வாக்குத் திருட்டு, வாக்காளர் நீக்கம், போலி வாக்காளர்கள் எனப் பல மோசடிகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிகளை ஈட்டி வருவதை, பல ஆதாரங்கள் சொல்கின்றன. அதற்கு உடந்தையாக இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அந்த மோசடிகளின் வரிசையில், புதிய வகையாக பீகார் சட்டமன்றத் தேர்தலில், அரசு நலத்திட்டத்தையே மோசடியாக்கி, மக்களிடம் அம்பலப்பட்டுள்ளது பா.ஜ.க. மற்றும் நிதீஷ்குமார் கூட்டணி. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்கிற பெயரில், பெண்களுக்கு சுயதொழில் தொடங்க பத்தாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்து, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தது நிதீஷ்குமார் அரசு. சில தொகுதிகளில் ஆண்களின் வங்கிக் கணக்குக்கும் மாற்றப்பட்டது.
“இது நலத்திட்டமாக இல்லாமல், வாக்குகளைக் கவர்வதற்கான மோசடி” என அப்போதே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. மக்களின் வாக்குகளை பணத்தின் மூலம் அறுவடை செய்து ஆட்சியைப் பிடிக்கவும் செய்தது பா.ஜ.க. நிதீஷ்குமார் கூட்டணி. இப்போது, அந்தப் பணத்தைப் பெற்ற ஆண்கள் திரும்ப அளிக்க வேண்டும் என அறிவிப்பினை, வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட பணம், தவறுதலாக மாற்றப்பட்டது என்றும், அவற்றைத் திருப்பித் தருமாறும் வங்கிகள் அறிவிக்கை அனுப்பியுள்ளன. இப்படி வந்த அறிவிப்புகளால் பல தொகுதிகளில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “எங்கள் வாக்குகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக் காரணமாக இருந்தன. பிறகு, ஏன் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்?” எனப் பல கிராமங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெற்றி பெறுவதற்கு வில்லங்கமாக சூழ்ச்சி செய்த மோடி – நிதீஷ்குமார் கூட்டணியின் மற்றுமொரு மோசடி, மக்களிடம் அம்பலப்பட்டுள்ளது.
நன்றி: ‘முரசொலி’ 19.12.2025
