வல்லம், டிச. 20- இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய டேட்டா அனலிட்டிக்ஸ் தொடர்பான Finishing School for Employability Programme 2025 ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 100 மணிநேர பயிற்சியாக வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 80 மணிநேர தொழில்நுட்ப பயிற்சி மற்றும் 20 மணிநேர (Soft Skills) பயிற்சி இடம்பெற்றது தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் தொழில்நுட்ப அறிவுடன் கூட தொடர்புத் திறன், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் பணியிடத் தயார்தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி பேரா பா.இளங் கோவன், இணை பேராசிரியர் – கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை & அய்.சி.டி.அகாடமி ஒருங்கிணைப்பாளரின் வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பேராசிரியர் வெ.இராமச்சந்திரன், துணைவேந்தர் தலைமை உரை வழங்கி, இறுதியாண்டு மாணவர்களுக்கு தொழில்துறையை மய்யமாகக் கொண்ட திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை உயர்த்த கல்வி-தொழில்துறை ஒத்துழைப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.
துறைத்தலைவர்களின் ஆதரவுடன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) மற்றும் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் (ECE) துறைகளில் இருந்து 64 தகுதியான இறுதியாண்டு மாணவர்கள் இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் தலைமுறை மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒற்றை பெற்றோர் குடும்ப மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர். பயிற்சிக் காலம் முழுவதும் மாணவர்கள் மிகுந்த ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.
நிறைவு விழாவிற்கு வி.பூர்ணபிரகாஷ், துணை பொது மேலாளர், அய்.சி.டி. அகாடமி, தமிழ்நாடு அரசு வழங்கி மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டியதுடன், அவர்கள் பெற்ற புதிய திறன்களை எதிர்கால தொழில் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுதினார். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு பேராசிரியர் இரா.மல்லிகா, இணை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.
இப்பயிற்சி மாணவர்களின் தொழில்துறை தயார் தன்மையை குறிப்பிடத்தக்க அளவில் மேம் பாட்டுத்திறத்துடன், கல்வி-தொழில் துறை ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இத்தகையை பயனுள்ள முயற்சிக்கு முழுமையான ஆதரவு வழங்கிய இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் அய்.சி.டி. அகாடமி ஆகியவற்றிற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டு, எதிர்காலத்திலும் இதுபோன்ற தாக்கமுள்ள திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் உறுதிமொழியை வெளிப்படுத்தியது.
