திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில்,”பெரியார் உலக” நிதி ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆயிரம் நெருக்கடிகள் இருந்தாலும்
உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசு!
திண்டிவனம், டிச.16 ‘‘ இதே திண்டிவனத்தில் இதே காந்தி சிலை அருகில் அன்னை மணியம்மையார் 1976 ஜன. 31 அன்று பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் 356 பிரிவைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசை கலைத்தார்கள். நானும் இங்கே இருந்தேன். என்னை கைது செய்து கொண்டு போனார்கள். அதற்குப் பிறகு இன்றைய ஒப்பற்ற முதலமைச்சரையும் கைது செய்து, நான் இருந்த சிறையில் தள்ளினார்கள். அப்போது அவரைப் பிடித்துத் தூக்கிய கை இன்றைக்கும் விடாமல் இருக்கிறது” என்று திண்டிவனம் பிரச்சாரக் கூட்டத்தில் கழகத் தலைவர் அரிய வரலாற்று நிகழ்வினைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில் காந்தியார் திடல் அருகில் நேற்று (15.12.2025) மாலை 5 மணி யளவில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் தலைமை ஏற்று சிறப்பிக்க, மாவட்டக் காப்பாளர் செ.பரந்தாமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார். கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி, மேனாள் அமைச்சர், தி.மு.க. விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தி.மு.க.நகர செயலாளர் எம்.கண்ணன், தி.மு.க. மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் ஆர்.மாசிலாமணி, திண்டிவனம் நகர் மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், திண்டிவனம் நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, தி.மு.க. ஒலக்கூர் ஒன்றியச் செயலாளர் ராஜாராம், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சு.மலைச்சாமி, சி.பி.எம். தொழிற்சங்க மாவட்டத் தலைவர் அ.இன்பஒளி, சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், சி.பி.எம். வட்டச் செயலாளர் அ. கண்ணதாசன், ம.தி.மு.க.நகர செயலாளர் ஜெ.பாஸ்கரன், எஸ்.டி.பி.அய்.மாவட்டச் செயலாளர் சையது ஹசைன், தி.மு.க. மயிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் செழியன், வி.சி.க. விழுப்புரம் மண்டலச் செயலாளர் தி.திலீபன், வி.சி.க. மேனாள் மாவட்டச் செயலாளர் மு.ஏ.சேகர் ஆகியோர் முன்னிலையேற்று சிறப்பித்தனர்.
‘பெரியார் உலக’ம் நிதி ரூ.10 லட்சம்!
தொடர்ந்து, பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்வு தொடங்கியது. மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் நிதி அளித்தவர்கள் பட்டியலை வாசித்தார். உரியவர்கள் மேடையேறி வந்து கழகத் தலைவரிடம் காசோலையை வழங்கி மகிழ்ந்தனர். பின்னர், மாவட்டக் கழகத்தின் சார்பில் கழகத் தலைவருக்கும், முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. தி.மு.க.வின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் மேனாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பெரியார் உலகத்திற்கு தனிப்பட்ட முறையில் நிதி அளித்ததோடு, ‘‘திண்டிவனம், மயிலம், ஒலக்கூர் ஆகிய சுற்றுவட்டாரத்தில் இருக்கும் உணர்வுள்ள தோழர்களிடம் பெரியார் உலகத்திற்கு நிதியைத் திரட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என்று அறிவிப்பு செய்தார். ‘பெரியார் உலக’ம் நிதி ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது. கழகத் தலைவருடன் திண்டிவனம் மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையின் தொடக்கத்தில், ”நமது தோழர்கள் யாரும் அதானி, அம்பானிகளோ, டாட்டா, பிர்லாக்களோ கிடையாது. எளிய தோழர்கள் உணர்வுடன் நிதி அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றி” என்று நன்றிப்பெருக்கை ‘காணிக்கை’ ஆக்கினார். அதைத் தொடர்ந்து பெரியார் உலகத்தின் முக்கியத்துவத்தையும், தேவையையும் சுருக்கமாக விவரித்தார். அதன் பிறகு, திண்டிவனம் மாவட்டத்தில் வேர்களாக இருந்த, புலவர் ஆதிகேசவன், தோழர் பழனி, பகுத்தறிவாளர் புலவர் ஆசிரியர் கந்தசாமி, தோழர் மணி, பெத்தண்ணன், கோதண்டம், பாலசுப்பிரமணியம் என்று பலரையும் நினைவு கூர்ந்து, ‘‘அண்மையில் மறைந்த தோழர் தாஸ்” வரை என்று கூறிவிட்டு, “அவர் மறையவில்லை. காரணம் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொள்கை யுடன் இருக்கின்றனர்” திண்டிவனம் பகுதியின் சுயமரியாதைச் சுடரொளிக ளின் நினைவை நிறைவு செய்தார்.
அன்றைக்குத் தாங்கிப் பிடித்த கை
இன்றைக்கும் விடவில்லை!
தொடர்ந்து அவர், “இதே காந்தி சிலை அருகில் 1976 ஜனவரி 31 அன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அன்னை மணியம்மையார் பேசிக்கொண்டிருந்தார். நானும் இருந்தேன். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, 356 பிரிவைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசைக் கலைத்தார்கள். நான் கைது செய்யப்பட்டேன். அதன் பிறகு சில நாள்களில் நான் இருந்த சிறையில், அடிபட்டு ஒருவர் உள்ளே தள்ளப்பட்டார். அவர் என் மீதுதான் விழுந்தார். தூக்கிப் பிடித்தேன். அவர் தான் இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அன்றைக்குப் பிடித்த கை இன்றைக்கும் விடவில்லை” என்று திண்டிவனம் காந்தித் திடலில் திராவிடர் கழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு அரிய வரலாற்றுச் சம்பவத்தை பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டு, திராவிடர் இயக்கம் இன்றும் நின்று நிலைத்து பயணித்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அவர், அன்றைக்கு இருந்த உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா, ‘தி.க., தி.மு.க. இரண்டும் இனி இருக்காது’ என்று பேசியதையும், இன்றைய உள்துறை அமைச்சர், குஜராத் அரசு விழாவில், ‘தி.மு.க.வை துடைத்து எறிந்துவிடுவோம்’ என்று பேசியதையும் ஒப்பிட்டுக் காட்டி விட்டு, “திராவிடர் இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது” என்று மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே கம்பீரமாகக் குறிப்பிட்டார்.
காந்தியாரைக் கொலை செய்தவருக்கு பயிற்சி அளித்த இயக்கம் தானே ஆர்.எஸ்.எஸ்.?
மேலும் அவர், திராவிடர் இயக்கத்திற்கு எதிராக இருக்கும் அமைப்பான, ‘‘ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை என்ன?” என்றொரு கேள்வியைக் கேட்டு, “அன்பை, அகிம்சையை மட்டுமே போதித்த காந்தியாரைக் கொலை செய்தவருக்கு பயிற்சி அளித்த இயக்கம் தானே ஆர்.எஸ்.எஸ்.?” ஒரு கேள்வியையே முன் சொன்ன கேள்விக்குப் பதிலாக்கினார். தொடர்ந்து, திராவிடர் இயக்கத்தின் கொள்கையான, ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதைச் சொல்லி விட்டு, “ஆகவே, இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் என்பது இரு கட்சிகளுக்கிடையில் நடக்கும் தேர்தலாக நீங்கள் கருத வேண்டாம்” என்றும், “இந்தத் தேர்தல் இந்திய அரசியல் சட்டத்திற்கும், மனுதர்மத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம்” என்றும் ஒரு ஆழமான கருத்தை மக்கள் முன் எடுத்து வைத்தார். மேலும் அவர், “சுயமரியாதை இயக்கத்தின் கோட்பாடாக தந்தை பெரியார் அறிவித்த, அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்வதால்தான் தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்” என்று தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்பவர்களின், மக்கள் விரோத சூழ்ச்சியை பச்சையாக அம்பலப்படுத்தினார். தொடர்ந்து அவர், தி.மு.க.வை ஒழிப்பதற்கு,
சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்ற திரிசூலம் உள்பட, நிதித்துறை மற்றும் நீதித்துறை, ஆளுநர் மூலம் என்று என்னென்ன நெருக்கடிகள் தரப்படுகின்றன என்பதை வரிசையாகப் பட்டியலிட்டு, “ஆயிரம் நெருக்கடிகள் கொடுத்தாலும் அதையும் தாண்டி உலகத்திற்கே வழிகாட்டுகிறது ‘திராவிட மாடல்’ அரசு” என்று பிரகடனம் போல, கம்பீரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் குறிப்பிட்டார். மக்கள் கைதட்டல்கள் மூலம் அந்தக் கருத்துக்கு நூற்றுக்கு நூறு ஏற்பளித்தார்கள்.
மதவெறி மாய்ப்போம்!
மனிதநேயம் காப்போம்!!
மேலும் அவர், “ராஜாஜி கொண்டு வந்த ’குலக்கல்வித் திட்டம்’ தடுக்கப்படாமல் இருந்திருந்தால், எம்.ஜி.ஆர்.கொண்டு வந்த, ’வருமான வரம்பு ஆணை’ திரும்பப் பெறப்படாமல் இருந்திருந்தால் நமது நிலை என்ன? நமது சந்ததிகளின் நிலை என்ன? இன்றைக்கு விளக்கு ஏற்றுவது முக்கியமா? வேலைவாய்ப்பு முக்கியமா? மதவெறி தேவையா? கல்வி, மருத்துவம் தேவையா?” என்று கேள்விகளை அடுக்கி, ”விழிப்புணர்வுடன் இருங்கள். வாக்குரிமையை உறுதி செய்யுங்கள். ‘திராவிட மாடல்’ அரசை ஆதரியுங்கள். எங்களுக்காக அல்ல, உங்களுக்காக! உங்கள் சந்ததிகளுக்காக! மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!” என்று முழங்கி தனது உரையை நிறைவு செய்தார். பிறகு தோழர்களிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு, தமது பரப்புரைப் படையுடன் புதுச்சேரி நோக்கி பயணப்பட்டார்.
பங்கேற்றோர்
நிகழ்வின் இறுதியில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் நன்றி கூறி நிறைவு செய்தார். திண்டிவனம் கழக மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பா.வில்லவன் கோதை, விழுப்புரம் நகரத் தலைவர் பழனிவேல், ஒலக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், விழுப்புரம் மாவட்ட மகளிரணித் தலைவர் தா.விஜயலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபண்ணா, மாவட்டச் செயலாளர் அரங்க பரணிதரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, மேனாள் நகரச் செயலாளர் ச.பழனிவேல், திண்டிவனம் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.ராதா, மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பெருமாள், திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன், திண்டிவனம் தோழர் ஓவியர் செந்தில், மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.இரமேஷ், தோழர்கள் கே.பாபு, பொ.தேவராஜ், மா.செந்தில், எம்.டி.பாபு, வி.சி.க. தோழர் தி.அ.நசீர் அகமது, எஸ்.டி.பி. உ.சையத் பர்கத் அலி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
