சென்னை, டிச.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.12.2025 அன்று ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ‘ஹஜ்’ அசோசியேசன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘பிரசிடெண்ட்’ அபூபக்கர் மக்காவில் இருந்து வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: “சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனை நனவாக்கும் வகையில் விமான நிலையம் அருகில் ‘ஹஜ்’ இல்லம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது. லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் சார்பில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
