- அல்ஸைமர் டிமென்சியா
(மறதி நோய்)
டாக்டர் அலாய்ஸ் அல்ஸைமர், ஜெர்மனியைச் சேர்ந்த மனோதத்துவ பேராசிரியர் இந்த நோயை 1907 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார்.
இது முதுமையைத் தாக்கும் ஒரு கொடிய நோயாகும். இந்த நோய் சுமார் 70 – 75 வயதைக் கடந்த முதியவர்க்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. அதிலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
டிமென்சியாவின் அறிகுறிகள் மெதுவாக வெளிப்படுவதால் அதை யாராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது.
இந்த நோயின் தன்மை தீவிரம் அடைய அடைய, ஒருவர் அன்றாடம் செய்யும் வேலைகள் பாதிக்கப்படும். அதாவது, அவர் குளிப்பதற்கும், உடை உடுத்துவதற்கும், சாப்பிடுவதற்கும் மற்றவர் உதவி தேவைப்படும்.
மறதி நோய் சற்று முற்றிய நிலையில், உடன் இருப்பவர் யார், யார், தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் போய்விடும். அவரை அறியாமலேயே சிறுநீர் மற்றும் மலஜலம் வீட்டிலேயே அல்லது எங்கு வேண்டுமானாலும் கழித்துவிடுவார். அவர் ஒரு குழந்தையாக மாறிவிடுவார். கடைசியாக தம்மையே மறந்து ஒரு தாவர வாழ்க்கையை வாழ்வார்கள்.
நோயைக் கண்டறிதல்
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு, தான் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாததால் அவராகவே மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ள இயலாது. கணவன், மனைவி அல்லது உறவினர்கள்தான் அவரை அழைத்து வருவார்கள். மருத்துவப் பயனாளியிடம் என்ன தொந்தரவு என்று கேட்டால், அதற்கு அவர் தரும் பதில் சற்று ஆச்சரியமானதாக இருக்கும். “எனக்கு ஒன்றுமில்லை சார். இவர்கள் தான் என்னை அழைத்து வந்தார்கள். அவர்களையே கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருப்பார்.
ஆகவே, உறவினரிடம் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய முழு விவரத்தையும் பொறுமையாக மருத்துவப் பயனாளிகள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் அவர் உடலை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். டிமென்சியாவுக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முழு இரத்த பரிசோதனை அவசியமாகும். உதாரணம் : தைராய்டு தொல்லை, உதறுவாதம், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொல்லைகள்.
நினைவாற்றலை அறியும் பரிசோதனைகள்
முழுமையான உடல் பரிசோதனைக்குப் பின்பு ஒருவரின் நினைவாற்றலை உளவியல் நிபுணர் மூலம் கீழ்க்கண்ட பரிசோதனைகளை செய்து அறியலாம்.
- கடிகாரம் வரையும் பரிசோதனை
- நினைவாற்றலை அறிய உதவும் பரிசோதனை (MOCCA)
வேறு சில பரிசோதனைகள்
- சி.டி. மூளைப் பகுதி ஸ்கேன்
- எம்.ஆர்.அய். ஸ்கேன்
- பெட் ஸ்கேன்
ரத்த பரிசோதனை மற்றும் மூளையில் எடுக்கும் ஸ்கேன் பரிசோதனை போன்றவற்றின் மூலம் ஒருவருக்கு இந்த நோய் இருப்பதை சுமார் 80 சதவீதமே உறுதி செய்திட முடியும்.
சிகிச்சை முறைகள்
டிமென்சியா வருவதற்குரிய காரணம் ஏதாவது கண்டறியப்பட்டால், அதற்கு தகுந்த சிகிச்சை அளித்தால், ஞாபக மறதி பிரச்சினையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உதாரணங்கள் :
- டிமென்சியாவுடன் மனச்சோர்வும் உள்ளவர்களுக்கு, அதற்கு தகுந்த சிகிச்சை அளித்தால் டிமென்சியாவிலிருந்து சற்று குணம் அடைவார்கள்.
- மது அருந்துவதை நிறுத்தினால் நினைவாற்றல் திரும்பும்.
- சில மருந்துகள், தூக்க மாத்திரை, மனநோய்க்கு கொடுக்கும் மாத்திரை ஆகியவற்றை குறைப்பது அல்லது நிறுத்துவதின் மூலம் நினைவாற்றலை மீண்டும் பெறலாம்.
- தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்து அதனால் மறதி ஏற்பட்டால், தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் மறதியில் இருந்து மீண்டு வரலாம்.
- வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், அதை ஊசி மருந்து மூலம் செலுத்தி மறதி நோயை குணப்படுத்த முடியும்.
- மூளையில் ரத்தக் கட்டி அல்லது வேறு ஏதாவது கட்டி இருப்பின் அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
மருந்துகள் (அல்ஸைமர் டிமென்சியா)
இந்த (Donepezil, Rivastigmine, Galantamine, Memantine) மாத்திரைகள் மூலம், ஆரம்ப நிலையிலுள்ள டிமென்சியா மருத்துவப் பயனாளிகளுக்கு மறதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே சமயம் இந்த மருந்துகளால் குமட்டல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, மனக்குழப்பம் போன்ற பக்கவிளைவுகளும் வரலாம்.
இந்த மருந்துகள் நினைவாற்றலை அதிகரிப்பதைவிட ஒருவருடைய அன்றாட வேலைத்திறனை அதிகரிக்க கட்டாயம் உதவும். இந்த மருந்துகள் எல்லாம் நோய் அதிகமாவதைத் தடுக்குமே தவிர முழுவதுமாக குணப்படுத்த முடியாது.
முடிவாக
டிமென்சியாவினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பழக்கத்துக்கு ஒரு குழந்தையைப் போல! அவர்களுக்கு குழந்தைக்குரிய அன்பையும், பெரியவருக்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
