பெரியார் – அண்ணா – கலைஞரின் கலவையாக இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே, 2026 இல் எழுச்சி பெற்ற தமிழ்நாடு, மீண்டும் உங்கள் தலைமையிலே வரும்!

15 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களும் முக்கனிகள் போல – முத்தமிழ் போல!
பெரியார் – அண்ணா – கலைஞரின் கலவையாக இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே,
2026 இல் எழுச்சி பெற்ற தமிழ்நாடு, மீண்டும் உங்கள் தலைமையிலே வரும்!
நூல்கள் வெளியீட்டு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி!

சென்னை, டிச.23  ‘‘எழுத்தாளர் திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களும் முக்கனிகள் போல – முத்தமிழ் போல! பெரியார் – அண்ணா – கலைஞரின் கலவையாக இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே, 2026 இல் எழுச்சி பெற்ற தமிழ்நாடு, மீண்டும் உங்கள் தலைமையிலே வரும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

மூன்று நூல்கள் வெளியிட்டு விழா!

ேநற்று (22.12.2025) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள  அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில், எழுத்தாளர்  ப.திருமாவேலன் எழுதிய ‘தீரர்கள் கோட்டம் திமுக’, ‘திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்’, ‘முறை செய்து காப்பாற்றம் முதலமைச்சர்’ ஆகிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட, நூல்களைப் பெற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

ஆசிரியர் உரை

மூன்று நூல்களும்,
மூன்று போர் ஆயுதங்கள்!

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய மூன்று முப்பெரும் நூல்கள் – வரலாற்று காவியங்கள் – திராவிட வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பவர்கள் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தை, திராவிடக் கொள்கைகளை அழித்துவிட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களும்கூட சேர்த்து படிக்க வேண்டிய மூன்று நூல்கள். அதை படித்தால் எவ்வளவு பெரிய அறிவுச் சுரங்கமும், மிகப்பெரிய அளவிற்கு ‘‘இத்தனை தகவல்கள் எமக்கு இதுவரை கிட்டவில்லையே’’ என்று ஏக்கத்தோடு அவர்கள், தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு, ஆதா ரப்பூர்வமாக அற்புதமான மூன்று நூல்கள் – மூன்று போர் ஆயுதங்கள்!

‘‘திராவிடம் வெல்லும் அதை
நாளைய வரலாறு சொல்லும் சொல்லும்!’’

அவை வெறும் நூல்கள் அல்ல; இந்த இயக்கம் எப்படிப்பட்டது? எப்படி வளர்ந்தது? எத்தனையோ இருட்டடிப்புகளுக்கு இடையிலே, எத்தனையோ திரிபுவாதங்களுக்கு இடையில், இந்த மூன்று நூல்களை சிறப்பாக வெளியிடக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக நமக்கெல்லாம் வழிநடத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல; இந்த இனம் மீண்டும் எழுந்து நிற்கும், மீண்டும் வெற்றி பெறும், இதை எந்தக் கொம்பனாலும் அசைத்து விட முடியாது; ‘‘திராவிடம் வெல்லும் அதை நாளைய வரலாறு சொல்லும் சொல்லும்’’ என்ற அந்த உணர்ச்சியோடு இங்கே அமர்ந்திருக்கிற எங்களுடைய ஒப்பற்ற முதலமைச்சர்,  உலகமே பார்த்து வியக்கக்கூடிய முதலமைச்சர், அவர்கள் வருவதற்கு முன்னாலே, கலைஞரின் மறைவிற்குப் பின்னால்,  இன எதிரிகள் எல்லாம் தமிழ்நாடு வெற்றிடமாகத்தான் இருக்கும்; எளிதில் நாம் போய் அமர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ‘‘இல்லை, என்னுடைய ஆட்சியிலே அது கற்றிடமாகத்தான் இருக்கும்; மற்றவர்கள் கற்றுக்கொண்டு போக வேண்டிய அளவிலே இருக்கும்’’ என்பதற்கான அடையாளத்தை செய்து, ஒவ்வொரு நாளும் சிறப்பான சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே!

கருஞ்சட்டையினுடைய வலிமை என்ன?

அதுபோலவே, எனக்கு முன்னால் சிறப்பாக பல்வேறு கருத்துகளை எல்லாம் எடுத்து, மேனாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன், அறிவு மழை என கொட்டி இருக்கிறார், நம்முடைய திராவிட  ஆழ்வார்  என்று  அழைப்பிதழிலேயே போட்டிருக்கிறது. இதில் பெருமை என்னவென்றால் திராவிட ஆழ்வாரும் இந்த மேடையில் இருக்கிறார்கள்; திராவிடத்தை என்றும் ஆள்வாரும் இருக்கிறார். அதுதான் சிறப்பு! ஆழ்வார்கள் ஆள்வாரைப் பாராட்டக்கூடிய அளவிற்கு, அனைத்துச் சிறப்புகள் என்ற பெருமை. இவற்றையெல்லாம் நாளும் எடுத்துச் சொல்லும், கருஞ்சட்டையினுடைய வலிமை என்ன? என்பதை மேடையிலே மட்டுமல்ல, உடலிலே மட்டுமல்ல, படிப்பகத்தையும் கருஞ்சட்டை பதிப்பகமாகவே ஆக்கி, மிகப்பெரிய அளவிற்கு எழுச்சியை உருவாக்கக்கூடிய எங்கள் பேராசிரியர் என தருமை  மானமிகு சுப.வீ. அவர்களே!

நம்முடைய திருமாவேலன் அவர்கள், மூன்று நூல்களையும் அற்புதமாக எழுதி இருக்கிறார். இந்த மூன்று நூல்களையும்  படித்து முடித்த உடனே, எதைச் சொல்வது, எதை விடுவது என்பது தெரியும். இது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிய வேண்டிய ஒரு நிகழ்ச்சி. அந்த அடிப்படையிலே சொல்லுகிற போது, இதை மிக அழகாக, சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.

ஒவ்வொரு நூலிலும், ‘‘பத்து பத்து’’ – படித்தவர்களுக்குப் ‘‘பற்று பற்று’’ ஏற்படும்!

அந்த நூலிலே இருக்கக்கூடிய ஒரு பகுதியிலே, நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் ஒரு குறிப்பு எழுதி கொடுத்திருக்கிறார். அந்தக் குறிப்பை மிகத் தெளிவாகச் சொல்லும்போது,  மூன்று நூல்களும் திராவிட இயக்கம், அந்தத் திராவிட இயக்கத்தை உருவாக்கிய நீதிக்கட்சி காலத்தில் இருந்து, அதற்கடுத்து தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அதில் அமைப்பு முறைகள் – இவை அத்தனையும், ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொரு நூலிலும், ‘‘பத்து பத்து’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, படித்தவர்களுக்குப் ‘‘பற்று பற்று’’ ஏற்படும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கக்கூடிய திருமாவேலன் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்; அதுபோலவே இந்தக் கருஞ்சட்டைப் படை! அதேபோல எதிரிலே அமர்ந்திருக்கின்ற அருமை மாண்புமிகு மானமிகு அமைச்சர் பெருமக்கள், சான்றோர் பெருமக்கள், கட்சித் தலைவர்களுக்கு நேரத்தை கருதி நான் ஒவ்வொருவரையும் தனித்தனியே விளிக்கவில்லை – விளித்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும். அனை வருக்கும் அன்பான வணக்கம்!

ஆசிரியர் உரை

ஆயுதம் தாங்காத புரட்சி, அமைதி புரட்சி!

இந்த நிகழ்ச்சி,  இந்த இயக்கத்தினுடைய சிறப்பு! இது ஆயுதம் தாங்காத புரட்சியை, அமைதி புரட்சியை ஒரு நூற்றாண்டு காலத்திலே அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, தந்தை பெரியார் பல நூற்றாண்டுகளில் இருந்த பழைமையை புரட்டிப் போட்டு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பை, மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த மாற்றத்தின் காரணமாகத்தான், எதிரிகள் இன்றைக்கு முதலமைச்சரைப் பார்த்து குறி வைக்கிறார்கள். எதற்கு? இந்த ஆட்சியை எப்படியும் அகற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ‘‘முடியாது, உங்களால் முடியாது – நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது’’ என்பதற்கு அடையாளமாகத்தான், எங்களிடம் பொதிந்திருக்கிற வரலாறு சாதாரணமான வரலாறு அல்ல; ‘‘நாங்கள் வருவோம், வடக்கே இருந்து வருவோம், அதிகாரத்தை எப்படி எல்லாம் குறுக்கு வழியிலே பயன்படுத்தலாம்’’ என்று நினைக்கக்கூடியவர்கள், எளிதில் அப்படி நினைக்கிறார்கள் இதை தூக்கி வீசிவிட்டுப் போக லாம் என்று. அந்த வகையிலேதான், இந்த வரலாறு ஒரு பெரிய சிறப்பு மிகுந்த, மிக முக்கியமான வர லாறு. அதன் சிறப்பைப் பிரதிபலிப்பார்கள். இங்கே  அமர்ந்தி ருக்கிறார்கள், பாராட்டுகிறோம், பெரு மைப்படுகிறோம்.

‘‘செயல், செயல், செயல்!’’

ஆஸ்திரேலியாவிலே ஒருவர் கேட்டார் என்று, இங்கே உரையாற்றும்போது நம்முடைய சுப.வீ. சொன்னார், ‘‘உங்கள் முதலமைச்சர் அதிகம் பேசுவதில்லையே?’’ என்று.

ஆம்! அவருக்குப் பேசுவதற்கு நேரமில்லை. காரணம், ‘‘செய்வதற்கே நேரமில்லை’’ என்று சொல்லக்கூடிய அளவிற்குச் ‘‘செயல், செயல், செயல்’’ என்று இருப்பவர் நமது முதலமைச்சர்.

அடக்கம் மிகுந்த முதலமைச்சர்,
ஆற்றல் மிகுந்த முதலமைச்சர், ஆளுமை தெரிந்த முதலமைச்சர்!

அதற்கு முன்பு தலைவர்  கலைஞர் அவர்கள்,  ‘‘உழைப்பு உழைப்பு’’ என்றார்.  இப்போது  நம்முடைய முதலமைச்சருக்கு 24 மணி நேரமும் போதாத அளவிற்குச் ‘‘செயல் செயல்’’ என்று இருக்கிற நேரத்திலே, அவர் ஒரு பெருமையாக அதைக் கருதவில்லை. அதுதான் அவருடைய தனிச் சிறப்பு! அதுதான் ‘முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்.’  அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், ‘‘நான் அதிகாரம் படைத்தவன்;  மார்பளவு எனக்கு எவ்வளவு தெரியுமா? 56 இஞ்ச் இருக்கிறது’’ என்று சொல்லத் தெரியாத முதலமைச்சர். அடக்கம் மிகுந்த முதலமைச்சர், ஆற்றல் மிகுந்த முதலமைச்சர், ஆளுமை தெரிந்த முதலமைச்சர், பிறர் கற்றுக்கொண்டு போக வேண்டிய அளவிற்கு உரியவராக வந்திருக்கிறார்கள்; அவரிடமிருந்து இந்த நூலைப் பெற்று கொண்டி ருக்கிறோம் நாம்; அதற்குரிய வாய்ப்பாக, அவர் எப்படி ஆட்சியை உற்றுநோக்குகிறார் என்பதற்கு அடை யாளமாக, இந்தப் புத்தகத்தில் நம்முடைய முதலமைச்சர் எழுதியிருப்பதைச் சொல்லுகின்றேன்,

‘‘ஆட்சி என்பது மகுடம் அல்ல; அது மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு!’’

‘‘ஆட்சி என்பது மகுடம் அல்ல; அது மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு’’ என்று கருதுகிறார். இதுதான் முதலமைச்சருடைய தனிச் சிறப்பு. அந்த முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்  எப்படி அதை கணிக்கிறார்? அதிகாரம் கிட்டிவிட்டது என்று ஆணவத்தினுடைய உச்சாணிக் கொம்பிலே ஏறிக்கொள்ள அவர் விரும்பவில்லை;

நேரம் ரொம்ப குறுகிய நேரம்; புத்தகங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, இப்புத்தகங்களை வாங்க வேண்டும், படிக்க வேண்டும், பரப்ப வேண்டும். மற்றவர்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டும். ‘‘திராவிடம் என்ன செய்தது? என்ன சாதித்தார்கள்?’’ என்று கேட்பவர்களிடம், ‘‘என்ன செய்ய வில்லை?’’ என்று கேட்க வேண்டும். அதற்கு ஆதாரம் – என்ன என்று கேட்கிறவர்களுக்கு, ‘‘இதோ என்ன செய்யவில்லை, இந்தத் திராவிடம்?’’ என்று கேட்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை இந்த நூல்களைக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள். மிக சிறப்பானவை இந்த நூல்கள்.

உலகளாவிய அளவிற்கு இந்தத் திராவிடத்தினுடைய புகழ் பரவி இருக்கிறது!

அந்த வகையிலே ஒவ்வொரு பத்து பகுதிகளிலும், அவர்கள் சொல்லி இருக்கின்ற அந்தக் கருத்து மிகச் சிறப்பானதாகும். சுருக்கமாக, விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த திராவிட ஆட்சி – நீதிக்கட்சி 110 ஆண்டுகள்; அதுபோலவே நீதிக்கட்சிக்கு அடுத்து, தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் 100 ஆண்டு காலம்; அதுபோல திராவிடர் கழகம் 85 ஆண்டு காலம்; அதுபோல திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டு காலம் என்று வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய ஓர் இயக்கம் என்று சொன்னாலும், இன்றைக்கு அந்த இயக்கத்தை, எந்த அளவிற்கு முதலமைச்சர்  கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும்போது, உலகளாவிய அளவிற்கு இந்தத் திராவிடத்தினுடைய புகழ் பரவி இருக்கிறது; அந்த வாய்ப்பை, கொள்கையை வைத்துக்கொண்டு இன்றைக்கு அவர்கள் எந்தெந்த முயற்சிகளை செய்தார்கள்? இந்த  மூன்று நூல்களும் மிகப்பெரிய அளவிற்கு முக்கனிகள் போல – முத்தமிழ் போல! மிகப்பெரிய வாய்ப்பு!!

மூன்று புத்தகங்களும், கருத்தாயுதங்கள்!

இன்றைக்கு இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக பல வித்தைகளை செய்து பார்க்கிறார்கள். ஒரு பக்கம் நிதி நெருக்கடி, இன்னொரு பக்கத்திலே ஆளுநருடைய அவதூறு பேச்சுக்கள்; இன்னொரு பக்கம் மிக முக்கியமான திரிசூலம் ஒன்றை வைத்துக்கொண்டு, அந்த திரிசூலத்தைக் காட்டி காட்டி, முதலிலே வருவானவரித் துறை,  அதற்கு அடுத்தது சிபிஅய், அதைத் தாண்டி அமலாக்கத் துறை ஏவினால், அமைச்சர்கள், மற்றவர்கள் எல்லோரும் மிரண்டு போவார்கள் என்று நினைத்தார்கள். மிரண்டு போகக்கூடிய அளவிற்கு, அச்சப்படக்கூடிய அளவிற்கு ஒருவரும் இங்கே கிடையாது. நீங்கள் எந்த ஆயுதத்தை எடுத்தீர்களோ, எங்களிடம் அப்படிப்பட்ட அந்த ஆயுதத்தை, அதிகாரத்தை விட, வரலாற்று கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இந்த மூன்று புத்தகங்கள். இவை புத்தகங்கள் அல்ல; இவை காகிதங்கள் அல்ல; ஆயுதங்கள், கருத்து ஆயுதங்கள்! அவ்வளவு ஆழமான வரலாறு!

எந்த சமுதாயத்திலே வரலாற்றை மறக்கிறார்களோ, அந்த வரலாற்றை இன்றைக்குக் காட்டுவதற்காகத்தான் – ஒரு பக்கம் கீழடி; அதைக் கண்ட உடனே அவர்கள் அலறுகிறார்கள்; நேற்று முன்தினம் கூட பொருநை, திருநெல்வேலிக்குச் சென்று, அந்த வரலாற்றைச் சொல்கிற போது, ‘‘இல்லாத சரஸ்வதி நாகரிகம் என்று ஒன்றைத் தேடி கொண்டிருக்கிறீர்கள். இருக்கிற திராவிட நாகரிகத்தை, சிந்துவெளி நாகரிகத்தை நீங்கள் ஏன் காண முடியவில்லை?’’ என்று அறைகூவல் விடுத்தவர்தான் முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்.

அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!

எனவேதான், அரசியல் மட்டும் பேசுகின்ற இயக்கம் அல்ல; மொழியா, நாடா, மக்களா  என்று நாளும் கருதக்கூடியது. அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், என்னுடைய முப்பெரும் சாதனைகள் என்று! ‘‘தமிழ்நாட்டுக்குத் தாய் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர்; அதுபோலவே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபூர்வமானது. மூன்றாவது இரு மொழிக் கொள்கைதான்;  இங்கே மும்மொழிக்கு இடமில்லை. ஹிந்தித் திணிப்புக்கு இடமில்லை’’ என்று சொன்னவையெல்லாம் கொள்கைகள். அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்கின்ற மகத்தான ஒருவராக உள்ள காரணத்தால்தான், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களைப் பார்த்து அரண்டு போய் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள்  எவ்வளவு நெருக்கடிகள் கொடுத்தாலும், நெருக்கடிகளையே சந்தித்தவர்கள் நாங்கள். ஆகவே, அவர்கள் கொடுக்கின்ற நெருக்கடியிலே இருந்து வெளியே வருவோம் என்று சொல்லக்கூடிய, துணிச்சல் மிக்க, ஆற்றல் மிக்க ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார்; இந்த அடித்தளம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத்தான், வரலாற்றுக் காவியங்களாக இந்த மூன்று நூல்கள் இருக்கின்றன.

திராவிடம் இன்றைக்கு
உலக மயமாக ஆகி கொண்டிருக்கிறது!

நமது முதலமைச்சர், எந்த அளவிற்கு நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஊட்டுகிறார்களோ, உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழர்களுக்கு அப்பாற்பட்ட வர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக, உலகம் முழுவதும் சென்றி ருக்கிறார்கள்; உலகத்தைப் பெரியார் மயமாக்கி, பெரியாரை உலக மயமாக்கி இருக்கக்கூடியது மட்டுமல்ல, திராவிடம் இன்றைக்கு உலக மயமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம், முதலமைச்சர் வெளிநாட்டிற்குச் சென்று முதலீடுகளைப் பெற்று வருகிறார்; அந்த முதலீடுகளை பெற்று வருவது மட்டுமல்ல, முதலீடுகளை செய்து வருகிறார். அதனால்தான் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பெரியாருடைய படத்தைத் திறந்து வைத்துவிட்டு உலகத்தை காட்டுகிறார். திராவிடத்தினுடைய வரலாற்றில், இவையெல்லாம் சாதாரண குறிப்புகள் அல்ல மிகவும் நினைவில் வைத்து கொள்ளவேண்டியவையாகும்.

‘‘மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்!’’

அதன் காரணமாகத்தான், தமிழ்நாட்டில் எல்லா வித்தைகளையும் செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற காரணத்தினால்,  கடைசியிலே எஸ்அய்ஆர் என்பதன்மூலமாக வாக்குத் திருட்டைச் செய்யலாமா? அல்லது திரிபுவாதத்தைச் செய்யலாம் என்றெல்லாம் வரும்போது, அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர், நம்முடைய முதலமைச்சர். வருவதற்கு முன்னாலே சொல்லக்கூடியவர்.  ‘‘மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்’’ என்பதுதான்.

தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை உண்டாக்கலாமா?  என்று நினைக்கிறார்கள்!

ஆகவே, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எதைச் செய்ய வேண்டுமோ, அதை காலத்தால் செய்து கொண்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆயுதங்களால், மிரட்டுகின்ற ஆயுதங்களால், தங்கள் திரிசூலங்களால் எதுவும் முடியவில்லை என்ற உடனே, கடைசியாக என்ன செய்கிறார்கள் தெரியுமா? வடநாடு போல நினைத்து, தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை உண்டாக்கலாமா? என்று பார்க்கிறார்கள். ஒருபோதும் நடக்காது, ‘‘இது பெரியார் மண் அமைதிக்காடாக இருக்கிற அமைதி பூங்கா’’ என்பதை நம்முடைய முதலமைச்சர் தெளிவாக, திட்டவட்டமாகச் சொல்லுகிறார், ‘‘ஒருபோதும் நாங்கள் தலை குனிய மாட்டோம்; தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன்’’ என்று சொல்லக்கூடிய ஓர் அற்புதமான ஒரு முதலமைச்சராக இருக்கிற காரணத்தால்தான், அவரைப் பற்றி நாம் நினைப்பதை விட, நாம் பாராட்டுவதை விட, நம்முடைய எதிரிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்?

நூலாசிரியர் திருமாவேலனைப் பாராட்டுகிறோம்்!

இங்கே வெளியிடப்பட்ட புத்தகங்களை எல்லாம் நீங்கள் வாங்கி, படித்துப் பார்க்க வேண்டும்; பாராட்ட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் திருமா வேலன் அவர்களைப் பாராட்ட வேண்டும்.  அவர் எத்தனையோ நூல்களை எழுதி இருக்கிறார்.  எல்லாமே மறுப்புகள், விளக்கங்கள், தெளிவுரைகள், கருத்துரைகள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பை உரு வாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றே ஒன்று, அந்த ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். எந்த அளவிற்கு, நமக்குப் பெருமையாக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறாரோ, எந்த அளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு, மற்றவர்களுக்கு அவர் பாடமாக இருக்கிறாரோ, அந்த அளவுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறது அவர் உருவம்.

அண்மையிலே வந்த ஒரு செய்தி!

உள்துறை ஒன்றிய அமைச்சரின்
நிதானமிழந்த பேச்சு!

ஒருவர் பேசுகிறார், மிக முக்கியமான ஒருவர், இந்திய  அரசியல் அரங்கத்தில் பேசுகிறார், ‘‘ஸ்டாலினுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி,மு,க, துடைத்து எறியப்படும்’’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சரும், பா.ஜா.க. மூத்தத் தலைவருமான அமித்ஷா ஆவேசமாகக் கூறினார். இந்தச் செய்தி, சில நாள்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்திருக்கிற செய்தி.

எந்த இடத்திலே அவர் பேசியிருக்கிறார்? ஆவேசம் அவருக்கு வந்திருக்கிறது, ஆத்திரம் அவரை முன்னாலே தள்ளி இருக்கிறது. அவருடைய நிதானத்தை இழக்கச் செய்திருக்கிறது.

ஆனால், அவர் எந்த இடத்திலே பேசி இருக்கிறார்? தமிழ்நாட்டுக்கு வந்து, தேர்தல் களத்திலே பேசி இருக்கிறாரா? அல்லது  அரசியல் மேடைகளிலே பேசி இருக்கிறாரா? என்றால், கிடையாது. அடுத்த பகுதிதான் மிக முக்கியமானது. குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர்  பேசும்போது,  ‘‘2014 இல் மக்களவைத் தேர்தல் தொடங்கி, தற்போதுவரை 2025 வரை பா.ஜ.க. தொடர் வெற்றிகளைப் பெற்றிருக்கிறது’’ என்றார்.

உங்களால் திராவிட இயக்கத்தை நெருங்கக் கூட முடியாது என்பதற்கு, மூன்று ஆயுதங்கள் தான் இந்த நூல்கள்!

இது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே உண்மையா? நாடாளுமன்றத் தேர்தலில் 40–க்கும் 40 இல் வெற்றி பெற்றத் தலைவர் இங்கே இருக்கிறார். அவரைப் பார்த்து நீங்கள் ஒரு அறைகூவல் விடுத்திருக்கிறீர்களே, துடைத்தெறிவோம் இந்த இயக்கத்தை என்று சொல்கிறீர்களே, உங்களால் இந்த இயக்கத்தை நெருங்கக் கூட முடியாது என்பதற்கு, மூன்று ஆயுதங்கள் தான் இந்த நூல்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ‘‘தேர்தல் வெற்றியின் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாங்கள் வருவோம். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் எல்லாம் சரியாக இருக்கிறது’’ என்று  மேலும் அமித்ஷா சொல்கிறார்.

தயவு செய்து எண்ணி பாருங்கள்,  அவரால் முடியுமா? தி.மு.க.வைத் துடைத்து எறிய முடியுமா? என்றால், முடியாது. அங்கே இருக்கிறவர்கள் தான், பலபேர் இங்கே துடைத்துக் கொண்டிருக்கிற வேலைக்கு வந்திருக்கிறார்கள்; நாம் அவர்களைப் பாதுகாப்போடு நடத்தி கொண்டிருக்கிறோம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால், அதைவிட மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதனுடைய வேர் எங்கு இருக்கிறது என்று தெரியாது. அதை விளக்குகின்ற நூல்கள்தான், இந்த மூன்று நூல்கள். அந்த வேர் எங்கே இருக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இந்த வரலாறு அவ்வளவு ஆழமானது என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய அந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

நம்முடைய முதலமைச்சரைக் கண்டு
இன எதிரிகள் மிரண்டு போகிறார்கள்!

எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், குஜராத்திற்குப் போய், அங்கே அரசு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்க நேரத்திலே கூட, ஒருவரைக் கண்டு மிரண்டு கொண்டிருக்கிறார்; அவர்தான் நம்முடைய முதலமைச்சர் என்பதற்கு அடையாளம்தான். அவர் அந்த நிகழ்ச்சியிலே அப்படிப் பேசுகிறார், இப்போதே நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதற்கு, அவருடைய அந்த அச்சம், அந்த மிரண்டு போனவர்கள், அந்த சூழ்நிலை ஆகியன சாட்சியங்கள்.

எழுச்சி பெற்ற தமிழ்நாடு,
மீண்டும் உங்கள் தலைமையின்கீழ் வரும்!

எனவேதான்,  ‘‘ உயர்த்திப் பிடிக்க வரலாறு இருக்கிறது; பெரியார் இருக்கிறார், அண்ணா இருக்கிறார், கலைஞர் இருக்கிறார்; இவர்களுடைய கலவையாக நான் இருக்கிறேன்‘‘ என்று சொல்லக்கூடிய முறையில் இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே, உங்கள் தலைமையில் வெற்றி என்பது இருக்கிறதே, வாகை சூடுவோம்,  40–க்கு 40 என்ற வரலாற்றை எப்போது நீங்கள் படைத்தீர்களோ, அதுபோலவே, வெற்றி பெறுவதற்கு ஆயத்தமாக தமிழ்நாடு இருக்கிறது. களம் கண்டு கொண்டிருக்கிறீர்கள்; நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறீர்கள், நெருக்கடியில் இருந்து மீண்டு இருக்கிறீர்கள். இப்போது அரசியல் நெருக்கடிகளோ மற்றவையோ வந்தால்கூட, மீண்டும் புதிய தமிழ்நாடு, வெற்றி பெற்ற தமிழ்நாடு, எழுச்சி பெற்ற தமிழ்நாடு, மீண்டும் உங்கள் தலைமையிலே வரும். 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இது போன்ற மேடைகளில், அந்த வெற்றி விழாக்களுடைய விமர்சனங்களைப் புத்தகங்களாக வெளியிடுவோம், புத்தகங்களாக வெளியிடுவோம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை கூறி முடிக்கிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க திராவிடம்! ‘‘திராவிடம் வெல்லும், அதை என்றும் வரலாறு சொல்லும்!’’ நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *