2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (மன்ரேகா) இந்திய கிராமப்புறங்களின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை உறுதி அளிப்பதன் மூலம் ஏழைத் தொழிலாளர்களுக்கு உரிமை அடிப்படையிலான வேலைவாய்ப்பை வழங்கிய இத்திட்டம், கரோனா தொற்றுக்காலத்தில் பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் செயல்பட்டது. ஆனால், இப்போது ஒன்றிய அரசு இத்திட்டத்தை முற்றிலுமாக மாற்றி, ‘விக்சித் பாரத் கேரன்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)’ (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய மசோதாவை டிசம்பர் 16, 2025 அன்று மக்களவையில் தாக்கல் செய்து இரவோடிரவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் விட்டது. இந்த மசோதா மன்ரேகாவை நீக்கி, கிராமப்புற வேலை உறுதியின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பெயர் மாற்றமும், காந்தி வெறுப்பும்!
மசோதாவின் முதல் பிரச்சினை தொடங்கியது பெயர் மாற்றத்தில்தான்! மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, ‘ராம்’ என்ற சொல்லைச் சேர்த்து விபி-ஜி ராம் ஜி என பெயரிடப்பட்டுள்ளது. காந்தியின் கிராம சுயராஜ்ய கனவின் வடிவமாக விளங்கிய மன்ரேகாவில் இருந்து காந்தியின் பெயரை அகற்றுவது, பிரதமர் மோடியின் காந்தி கொள்கைகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் இதை “காந்திக்கு நேர்ந்துள்ள கொடுமை” என்று அழைத்து நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளனர். பெயர் மாற்றம் மட்டுமல்ல, இது மன்ரேகாவின் உயிரையே தாக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உரிமை அடிப்படையில் இருந்து நிபந்தனை அடிப்படைக்கு மாற்றம்
மன்ரேகாவின் மிக முக்கிய அம்சம், வேலை கோரும் எந்த கிராமப்புற தொழிலாளிக்கும் உரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பதே! வேலை கிடைக்காவிட்டால் வேலையின்மை ‘படி’ வழங்கப்படும். ஆனால், புதிய மசோதாவில் இது முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசே எந்த பகுதிகளில் வேலை வழங்கப்படும் என தீர்மானிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டுள்ளது. வேலை வழங்கப்படும் கிராமங்களை ஒன்றிய அரசு அறிவிக்கும் என பிரிவு 5 கூறுகிறது. இதனால், தொழிலாளர்களின் “வேலை கோரும் உரிமை” பறிக்கப்படுகிறது. வேலை இருந்தால் தருவோம் என்ற நிபந்தனையே இதன் அடிப்படையாக மாற்றப்பட்டுள்ளது. இது ஏழைகளின் உரிமையை மய்யப்படுத்திய கட்டுப்பாட்டுக் கருவியாக மாற்றுகிறது.
நிதிச் சுமை மாநிலங்களுக்கு தள்ளப்படுதல்
மன்ரேகாவில் தொழிலாளர் ஊதியத்தை முழுமையாக ஒன்றிய அரசே ஏற்றது. ஆனால், விபி-ஜி ராம் ஜி மசோதாவில் நிதிப் பகிர்வு 60:40 ஆக மாற்றப்பட்டுள்ளது – ஒன்றியம் 60%, மாநிலங்கள் 40%. இதனால் மாநிலங்களுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.50,000 கோடி சுமை ஏற்படும். கேரளா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் ரூ.2,000-2,500 கோடி கூடுதல் செலவு. இது நிதிச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களுக்கு திருட்டுத்தனமாக சுமையைத் தள்ளும் செயல் என்று விமர்சிக்கப்படுகிறது. ஏழை மாநிலங்கள் இதை ஏற்க முடியாமல் திட்டத்தைக் குறைத்து அமல்படுத்த நேரிடும்.
வேலை நாட்கள் உயர்வு: பெயரளவில் மட்டுமா?
மசோதாவில் வேலை நாட்கள் 100 இலிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு பெருமை பேசுகிறது. ஆனால், வேலை எங்கு, எப்போது, எத்தனை நாட்கள் வழங்கப்படும் என்பதை ஒன்றிய அரசே தீர்மானிக்கும். மேலும், வேளாண் பருவகாலங்களில் (அறுவடை, விதைப்பு) 60 நாட்கள் வரை திட்டத்தை நிறுத்திவைக்க அனுமதி உள்ளது. இது விவசாயிகளுக்கு ஆட்கள் கிடைக்க உதவும் என்று அரசு கூறினாலும், தொழிலாளர்களின் கூலி பேர உரிமையை பறிக்கிறது. அறுவடை காலத்தில் தொழிலாளர்கள் நில உரிமையாளர்களிடம் பேரம் பேசி உயர் கூலி பெற முடியும். ஆனால், இந்த நிறுத்தம் அவர்களை குறைந்த கூலிக்கு கட்டாயப்படுத்தும். இது பழைய ஜமீன்தார் அடிமைத்தனத்தை மீட்டெடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
டிஜிட்டல் தடைகளும், தொழிலாளர் நீக்கமும்!
ஏற்கெனவே கேஒய்சி கட்டாயம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நீக்கப்பட்டனர். புதிய மசோதாவில் வருகைப் பதிவு, கூலி வழங்கல் ஆகியவற்றை ஏஅய் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தத் திட்டம். இது தொழில்நுட்ப வசதி இல்லாத கடைக்கோடி கிராமங்களில் திட்டத்தை அழிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. புலம்பெயர்வு அதிகரிக்கும், வேலையின்மை நெருக்கடி தீவிரமாகும்.
கிராமப்புற பொருளாதாரத்தின்
சமநிலை சீர்குலையும்
விபி-ஜி ராம் ஜி மசோதா மன்ரேகாவின் உரிமை அடிப்படையை அழித்து, மய்யப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. இது காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, ஏழை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. எதிர்க்கட்சிகளும் தொழிலாளர் அமைப்புகளும் மசோதாவை திரும்பப் பெறக் கோரியுள்ளனர். இது நிறைவேற்றப்பட்டால், இரு தசாப்தங்களாக நிலவிய சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு சீர்குலைந்து, கிராமப்புற பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும். அரசியல் வல்லுநர்கள் இதை “ஆக்கபூர்வமற்ற மாற்றம்” என்றே கணிக்கின்றனர். ஏழைகளின் உரிமைகளை பாதுகாக்க இந்த மசோதாவை எதிர்க்க வேண்டியது அவசியம்.
