சென்னை, டிச. 22– சென்னை கிண்டியில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில் இந்தியக் கலை மற்றும் பண்பாட்டு பேரவை மற்றும் இந்திய யோகாசன விளையாட்டு பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து 09.11.2025 அன்று கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்களைக் கட்டி 30 நிமிடம் 30 விநாடிகள் சிலம்பக் கம்பு சுழற்றுதல் என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்வில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர் எஸ். தேவராஜ், பத்தாம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.சிறீமித்ரா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர் வி.அஸ்வர்த் ஆகியோர் உலக சாதனை முயற்சியில் வெற்றிகரமாகப் பங்கேற்றுப் பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்கண்ட சாதனை முயற்சி ஆஸ்கர் உலகச் சாதனைப் பதிவேடு மூலம் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதிய உலகச் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பங்கேற்பு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாரம்பரியக் கலை விளையாட்டான சிலம்பத்தில் உலகளாவிய மேடையில் திறமை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், மற்றும் பணித் தோழர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
