முனைவர்
அதிரடி க. அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்,
திராவிடர் கழகம்
புரட்சியாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு தாக்கத்தால் உருவாகிறார்கள் என்பதே உண்மை. வரலாற்றில் புரட்சியாளர்கள் என்று புகழப்படக் கூடியோர் யாராக இருப்பினும் அவர்கள் உலகின் பொதுச் சொத்தாக போற்றப்படுகின்றனர்.
உலகத்தின் தொடக்கம் முதல் இன்று வரை நடை பெறுகிற அனைத்து மாற்றங்களுக்கும் அவர்களே காரணமாகிறார்கள்.
‘நம்முடைய நாட்டில் புரட்சி என்பதும் புரட்சியாளர்கள் என்பவர்களும் ஒருதனித் தன்மைக்கு உரியவர்கள் ஆகிறார்கள். இங்கு புரட்சிக்குச் சவாலாக. வேறு எங்கும் இல்லா ஒன்று காரணமாக அமைந்துள்ளது. அதுதான் சமுதாயத்தின் தீர்க்க முடியா நோயான ஜாதி ஆகும்.
இந்தத் திசையில் சிந்தித்தவர் புரட்சியாளர் புத்தர். அவரைத் தொடர்ந்து 2000 ஆண்டு இடைவெளிக்கு பின் தோன்றிய தந்தை பெரியார், இந்தியத் துணைக் கண்டத்தின் பெரு நோயான ஜாதியை அடையாளங் கண்டார் – அதை ஒழிக்க எண்ணினார்.
பள்ளிப் பருவத்திலேயே ஜாதியின் கொடுமையைக் கண்டு கொதித்தார். விடை தெரியாது தவித்தார். அந்த ஜாதிதான் பெரியாரை சிந்திக்கத் தூண்டியது. பிற் காலத்தில் ஜாதியை எதிர்த்துச் சுயமரியாதை இயக்கம் கண்டார். அந்த ஜாதிக்குக் காரணமாக வர்ணாசிரம தர்மம் இருந்தது. அதற்கு அடிப்படை ஸநாதன மதம் – அது வேத மதம் என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு இன்றைய பெயர்தான் இந்துமதம்.
இந்து மதத்தின் ஜாதித் தத்துவத்தை எதிர்த்து இயக்கம் கண்ட தந்தை பெரியார் பெரும் பணக்காரர். ஈரோட்டில் அதிக சொத்துகளுக்கு சொந்தமான செல்வந்தர் குடும்பம்தான் தந்தை பெரியாரின் குடும்பம். உயர் ஜாதி என்று சொல்லப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்.
சமூக மதிப்பில் உச்சாணிக் கொம்பிலிருந்த குடும்பத்தில் பிறந்திட்ட பெரியார் ஜாதியை ஒழிப்பதே தனது தலையாய குறிக்கோள் என்று பொது வாழ்க்கையில் தனது முழு நேரத்தையும் – உழைப்பையும் – பகுத்தறிவுச் சிந்தனையும் கொண்டு உழைத்தார்.
எந்த ஜாதி, வெகு மக்களின் கீழ்நிலைக்கு காரணமோ அந்த ஜாதி அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்பில் வகுப்புவாரி உரிமை வேண்டும் என்று போராடினார். ‘அனைத்து ஜாதியையும் அர்ச்சகர் ஆக்குவதே’ எனது இறுதி விருப்பம் என்று பிரகடனப் படுத்தினார். ‘தீண்டாமை ஒழிப்பு’ என்பதற்கு பதிலாக ‘ஜாதி ஒழிப்பு’ என்று அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை 1957 நவம்பர் 26ஆம் நாள் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டோரைத் திரட்டி கொளுத்தச் செய்தார்.
ஜாதி– தீண்டாமை ஒழிப்பிற்காகத் தந்தை பெரியாருக் குப் பின்பு அன்னை மணியம்மையார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக்கிடும் கோரிக்கை மற்றும் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் என தான் தலைமை ஏற்ற குறுகிய காலத்தில் (5 ஆண்டுகள்) பல போராட்டங்களை நடத்தினார்.
அம்மா மறைவுக்குப்பின்னால் இயக்கத்தினைவழி நடத்திடும் பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற நம் ஆசிரியர் அய்யா அவர்கள் ஜாதி தீண்டாமை ஒழிப்புக் களத்தைப் படுவேகமாக முடுக்கி விட்டார்.
உழைப்பவன் கீழ்ஜாதி – உழைக்காத பார்ப்பான் மேல் ஜாதியா? மண்ணின் மைந்தன் கீழ் ஜாதி – வந்தேறிகள் மேல் ஜாதியா? பிறப்பில் உயர்வு – தாழ்வு உலகில் வேறு எந்த நாட்டிலும் உண்டா? தொட்டால் தீட்டு –பார்த்தால் பாவம் என்று ஒதுக்கப்படும் மக்கள் (திராவிடர்கள்) போல் உலகில் எந்த நாட்டிலும் உண்டா? எந்த நாடும் தீண்டாமைப்பற்றி கேள்விப்பட்டதுண்டா? இவ்வாறு பரப்புரைக் கூட்டங்களில் மாநாடுகளில் முழங்கினார். தீர்மானங்களை வடித்தார். ஜாதி ஒழிப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம், விதவை மறுமணம் என புரட்சிகரமான திருமணங்களைத் தந்தை பெரியாருக்குப்பின் சுயமரியாதைத் திருமண நிலையங்களை உருவாக்கி ஆயிரக்கணக்கில் இணையேற்புகளை நடத்தி முடித்து, ஆரிய ஆதிக்கத்தின் ஜாதி வேரை அடியோடு பிடுங்கி எரியும் சமுதாயப் புரட்சியினை நடத்தி வருகிறார்.
ஆணவக் கொலைகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்று நடைபெறல் உண்மைதான். ஆனால், எந்த ஆர்ப்பட்டமும் – இன்றி ஆயிரக்கணக்கில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றனவே! இது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜாதி ஒழிப்புக் களத்தில் அசுர வேகத்தில் ஆற்றிடும் பணியால் அல்லவா? தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவூட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்திற்கு ஆவன செய்திட, பெரியாருக்கு பின் தலைமையேற்றுக் களமாடும் மானமிகு ஆசிரியரின் உழைப்புதான் காரணம் என்பது நாடறிந்தஉண்மையாகும்.
தனிச்சுடுகாடுகள் இருந்தபோதும் அனைத்து மக்களும் பொதுச் சுடுகாட்டில் எரியூட்டப்படுவது நடை பெறுகிறது. தாழ்த்தப்பட்டோரை மின்சாரச் சுடுகாட்டில் எரித்தபின் பிற ஜாதியினர்அதே மின்சார சுடுகாட்டில் எரிக்கப்படுகிறார்களே! சமூகம் அங்கீகரிக்கிறதே! இந்த மாற்றம் நிகழ்ந்ததற்கு யார் காரணம்?
ஜாதி தீண்டாமை ஒழிப்பிற்காக பெரியாருக்குப்பின் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் பிரச்சாரத் திட்டங்களை – போராட்டங்களை காண்போம்.
பூரி சங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு
ஜாதி – தீண்டாமையைக் காத்திட – இனவெறிகொண்டு ஆர்ப்பரித்த பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை 8.11.1988 அன்று நடத்திட ஆணையிட்டார்.
அதற்காகத் தொண்டர்களைச் சந்தித்து உற்சாகமூட்டி, போராட்ட வீர்களின் பட்டியலைப் பெற்றுக் கொள்ள இரயில் மூலம் பயணம் மேற்கொண்டார்.
3.11.1988 – காட்பாடியிலிருந்து கோயமுத்தூர், 4.11.1988 –ஈரோட்டிலிருந்து திருச்சி, 5.11.1988 – தஞ்சாவூரிலிருந்து நாகூர், 7.11.1988 – மயிலாடுதுறையிலிருந்து சென்னை என்று பயணித்தார். கோயமுத்தூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர் நகரங்களில் போராட்ட வீரர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டு விளக்க பொதுக் கூட்டங்களில் பேசினார். சென்னையில் 8.11.1988அன்று பூரிசங்கராச்சாரி கொடும்பாவியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் கொளுத்தினார்.
ஜாதி ஒழிப்பு மாநாடுகள்
தீண்டாமை ஒழிப்பு என்பது ஏமாற்று வேலை, ஜாதி ஒழிப்பு என்றுதான் கூற வேண்டும் என்று 1995 ஆம் ஆண்டு 25 இடங்களில் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை எழுச்சிகரமாக நடத்தி ஜாதித் தத்துவத்தை நார் நாராக கிழித்தெடுத்தார்.
ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்ற இடங்கள்
25.1.1995 – இலால்குடி, 3.2.1995 – சத்தியமங்கலம், 4.2.1995 – மேச்சேரி, 5.2.1995 – கல்லாவி, 11.2.1995 – வீரவநல்லூர், 12.2.1995 – அருப்புக்கோட்டை, 18.2.1995 –விழுப்புரம், 20.2.1995 –மன்னார்குடி, 25.2.1995 –ராமேஸ்வரம், 26.2.1995 – திருப்பத்தூர், 24.3.1995 – கடலூர், 1.4.1995 – உத்திரமேரூர், 2.4.1995 –புழல், 3.4.1995 –தாம்பரம், 9.4.1995 – நன்னிலம், 14.4.1995 –செந்துறை, 15.4.1995 – குளித்தலை, 5.5.1995 – ஊட்டி, 10.5.1995 – ஊரணிபுரம், 11.5.1995 –கந்தர்வகோட்டை, 21.5.1995 –குடியாத்தம், 22.5.1995 – சங்கராபுரம், 2.6.1995 – சின்னாளப்பட்டி, 3.6.1995 பொள்ளாச்சி, 15.7.1995 – செய்யாறு, 28.8.1995 – கே.கே.பட்டி.
1998இல் தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் தீயாகப் பரவியது. பலர் உயிரிழந்தனர். அளவிட முடியாத உடைமைகள் ஏராளம் நாசமாயின. இதுபோன்ற ஜாதிக் கலவரத்தைத் தூண்டுபவர்கள் பார்ப்பனர்களே என்றும் – அவர்கள் ஒருபோதும் கலவரத்தில் கலந்து கொள்வதும் இல்லை எவ்வித பாதிப்புக்கும் ஆளாவதும் இல்லை என்று கருத்தினை விளக்கினார். பொம்மலாட்டத்தில் பொம்மைகள் சண்டை போடுவதுதான் பார்ப்போருக்குத் தெரியும். ஆனால், திரைக்குள் மறைந்திருந்து இயக்குப வர்களைத் தெரியாது. சண்டைக்குப் பொம்மைகள் காரணமல்ல. பொம்மைகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்டோரை இயக்கும் பார்ப்பனர்களே காரணம் என்று தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
மீண்டும் ஜாதி ஒழிப்புப பிரச்சார பெரும் பயணம் (முதற்கட்டம்)
12.12.1998 முதல் 19.12.1998 வரை முதற்கட்டமாக ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடங்கினார்கள்.
வைக்கத்திலிருந்து மதுரை வரை 8 நாட்கள் 1313 கிலோ மீட்டர் பெரும்பயணம் 48 பொதுக் கூட்டங்களில் பரப்புரை செய்து முடித்தார்.
இரண்டாம் கட்ட பயணம்
அடுத்து இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணம் பத்து நாட்களுக்குத் திருத்தணியில் தொடங்கி திருச்சி வரை 59 இடங்களில் பரப்புரை செய்திடும் மாபெரும் பிரச்சாரப் பெரும்பயணத்தைத் தொடங்கி நிறைவு செய்தது சமத்துவத்திற்கு எதிரான ஜாதிக்கு மரண அடி கொடுக்கும் மகத்தான ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் என்றால் மிகையில்லை.
ஒவ்வொரு கூட்டத்திலும் ‘ஜாதியை’ இரத்தத்தை வைத்து பிரித்துக் காட்ட முடியுமா? ஒரு ஜாதிக்காரன் இரத்தம் மற்ற ஜாதிக்காரனுக்கு, குறிப்பாக பார்ப்பனர் களுக்குச் செலுத்தினால் உயர் போய்விடுமா? என்று கேள்வி கேட்டு சங்கரமடத்தையும் –அக்கிரகாரத்தையும் அலறச் செய்தார் – அடி வயிற்றைக் கலங்கச் செய்தார்.
ஜாதி ஒழிப்பிற்கான 10 அம்சத் திட்டத்தை 29.7.1999இல் திருச்சியில் வெளியிட்டார். இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் ஜாதி எதிர்ப்புச் சிந்தனையை ஆழ் மனதில் பதியச் செய்தார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை
ஜாதியை ஒழிக்கும் திட்டங்களில் தலையாய திட்டமாக ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும்’ என்று அறிவாசான் தந்தை பெரியார் போராடினர். இவ்வாசை நிறைவேறாது பெரியார் மறைந்தார். அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதைப்போல, ‘‘தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்தமுள்ளோடு அடக்கம் செய்துள்ளோம். அம்முள்ளை எடுத்தே தீருவோம்’’ என ஆசிரியர் உறுதியேற்றார்.
பிறவிஇழிவு
பிறவி இழிவினை நிலை நிறுத்தும் வர்ணசிரம முறையை ஒழிக்க ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும்’ திட்டம்தான் பெரும் பயன்தரும் என்று சிந்தித்த பெரியார் அவர்கள் 26.1.1970இல் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் தனது தலைமையிலேயே நடைபெறும் என முடிவெடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் 17.1.1970இல் கூறிய உறுதி மொழியை ஏற்று தந்தை பெரியார் போராட்டத்தை ஒத்தி வைத்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதே ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கு வழிகோலும் என்ற அன்றைய காங்கிரஸ் அரசு நியமித்த இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையும் கூறியது.
30.11.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன் வரைவு கொண்டு வரப்பட்டு, 8.1.1971 முதல் அச்சட்டம் நடைமுறைக்குவந்தது.
இச்சட்டத்தினை எதிர்த்து ஜீயர், சங்கராச்சாரியார் தலைமையில் 12 பேர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்காக வழக்குரைஞர்கள் பல்கி வாலா, பராசரன் ஆகியோரும் மேனாள் நீதியரசர் நடேசன் அவர்களும் வாதாடினார்கள். இந்த வழக்குசேஷம்மாள் வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
அய்ந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உச்சநீதி மன்றத்தில் விசாரித்து, ஒருமித்த தீர்ப்பெழுதியது. 14.3.1972இல் வழங்கப்பட்ட அத்தீர்ப்பில், ‘பரம்பரை அர்ச்சகர் முறைசெல்லாது’ என்றும், ‘ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம்’ என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நீதியரசர் எஸ்.மகராசன் தலைமையில் 24.9.1979 அன்று குழுஒன்றை அமைத்து 27.8.1982இல் இக்குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதை அமல்படுத்த 1984இல் நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.
14.8.1982 தஞ்சையில் போராட்ட விளக்க மாநாடு நடத்தி 35 இடங்களின் முன்பு வேண்டுகோள் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு முன்பு அறப்போராட்டத்தில் கலந்துகொண்டார்.
17.9.1991 அன்று அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழிகாண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
1991 முதல் 1996 வரை செல்வி ஜெயலலிதா அரசிலும், 1996 முதல் 2001 வரை கலைஞர் அரசிலும், 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அரசிலும் இப்பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையில் 10.5.2000இல் திருவாரூர் தியாகராயர் கோயில் மூன்றும் 15.7.2004 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 01.2.2006 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும், விழிப்புணர்வுப் பிரச்சாரப்பயணம் தொடங்கி முதற்கட்டமாக 13.2.2005 சென்னை திருவல்லிக் கேணியிலும், இரண்டாம் கட்டம் மன்னார்குடியிலும், மூன்றாம் கட்டம் சேலத்திலும், நான்காம் கட்டம் குன்னூரிலும், அய்ந்தாம் கட்டம் ஆத்தூரிலும், ஆறாம் கட்டம் காரைக்காலிலும் நிறைவடைந்தது.
அனைத்து நிறைவு விழா கூட்டங்களிலும் தமிழர் தலைவர் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார்கள்.
1.3.2005 அன்று வேண்டுகோள் விண்ணப்பத்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரிடம் கொடுத்தார். மேலும், 2006இல் நடைபெறும், சட்டமன்றத் தேர்தலிலும் அனைத்து ஜாதியிரையும் அர்ச்சகராக்குவோம் என உறுதி கூறுவோர்க்கே திராவிடர் கழகத்தின் ஆதரவு என்று அதிரடி அறிவிப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவித்தார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் 2006 தேர்தலில் அமையும் தி.மு.க.அமைச்சரவையின்முதல் பணி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்குவதே என்று உறுதி கூறிய தால், திராவிடர் கழகம் தி.மு.க. கூட்டணியை ஆதரித்தது.
தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. முதலமைச்சர் கலைஞர் வாக்குறுதிப்படி முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 16.5.2006 அன்று அதற்கான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
10.6.2006 அன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணியை செயல்படுத்த உயர்நிலைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 12.6.2006 அன்று சட்டமியற்ற ஆவன செய்த முதலமைச்சர் கலைஞருக்குத் தமிழர் தலைவர் தஞ்சையில் பாராட்டுக் கூட்டம் நடத்தி சிறப்பித்து நன்றி கூறினார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெற்று 69% இடஒதுக்கீடு அடிப்படையில் 206 பேர்களுக்கு பயிற்சி அளித்தது.
தலைவர்: நீதியரசர் ஏ.கே. ராஜன், செயலாளர் : த.பிச்சாண்டி(இந்து அறநிலையத் துறை ஆணையர்), உறுப்பினர்கள்: 1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், 2. பேரூர் சாந்தலிங்க அடிகளார், 3. திருவரங்கம் நாராயண ஜீயர்,4. பிள்ளையார்பட்டி முனைவர் பிச்சை சிவாச்சாரியார். 5. திருப்பரங்குன்றம் சந்திரசேகர் பட்டர்.
15.6.2005 – அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தினை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கில் ஆறுவார காலத் தடைவிதித்தது. ஆசிரியர் அவர்கள் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
அர்ச்சகர் உரிமைச் சட்டம் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் காரணமாக ஒருதிருத்தத்துடன் 21.8.2006 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தனது அறிக்கையை 23.11.2006 அன்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளித்தது.
28.8.2007 அன்று அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பங் களை வரவேற்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.
சைவ பயிற்சி நிலையங்கள்: 1. மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில் – மதுரை, 2. தண்டாயுதபாணி கோயில் – பழனி, 3.சுப்ரமணியசாமிகோயில் –திருச்செந்தூர், 4. அருணா சலேசுவரர் கோயில் – திருவண்ணாமலை.
வைணவ பயிற்சி மய்யங்கள்: 1. பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணி, 2.அரங்கநாதசாமிகோயில் – சிறீரங்கம்.
29.3.2007: 1267 விண்ணப்பங்கள் வந்தன. இதனை வரவேற்று ‘‘மகிழ்ச்சிக்குரியது’’ என்று தமிழர் தலைவர் விடுதலையில் அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
22.10.2012 மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழர் தலைவர் ஆணையிட்டார்.
4.4.2013 திருவரங்கம் கழக மாநாட்டில் அர்ச்சகர் பயிற்சி தேர்ச்சி பெற்ற 206 பேர்களும் உடனடியாக பணியமர்த் தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4.5.2013 இராஜபாளையம் தி.க.இளைஞரணி மாநாட் டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
01.8.2013 அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் படும் என்று தமிழர் தலைவர் அறிவித்தார். அந்தக் கணமே 1087 பேர் இரத்தக் கையெழுத்திட்டு வழங்கினார்.
15.6.2013 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட உடன் நடவடிக்கை தேவை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.8.2021 அன்று தி.மு.க. வெற்றிபெற்று தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 58 பேர்களுக்கு அர்சசகர் பணி ஆணை வழங்கினர். பெண் ஒதுவார்களும் நியமிக்கப்பட்டனர். தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளைத் தன் தந்தை கலைஞர் வழியில் நீக்கி உத்தரவிட்ட முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் நினைவிடம் வந்து மரியாதை செலுத்தினர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கிட கலைஞர் உருவாக்கித் தந்த சட்டத்தை அமுலாக்கி, ‘தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றி ஜாதி ஒழிப்புத் திசையில் சாதனை படைத்த சரித்திரத்திற்கு பாராட்டு’ எனும் தலைப்பில் 19.8.2021 அன்று பாராட்டுக் கூட்டத்தை தமிழர் தலைவர் கழகத்தின் சார்பில் நடத்தி சாதனை படைத்த முதலமைச்சரைப் பாராட்டினார்.
1972இல் தந்தை பெரியார் காலத்தில் போராட்டமாக வெடித்த ஜாதி ஒழிப்புக்கான அனைத்து ஜாதியும் அர்ச்சகராகிடும் புரட்சிகரமான திட்டம், அன்னை மணியம்மையாரைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டு முதல் 2021 வரை தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில் களம் பல கண்டு வென்றது. தந்தை பெரியாரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றிய பெரியாரின் சீடனாக – பெரியார் பெரும்படையின் ஆற்றல் மிகு தலைவனாக –இறுதிப் போரில் வெற்றி கண்டு இனம் காத்த ஏந்தலாக நம் தலைவர் அய்யா, தமிழர் தலைவர் அவர்கள் வெற்றி நடை போடுகிறார்.
ஆரியத்தின் கடைசிப் புகலிடத்தை நிர்மூலமாக்கிய அசுர குலத் தலைவரே வாழ்க! பல்லாண்டு வாழ்க!
