தமிழ்நாடு அரசின் உரிய நடவடிக்கை அவசியம்!

இந்தியத் துணைக் கண்ட பெருநிலப்பரப்பிலிருந்து இராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் பாலத்தில் புதிதாக ஒரு மூடநம்பிக்கை கிளப்பிவிடப்பட்டுள்ளது. அந்த மூடநம்பிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் சூழலையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இராமேஸ்வரம் வரும் பல மாநிலங்களையும் சேர்ந்த ப(க்)தர்கள் பாம்பன் பாலத்திலிருந்து கருப்புத் துணியை, துண்டை, வேட்டியைத் தூக்கிக் கடலில் எறிகிறார்கள்.
இதனால் பாலத்தையொட்டிய கடல்பரப்பைக் கடக்கும் மீன்பிடிப் படகுகளில் (வல்லங்களில்) ப்ரொப்பெல்லர் விசிறியில் சிக்கி, அவற்றை உடைத்துவிடுகின்றன அல்லது பழுதாக்கி விடுகின்றன.
மீனவர்கள் போடும் வலையில் சிக்கி வலைகளைச் சேதப்படுத்துகிறது.
பாக் நீரிணையையொட்டிய மன்னார் வளைகுடா தேசிய கடல்சாரி உயிரியல் பூங்காவாக உள்ள இந்தக் கடல்பரப்பு பல்லுயிர்ச் சூழலுக்குப் புகழ்பெற்ற இடம். இந்தத் துணிக் கழிவுகள் சேரச் சேர, சூழலியலுக்கும் ஆபத்தாகி, அங்குள்ள அரிய உயிரினங்கள் அழிய நேரிடும் பேராபத்தும் உள்ளது.
யார் தொடங்கினார்? என்ன பயன்? என்று எதுவும் தெரியாது என்றாலும், இராமேஸ்வரம் வருவோரெல்லாம் துண்டு, வேட்டியைக் கடலில் வீசினால் நிலைமை என்னாகும்? இப்போதே நிலைமை மோசமாக இருப்பதைப் படத்தில் பார்த்தால் தெரியும். ஏற்கெனவே ‘இராமேஸ்வரம் கடலில் குளித்துப் பாவத்தைப் போக்குகிறோம்’ என்று கடலைக் குப்பையாக்கி, கழிவுக் கூடமாக்கி வைத்திருக்கிறார்கள் இந்நிலையில், இந்தப் புதியமூடநம்பிக்கை நேரடியாக மீனவர் வாழ்வைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து அப் பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த மூடத் தனத்தைத் தடுத்து நிறுத்தி, மீறுவோர் மீது கடும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், மீனவர் வாழ்க்கையும், கடல்சார் பல்லுயிர்ச் சூழலும் பெரிதும் பாதிக்கப்படும்!
கவனம்! கவனம்! கவனம்!!
