சென்னை, டிச. 16- புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் கேட்டுக்கொண்டார்.
குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, ‘மயக்கப்பொருள் இல்லாத பள்ளிகள் மண்டலம்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் நேற்று (15.12.2025) தொடங்கி வைத்தார்.
புகையிலை ஒழிப்பு
அரசுப் பள்ளி வளாகம் அருகே ‘புகையிலை இல்லாத பகுதி’ என்ற பதாகைகளை வைத்து, அருகில் செடிகளை நட்டு, காவல் ஆணையர் மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், காவல் ஆணையர் அபின் தினேஷ் பள்ளி மாணவர்களிடையே புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், “தற்போது நடைபெறக்கூடிய இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. மாணவர்களை வைத்துதான் தமிழ்நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி தான், தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில், இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தப் பள்ளியில் மட்டுமல்லாமல், தாம்பரம் பகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காவல்துறையின் சார்பில் நடத்தப்படும்.
இந்த அரசுப் பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை முழுவதும் பதாகைகள் வைத்து, அந்த 100 மீட்டர் பகுதியில் யாரும் புகையிலை போன்ற பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் இதற்குத் தங்களது பங்களிப்பை அளித்தால், இதுபோன்று நூறு மடங்கு அதிகமாக விழிப்புணர்வை மேற்கொள்ளலாம்,” என்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் மற்றும் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்
அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மன்னிப்பு கேட்டார்
சென்னை, டிச. 16- டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அவரிடமே திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் தடை விதித்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அமலாக்கத் துறை மேல்முறையீட்டு அதிகாரி விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் தனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறி ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
அமலாக்கத் துறை உதவி இயக்குநர் மன்னிப்பு
அதன்படி, இந்த வழக்கு நேற்று (15.12.2025) (குறிப்பிட்ட தேதி) இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ்குமார் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், அவர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
பிற அதிகாரிகளுக்கு உத்தரவு
அதேபோல, இந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு ஆணையத் தலைவரான பிரதீப் குமார் உபாத்யாயா மற்றும் நிர்வாகப் பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேற்று ஆஜராகவில்லை. அவர்களுக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, நஸ்ரின் சித்திக் வரும் ஜனவரி 19 அன்று ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருந்து சீட்டுகளை மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும்
மருத்துவ ஆணையம் உத்தரவு
புதுடில்லி, டிச. 16- நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும், மருந்துச் சீட்டு நடைமுறைகளைக் கண்காணிக்கச் சிறப்புத் துணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
அந்தக் குழுவானது, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கும், மருந்துப் பரிந்துரைகள் தெளிவாக உள்ளதா என்பதை மதிப்பிடும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், அதனைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை குழு மேற்கொள்ள வேண்டும்.
துணைக் குழுவின் இந்தப் பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்துவதுடன், அதனைத் தேசிய மருத்துவ ஆணையம் கேட்கும்போது சமர்ப்பிக்கும் வகையில், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரிய எழுத்துகளில் புரியும்படி மூலப் பெயருடன் (Generic) கூடிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது கட்டாயம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
