தற்கொலை தீர்வாகாது
காவித் தந்திரமும் தமிழ்நாட்டில் எடுபடாது!
‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி பெரியார் சிலையருகே தீக்குளித்து தற்கொலை!’ என்று ஒரு செய்தி!
திருப்பரங்குன்றம் முருகனுக்குச் சக்தியிருந்தால் இந்தப் பிரச்சினையை அவரே தீர்த்துக் கொள்வார். இதற்காக பக்தர் ஒருவர் தீக்குளித்து மாண்டிருப்பது வருத்தத்திற்குரியது.
மனித உயிர் மலிவானதல்ல – தற்கொலை தீர்வுக்கு உரியதும் அல்ல! எந்தக் காரணத்துக்காகத் தற்கொலை செய்து கொண்டாலும் அது ஏற்கத்தக்கதும் அல்ல!
இந்தத் தற்கொலை மரணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று இந்துத்துவா சக்திகள் முயற்சி செய்வது பரிதாபமே!
‘எங்கே பிணம் விழும்’ என்று காத்திருப்பது ஒரு கழுகு மனப்பான்மையாகும்.
‘‘கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலைக்குப் பின்னாலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று அவர் சொல்லியிருப்பதில் (ஆடியோவில்) எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் புரிந்து கொள்ள ேவண்டும்’’ என்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் நா அசைத்திருக்கிறார்.
‘தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தால் இது மாதிரி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்’ என்ற அர்த்தத்தை முதலில் நயினார் நாகேந்திரன் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானது என்றால் ‘தனக்காக ஒரு பக்தன் தீக்குளித்து அநியாயமாக மாண்டு போகிறானே’ என்று அதனைத் தடுத்திருப்பாரே; பெரியார் ‘கடவுள் இல்லை’ என்று ஏன் சொன்னார் என்பதற்கான அர்த்தத்தை – ஒரு காலத்தில் அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியில் இருந்த ஒருவர் – தந்தை பெரியாரின் மாணாக்கரான அண்ணாவின் உண்மையான கருத்தினைப் புரிந்து கொண்டு இருந்திருப்பாரேயானால், இது மாதிரியெல்லாம்பேசி இருக்க மாட்டார்.
மதத்தை முன் வைத்து அரசியல் செய்யலாம் என்பது வட மாநிலங்களில் வேண்டுமென்றால் செல்லுபடி ஆகியிருக்கலாம்.
இது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க மண். ஒரு நூற்றாண்டு காலம் பக்குவப்படுத்தப்பட்ட பகுத்தறிவு மண். இங்கே மதவாதக் காயை நகர்த்தி ‘அரசியல் வெட்டுப் புலியாட்டம்’ நடத்திப் பார்க்கலாம் என்பது நப்பாசையாக இருக்க முடியுமே தவிர நடைமுறையில் சாத்தியப்படாது.
1971ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இராமனை மய்யமாக வைத்து தேர்தலில் ஒரு கை பார்க்கலாம் என்று ஆடிக் குதித்த ஜன சங்க வகையறாக்கள் முகவரியற்றுப் போனது முக்கியமல்ல – அ(இ)துவரை காணாத 184 இடங்களில் திமுக மகத்தான வெற்றியை ஈட்டிய வரலாற்றை – வரலாறு தெரியாதவர்களுக்குப் பாடம் நடத்த விரும்புகிறோம்.
இப்பொழுதுகூட மதுரைத் திருப்பரங்குன்றம் தீபத்தை முன்னிறுத்தி இந்துத்துவா சக்திகள் ‘கண்ணி வெடி’ வைத்துப் பார்க்கலாம் என்று ஒரு மூச்சு முட்டிப் பார்த்தனர்.
அந்தோ பாவம்! மூக்கு உடைபட்டதுதான் மிச்சம்!
தீக்குளித்து மரணமடைந்த பூரண சந்திரனின் உடல் வைக்கப்பட்டிருந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட அர்ஜுன் சம்பத் மற்றும் பாஜகவினர், உடலைப் பெற்றுக்கொள்ள விடாமல் தடுத்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று போராட்டமாக மாற்றத் திட்டமிட்டனர். மத ரீதியான கோஷங்களை எழுப்பி, மதுரையில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க அவர்கள் முயன்றனர்.
தன் மகனை இழந்து தவிக்கும் அந்தத் தாயிடம், “நாங்கள் இந்துக்களின் உரிமையை நிலைநாட்டப் போராடுகிறோம்” என்று கூறி அங்கிருந்தவர்கள் முரண்டு பிடித்தனர். இதனால் வேதனையடைந்த பூரண சந்திரனின் தாயார், அவர்களது காலில் விழாத குறையாக தரையில் விழுந்துகும்பிட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
“அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. நாங்கள் உடலைப் பெற்றுச் செல்ல முடிவெடுத்துவிட்டோம். தயவு செய்து என் மகனின் உடலை வைத்து அரசியல் செய்யாதீர்கள், எங்களை நிம்மதியாகப் போகவிடுங்கள்” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
தன் மகனை இழந்த துயரத்திலும், ஒரு தாய் தனது பிள்ளையின் மரணம் அரசியலாக்கப்படுவதைத் தடுத்த விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. தாயின் கோரிக்கையையும் மீறி அங்கிருந்தவர்கள் அரசியல் செய்ய முயன்றதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் இந்துத்துவ அமைப்பினரை அங்கிருந்து வெளியேறுமாறு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெருமளவு ஊடகங்கள் முன்னிலையில் இந்த அரசியல் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்துத்துவா பேர் வழிகள் அங்கிருந்து வெளியேறினர் என்று செய்தி வெளி வந்துள்ளது.
இதன் மூலமாவது காவிக் கூட்டம் பாடம் படிக்கட்டும் – தமிழ் மண்ணில் அவர்கள் ப(ரு)ப்பு வேகாது!
இது கல்லின் மேல் எழுத்து.
கடவுளை நம்புவோர்க்கு ஒன்று – கடவுளின் மீது ‘பாரத்தை’(?) போட்டுவிட்டு, உங்கள் வாழ்க்கை பாதையைச் செப்பனிடுவதில் கவனம் செலுத்துவது நல்லது!
