« நீரிழிவில் சர்க்கரை அளவு உயர்வு மட்டுமே பிரச்சினைக்குரியது அல்ல. ரத்தச் சர்க்கரை குறையும் (Low sugar) என்பதும் கவனமாக கையாளப்பட வேண்டும்.
« தாழ்நிலைச் சர்க்கரை என்று சொல்லப்படும் இந்தப் பிரச்சினை கொண்டவர்களை சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
« சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, அளவுக்கு அதிகமான இன்சுலின் அல்லது நீரிழிவு நோய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, வேலைப்பளு, வலி நிவாரணி மாத்திரைகள், மது அருந்துதல் போன்ற காரணங்களால் சர்க்கரை அளவு குறையலாம்.
« உடலின் சர்க்கரையின் அளவு தோராயமாக 140 mg/dL என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவானது 70 mg/DL என்பதற்கும் கீழே குறைவதையே (Low Sugar) என்கிறோம்.
« இதை மருத்துவ ரீதியாக (Hypoglycemia) என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
« ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது போலவே குறைவதும் அதிக தீமையை விளைவிக்கும்.
« அதிகமான பசி, வியர்வை, பலவீனம், படபடப்பு, நடுக்கம், அமைதியின்மை, எரிச்சல் அல்லது கிடுகிடுப்பு, வாந்தி தலைவலி, பார்வையால் பாதிப்பு, மயக்கம், குழப்பம், வலிப்பு நோய் போன்ற தொல்லைகள் திடீரென்று எற்படுதல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்.
« மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது தெரிந்தால் உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். தாழ்நிலை சர்க்கரைக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
« தாழ்நிலைச் சர்க்கரை தொடர்ந்து நீடித்தால் மூளையை நிரந்தரமாக பாதித்துவிடும். அடிக்கடி இந்நிலை ஏற்பட்டாலும் இது மனநிலையை வெகுவாகப் பாதிக்கும்.
அறிவுரைகள்
« லோ சுகர் என்பதை உணர்ந்தால் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்க வேண்டும். குளுக்கோஸ் அல்லது இனிப்புப் பானங்களையும் உடனே குடிக்கக் கொடுக்கலாம்.
« இதற்கடுத்து மருத்துவமனையில் சேர்த்து மாவுச் சத்துள்ள உணவை உட்கொள்ளச் செய்ய வேண்டும். மருத்துவப் பயனாளி மயக்க நிலையில் இருந்தால் உடனே ஊசியின்மூலம் குளுக்கோசைச் செலுத்த வேண்டும்.
« சர்க்கரை குறைவது பற்றிய எச்சரிக்கையை மருத்துவப் பயனாளி குணமான பிறகு மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
