மதுரை, டிச.14– திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் தாக்கீது (நோட்டீஸ்) கொடுத்தனர். இதில் மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி.க்களும் அடங்குவர்.
இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக உத்தவ் சிவசேனாவை கடுமையாகத் தாக்கியதுடன் அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு விட்டதாகக் கூறினார்.
இதுபற்றி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு இந்துத்வா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது. நமது சொந்த நாட்டின் தேசிய கீதம் குறித்து எப்படி விவாதம் நடத்த முடியும். ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஏன் ‘வந்தே மாதர’த்தை நினைவுகூருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு ‘வந்தே மாதரம்’ மீதான காதல் ஒருநாள் மட்டும்தான்.
மகாராட்டிரத்தில் தினமும் ஏதாவது ஓர் அமைச்சரின் ஊழல் வெளிவருகிறது. ஆளும் கட்சி தலைவர்கள் பணக்கட்டுகளுடன் இருக்கும் காட்சிப் பதிவுகள் வெளியாகின்றன. இருப்பினும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கும் ஒரு “கவசப் பாதுகாப்பு” இலாகாவை முதலமைச்சர் தொடங்கி அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
