.கொள்கைப் பரப்புச் செயலாளர்; சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சி மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், தமிழ் உரிமை கூட்டமைப்பு செயலாளர் ஜெ.கமலநாதன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் படூர் அல்லாபக்சே ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். மக்கள் மன்றம் தோழர் மகேஷ், வி.சி.க. மேனாள் மாவட்டச் செயலாளர் பாசறை செல்வராஜ், வி.சிக. மண்டல துணைச் செயலாளர் மதி.ஆதவன் பேசினர். அதைத் தொடர்ந்து, பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து கழகத் தலைவருக்கு மாவட்டம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அனைத்துக் கட்சிகளின் சார்பிலும், பொதுமக்களும் கழகத் தலைவருக்கு மரியாதை செய்தும், புத்தகங்கள் வாங்கி வந்து அவரிடம் ஒப்பம் பெற்றும் மகிழ்ந்தனர். முன்னதாக தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தொடக்க உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது உரையை, “குறுகிய நேரத்தில் அனைத்தையும் பேசிவிட முடியாது. சொல்ல வேண்டியவை ஏராளமானவை இருக்கின்றன. அதனால் தான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் புத்தகங்களை இங்கேயும் கொண்டு வந்திருக்கிறோம். வாங்கிப் பயன்பெறுங்கள்” என்று சுட்டிக்காட்டி தொடங்கினார். தொடர்ந்து, காஞ்சிபுரத்திலிருந்து பேசுவதால் அறிஞர் அண்ணாவின் நினைவைத் தவிர்க்க முடியாமல், ”தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கரான அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுகிறேன்” என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டு, “நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்” என்ற அறிஞர் அண்ணா பெரியாரைப் பற்றி உணர்வுபூர்வமாகக் கூறியதை எடுத்துரைத்தார். தொடர்ந்து அதை விளக்கவும் செய்தார். அதில், அண்ணாவின் சிந்தனைகள்; எழுத்தாற்றல் ஆகியவற்றுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.  “கொண்டவன் சரியாக இருந்தால் கண்டவன் எல்லாம் கேட்பானா?” என்ற கிராமத்துப் பழமொழியைச் சுட்டிக்காட்டி, “கொண்டவரான தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது ஆளுமை தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் தொடர்வதை”ச் சுட்டிக்காட்டி, அந்தச் சொற்டொரின் ஆழத்தை மக்களுக்குப் புரியவைத்தார். அதே போல், அண்ணா மறைந்தபிறகு, மிகுந்த வேதனையடைந்த தந்தை பெரியார் எழுதிய, “அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!” என்ற தலையங்கத்தின் தலைப்பைச் சுட்டிக்காட்டி, அந்த தலைப்புக்கான காரணத்தை, விளக்கத்தை, “அண்ணா என்பது தனி மனிதரல்ல; ஒரு தத்துவம்” என்று சொல்லி விளக்கினார்.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பற்றி சொல்ல வந்தவர், “மனிதர்களில் மட்டுமல்ல; அனைத்திலும் பிரிவினைகள் செய்வதுதான் ஆர்.எஸ்.எஸ்.” என்று சொல்லிவிட்டு, ”அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் திராவிடம்” என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நேர் எதிரான  ஒரு கொள்கையைச் சுட்டிக்காட்டினார். மேலும் மதம் நம்மை ஒன்று சேர்க்குமா என்று சொல்ல வந்தவர், “மதத்திலேயே வடகலை, தென்கலை என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். வடக்கு தெற்கை நாம் பிரிக்கவில்லை. யாதும் ஊரே! யாவரும் கேளிர்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் நாம்” என்று பெருமிதத்துடன் கூறினார். அதைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் பல்வேறு ஆக்கபூர்வமான சாதனகளை பட்டியலிட்டுவிட்டு, “திராவிட மாடல் அரசு சாதனை மேல் சாதனை செய்து வருகிறது!  அதுதான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வேதனை மேல் வேதனையாக இருக்கிறது!” என்று நகைச்சுவை ததும்ப தமிழ்நாட்டில் இருக்கின்ற நிலைமைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, ”தமிழ்நாட்டை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும்; காவிமயமாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. துடிக்கின்றன! ஆனால், திராவிடம் அரணாக நின்று நம்மைக் காத்துக்கொண்டிருக்கிறது! அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “திருப்பரங்குன்றம் பிரச்சினைக்காக தேசியளவில் போராட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை” என்று இனமலர் பத்திரிகையில் வந்த செய்தியை, பத்திரிகையை கையில் வைத்து படித்துக்காட்டி, “இதுதான் உங்கள் தேசியமா? நாங்கள் எல்லா ஈயத்தையும் பார்த்தவர்கள்! மக்கள் மன்றம் தான் இறுதித் தீர்ப்பு” என்று ஆர்.எஸ்.எஸ்., நீதித்துறை, பா.ஜ.க. என எல்லாருக்குமான பதிலாக உறுதிபடத் தெரிவித்தார். தொடர்ந்து, “பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் இருக்குமா? என்றார்கள். இருக்கிறது என்பதைவிட இருக்கின்றதே என்று சொல்லத்தக்க வகையில் வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று விவரித்தார். தொடர்ந்து, ”அரசியல்வாதிகளை விட அலைந்து திரிந்து அதிக அக்கறையுடன் தமிழ்நாடு முழுவதும் ஏன் இப்படி பிரச்சாரம் செய்கிறோம்?” என்று கேள்வி கேட்டு, ”தமிழ்நாட்டை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும்; காவிமயமாக்க வேண்டும் என்று துடிக்கின்றது ஆர்.எஸ்.எஸ். அதிலிருந்து காக்க திராவிடம் அரணாக இருக்கிறது என்று காட்டத்தான்” என்று பதில் சொன்னார். தொடர்ந்து, மனுதர்மம் புத்தகத்தை கையில் எடுத்து வைத்துகொண்டு, 8 ஆம் அத்தியாயம் 272 ஆம் ஸ்லோகம் என்ன சொல்கிறது? என்று கேட்டபடியே, “பிராமணனுக்கு உபதேசிக்கின்ற சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்று வாசித்துக் காட்டினார்.

அடுத்தபடியாக, “இது காட்டுமிராண்டித்தனம் அல்லவா?” என்று கண்டித்தார். அப்படிப்பட்ட மனுதர்மத்தைத்தான் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரத்துடிக்கிறார்கள்” என்று எச்சரித்து, “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” என்று ஒன்றையொன்று வேறுபடுத்தி தத்துவரீதியாகவே தொடக்கத்திலிருந்து பேசி, மக்களுக்கு எளிமையாக விளங்கச்செய்தார். தொடர்ந்து, நிர்வாகத்துறை, நிதித்துறை, நீதித்துறை மற்றும் சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற திரிசூலங்கள் மூலமும் நெருக்கடி இருப்பதையெல்லாம் விவரித்து, “நெருக்கடி காலத்தையே பார்த்தவர்கள் நாங்கள். எத்தகைய நெருக்கடி வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்கொள்வோம்” என்றும், ”அதையும் தாண்டி எத்தனை S.I.R.கள் வந்தாலும் தமிழ்நாட்டை அசைத்துக்கூட பார்க்க முடியாது” என்றும், ”எதாவது ஒரு கட்சிக்கு ஓட்டு போடலாம் என்ற பொறுப்பற்ற தன்மை மக்களுக்கு இருக்கக் கூடாது” என்று மக்களுக்கும் வழிகாட்டி, ”திராவிட மாடல் அரசுதான் 2026லும் அமையும்” என்று சுட்டிக்காட்டி தமது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக காஞ்சி மாநகரத் தலைவர் ந.சிதம்பரநாதன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தி.மு.க. மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், வி.சிக.மணடல துணைச் செயலாளர் மதி.ஆதவன், சி.பி.அய்.மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன், சி.பி.அய். தொகுதி செயலாளர் ஜெ.கமலநாதன், ம.தி.மு.க. மாநகரச் செயலாளர் பா.குமரேசன், ம.நே.ம.க.மாநகரச் செயலாளர் எப்.தாஜுதின், பெரியாரியத் தோழர் இரவிபாரதி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை குறளமிழ்தன், பியூசிஎல் து.ரா.பாரதிவிஜயன், தன்னாட்சி தமிழகம் பெ.பழனி, பகுத்தறிவு பாடகர் உலகஒளி, போளூர் வட்டாச்சியர் (ஓய்வு) பன்னீர்செல்வம், சுங்குவார்சத்திரம் கோ.நடராஜன், உத்திரமேரூர் ஒ.அ.ஒழுகரை பிரகாஷ், வாலாஜபாத் ஒ.அ.எஸ்.செல்வம், ப.க.மாநகரத் தலைவர் தே.பிரபாகரன், ப.க.மாநகரச் செயலாளர் பெ.சின்னதம்பி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அ.அருண்குமார், ப.க.காஞ்சி மாவட்டச் செயலாளர் அ.வெ.சிறீதர், தி.க.நாகை லெனின் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து அனைவரது உரைகளையும் செவிமடுத்து பயன் பெற்றுச் சென்றனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சி மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *