அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள்!
‘‘மறைந்து 52 ஆண்டுகள் ஆனாலும், உலகப் பெரியாராய் வாழ்ந்து வருகிறார்!
அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

தந்தை பெரியார் கண்ட மானமும், அறிவும் மங்காத மறையாத மகத்தான பணி தொடர, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

  1. ‘‘பொதுமக்களின் சுயமரியாதைக்கும், உரிமைக்கும், விடுதலைக்கும் ஆபத்தான இயக்கம் என்று எதையாவது நான் கருதினால், அதை அழிக்காமல், நான் பின்வாங்க மாட்டேன்.
  2. நான் இறந்தாலும், ஏனைய திரா விடர் கழகத் தோழர்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.
  3. எனது வேலையை, அப்படியே விட்டு விட மாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள்.
  4. எனக்கு ஏதாவது குறை, கவலை இருக்குமானால், அது மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும்பற்றிதான்!
  5. சிலரின் அருவருப்புக்கோ, கோபத்திற்கோ பயந்து, நான் எனது திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் கொண்டவன் அல்ல. அவ்விதம் செய்வது, பயத்தாலும், சுய நன்மையாலுமே!
  6. மக்களின் பேராதரவு, கொள்கையில் உண்மை, போராட்ட அனுபவம் ஆகியவற்றால் இறுதி வெற்றி எப்போதும் எங்களுக்கு உறுதி! உறுதி!! உறுதி!!!’’

– தந்தை பெரியார்

நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சூரியன் என்று உலகம் கொண்டாடும் உன்னத அறிவாசானின் 52 ஆவது நினைவு நாள்! மேலே சுட்டும் தெளிவுரைகள் பாரீர்!

புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர்!

உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்கு விழி திறந்த வித்தகர் அய்யா தந்தை பெரியார், தனது கண்களை மூடியும், காலத்தோடு காலமாய் என்றென்றும் கொள்கையாய், திட்டங்களாய், போராட்ட வடிவங்களாக வாழும் வரலாற்றுப் புரட்சி யாளராக நிலைத்து, மானிடத்தைப் பேதமிலாப் பெருவாழ்வு வாழும் புது வாழ்வு காண அழைப்பு விடுத்த, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சகாப்த தலைவர், தனது தொண்டர்களையும் தாண்டி, உலகத் தலைவராக தனது உயரிய மனித சமத்துவத்தால் என்றும் வாழும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர்!

அவர் ‘மறைந்து’ 52 ஆண்டுகாலம் ஓடிவிட்டது!

‘அவருக்குப் பின்?’ என்ற கேள்விக்கு, மேற்காட்டிய, அவரது தொலைநோக்குக் கருத்துரைகளே பதில்களாக எவருக்கும் அமையும்!

அண்ணாவின் மதிப்பீடு!

அவரது முக்கிய சீடர், பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளும் மிகமிகச் சரியானவை மட்டுமல்ல; சரித்திரம் சாட்சியம் கூறும் சான்றுகளும் ஆகும்!

  1. பல நூற்றாண்டு பழைமைகளையும், பொய்மை களையும் புரட்டிப் போட்டு, மவுனப் புரட்சி செய்த ஒரு நூற்றாண்டு!
  2. தனது கொள்கை லட்சியங்களான வெற்றிக் கனிகளை, தானே நேரில் கண்டு, மகிழ்ந்து வாழ்ந்த, வையகம் காணா வியத்தகு விடுதலைக் கலங்கரை வெளிச்சம்!

அவர் விட்டுச் சென்ற பணிகளை – அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிக்க, அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களது சீரிய தலைமையில், 5 ஆண்டுகாலம் இயக்கம் வீறுநடை போட்டது. அதன் வழியில், பின்னால் எஞ்சிய 47 ஆண்டுகளாக, அவரது இராணுவக் கட்டுப்பாடுடைய தொண்டர்கள், தோழர்கள் எம்மைப் பலப்படுத்தி, செயல்பட வைக்கும் சீர்மை, அசாதாரணமானது!

சலிப்பின்றி பணியாற்றி வருகின்றனர்!

‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்று நாளும் நிரூபிக்க, இன எதிரிகள், கொள்கை எதிரிகள் ஆகிய பன்முகப் பகைவர்களைக்  களத்தில் சந்தித்து, நாளும் களங்காணும் கருஞ்சட்டைப் பாசறையினர் – வாள்களாக, கேடயங்களாக சலிப்பின்றி பணியாற்றி வருகின்றனர்!

அறிவாசான் தந்தை பெரியார் தம் கொள்கை களுக்காகவே வாழ்ந்து எதிர்நீச்சல் போட்டு வருகிறோம்! இரட்டைக் குழல் துப்பாக்கியாய், தாய்க்கழகத்தின் அரசியல் அங்கமாக, அகிலத்தின் பார்வையை – பாராட்டைப் பெற்று வரும் திராவிட அரசியலும், ஓங்கி உயர்ந்து நின்று, நாளும் வென்று வருகின்றது!

தொய்வின்றித் தொடர்கிறது!

1947 இல் முதலமைச்சரான ஓமாந்தூரார், அதன்பின் 1954 இல் முதலமைச்சரான பச்சைத் தமிழர் காமராசர், பின்பு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று, தமிழ்நாட்டு ஆட்சி தொய்வின்றி திராவிட வரலாற்றுச் சிறப்புடன் தொடர்கிறது! நீளுகிறது!!

இடையில், ‘திராவிட முத்திரை’யினால் வென்ற அ.தி.மு.க.வின் தலைவர் எம்.ஜி.ஆர்.  – அவரின் தேர்வான அம்மையார் ஜெயலலிதா ஆட்சிகளிலும் சில பல சமூகநீதி சட்ட வாய்ப்புகள் ஏற்பட்டன – 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம், 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன்!

இன்றோ அது தடுமாறி, தடம் மாறிச் செல்கிறது அக்கட்சி!

அதன் பெயரில் உள்ள திராவிடமும், அண்ணாவும், ‘‘விபீடண சரணாகதிப் படலத்திற்கு’’ ஆளாகிய பரிதாப நிலையைச் சந்தித்துக் கொண்டுள்ள வேதனையான அவல நிலை!

‘திராவிட மாடல்’ ஆட்சி சுயமரியாதை ஆட்சியாய் – இனத்தின் மீட்சியாக உள்ளது!

என்றாலும், இரட்டைக்குழல் துப்பாக்கிகளில் ஒன்றான தி.மு.க. என்ற ஆளுமை  மிகுந்த மக்கள் நல ‘திராவிட மாடல்’ ஆட்சியாக, தமிழ்நாட்டின் தன்மானம், உரிமைகளைத் தலைகுனிய விடாது செய்யும், ‘‘எந்நாளும் தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்’’ என்று சூளுரைக்கும் சுயமரியாதை ஆட்சியாக – இனத்தின் மீட்சியாக நாளும் சரித்திரம் படைத்து வருகிறது, முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஒப்பற்றத் தலைமையில்!

அதனைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில், அதன் கொள்கை எதிரிகளின் கோணல் புத்தி வியூகங்களை அம்பலப்படுத்தி, அறிவுறுத்தி – களத்தில் வாளாகவும், கேடயமாகவும் பணி செய்யும் பேறு பெற்றுள்ளோம்.

அய்யா கண்ட மானமும், அறிவும் மங்காது, மறை யாது மகத்தான பணி தொடர, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரையாகும்!

வரலாற்றுக்குரிய போரில்
வாகை சூடுவோம்!

எளிதில் தம்மை ‘‘விற்று’’, எதிரிகளின் எடுபிடி களாகியுள்ள விபீடணக் கூட்டம், வெட்கித் தலை குனியும் வண்ணம் மீண்டும் திராவிட ஆட்சி தொடர்ந்திட, வரலாற்றுக்குரிய போரில் வாகை சூட நாம் என்றும் தயாராவோம்!

‘செயற்கரிய செய்த பெரியாரின்’ தொண்டர்கள், செம்மையான கட்டுப்பாடோடு, கடமையாற்றி, இலக்கினை அடைந்து, பெருங்கடமை நிறைவேறிட – களம் அமைக்கும் உறுதியுடன் இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடருவோம், வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

23.12.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *